June 15, 2012

குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6

வணக்கம் அன்பின் நண்பர்களே.மழலை சமுதாயம் கோலோச்சுகின்ற சமயம் தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் குழந்தைகளின் பங்கேற்பு அபரிமிதமாகவே உள்ளது.விளையாட்டு மற்றும் ஏனைய துறைகளிலும் கூட அவர்களின் திறமைகள் மற்றும் ஆர்வங்கள் எல்லாமே வியப்பைத்தருகின்றன.எனினும் நமது நாட்டில் எந்த அளவிற்க்கு மழலை சமுதாயம் முன்னேற்றம் கண்டுள்ளதோ அந்த அளவிற்க்கு பின்னடைவும் கண்டுவருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.இதனை அதிகரித்து வரும் குழந்தைகள் கடத்தல்,நரபலி,ஆசிரியர் மாணவர் உறவு முறிவு போன்றவற்றில் இருந்து நன்கு உணரமுடியும்.தவறான உறவுகளில் பிறக்கும் குழந்தைகளிலிருந்து பெண் சிசு கொலைகள் வரை இன்று சர்வ சாதரணமாகவே சமுதாயத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அல்லது கேட்டுக் கொண்டிருக்கும் அன்றாடச் செய்திகளாகிவிட்டன.குழந்தைகளின் வாழ்க்கை ஆரம்பத்திலிருந்தே நெருக்கடிகளுக்கும் பயமுறுத்தல்களுக்கும் ஒடுங்கி வாழும்நிலைக்கு தள்ளப்பட்டு விடுவதால் அவர்களின் வளர்ச்சியில் தீவிரவாதமும் வன்முறையும் கூடவே வளர்ந்துவிடுகிறது.இதனை தவிர்க்கவே இன்றைய தலைமுறை பெற்றோர்கள் ஒவ்வொருவரும் குழந்தை வளர்ப்பினைப் பற்றிய சூட்சுமங்களை கற்றுக்கொள்வது மிகவும் அவசியமாகிறது.இன்றைய பதிவில் குழந்தைகளின் ஆறுவயது முதல் பன்னிரண்டு வயது வரை பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பற்றி விரிவாக அலசுவோம்.

இதன் முந்தைய பதிவுகளை படிக்க...ஆறு வயது முதன் முதலில் வெளி உலகம்
 • ஆறு வயதிற்குப் பின்னர்தான் குழந்தைகள் பெற்றோரை எந்த நேரமும் தேடிக் கொண்டிராமல் சுதந்திரமாக வாழ ஆரம்பிக்கின்றனர். இந்த வயதில் குழந்தைகளைக் கட்டுப்படுத்துவது அவர்களின் பொறுமையை இழக்கச் செய்துவிடும்.
 • பெற்றோர்களின் நடை, உடை, பாவனைகள் அப்படியே தாங்களும் செய்துகொள்ள விரும்பிய குழந்தைகள் இப்பொழுது அவற்றில் தங்களுக்குப் பிடித்தமானவைகளை மாத்திரம் வைத்துக் கொண்டு மற்றவைகளை விட்டுவிடவும் செய்கின்றன.உதாரணமாக பிறர் தங்களை நெருங்கி வந்து முத்தம் கொடுத்தால் அது அவர்களுக்குப் பிடிப்பதில்லை.
 • இந்த வயதில் புத்தகம் படித்தல், வரைதல், கணக்குப் போடுதல், பாட்டுப்பாடுதல், மெஷின்களை கழற்றி மாட்டுதல், இயற்கை வள ஆராய்ச்சி போன்றவற்றில் அவர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள்.
 • பெற்றோரோ, மற்றோரோ அவர்களை ஒரு பொம்மை போல் வைத்துக் கொண்டு கொஞ்சுவதை அவர்கள் விரும்புவதில்லை. தாங்களும் தன்மதிப்புடன் வாழும் இளைஞர்கள் என்பதை உணருகிறார்கள். மற்றவர்களும், தங்களை அவ்வாறே நடத்த வேண்டுமென்று எண்ணுகிறார்கள்.
 • 3-5 வயதுக் குழந்தைகள் எதைக் கற்றுக் கொடுத்தாலும் அதைத் தவறின்றி சரிவரச் செய்ய மிகவும் ஆர்வம் காட்டுவார்கள். உதாரணமாக பல் தேய்க்க, குளிக்க உடை போட்டுக் கொள்ள, உட்கார்ந்து அமைதியுடன் சாப்பிடுவதில், தலைவாரிக் கொள்வதில், கைகளைக் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்வதில் மிகவும் அக்கறை காட்டுவார்கள். ஆறு வயதில் மேற்கூறியவற்றை சரியாக செய்து கொள்வதில் அக்கறை காட்ட மாட்டார்கள். பெற்றோர் என்ன சொன்னாலும் காதில் வாங்க மாட்டார்கள்.
 • இதைக் கண்டு சகிக்காமல் பெற்றோர் குழந்தையை அடிக்கவோ, அதட்டவோ, இதைச் செய் இப்படிச் செய் என்று அதிகாரமாகப் பேசுவதோ கூடாது. குழந்தை தவறு செய்தால் அதனிடம் சாதாரணமாகப் பேசுவதுபோல் இவ்வாறு நீ செய்வது சரியில்லை என்பதை மட்டும் தெரிவித்துவிட்டு சென்றுவிட வேண்டும். அத்துடன் குழந்தையிடம் சிறிது கண்டிப்புடனும் நடந்து அவனைத் திருத்திவிட வேண்டும். சரிவர செய்துவிட்டால் குழந்தையைப் பாராட்டி ஒரு சிறு பரிசும்கூட அளிக்கலாம். நாளடைவில் குழந்தை தன் தவறுகளைப் புரிந்து கொண்டு தானே நிறுத்திவிடுவான்.

ஏழு வயது முதல் பன்னிரண்டு வயது வரை..
 • ஏழு வயதிற்கு மேல் கற்பனையில் ரயில் ஓட்டுவதும், வீடு கட்டுவதும், பறக்க விடுவதும், கால்பந்து, ஹாக்கி, சடுகுடு, கிரிக்கெட், கோலி விளையாட்டு, கோலாட்டம், கும்மியாட்டம், பரத நாட்டியம் போன்றவற்றில் ஆர்வம் காட்டுவார்கள். கேரம், செஸ், சீட்டாட்டம் போன்றவற்றிலும் ஆர்வம் காட்டக் கூடும். விதிகளைத் தெரிந்து கொண்டால் அவற்றை மிகவும் கண்டிப் புடனும் கடைப்பிடிப்பார்கள்.
 • இந்த வயதில் குழந்தைகள் தங்கள் உடைகளை புத்தகங்களை இதர சாமான்களைப் பத்திரமாகவும், சுத்தமாகவும், அடுக்கியும் வைத்துக் கொள்ள ஆசைப் படுவார்கள். ஒரு நாள் சுத்தமாக வைத்துக் கொண்டாலும் மறுநாளே அவற்றைக் கலைத்தும் திரும்பவும் சாமான்களை இங்குமங்காக போட்டு விடக் கூடும். தங்கள் பொருட்களை நன்கு வைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் இருந்துகொண்டு தான் இருக்கும்.
 • சினிமாவிலோ, தொலைக் காட்சியிலோ, கொடூரமான காட்சிகளைப் பார்ப்பது தவிர்க்கப்பட வேண்டும். ( இன்றைய காலகட்டத்தில் இது கொஞ்சம் சிரமம்தான் என்றாலும் முடிந்த வரை தவிர்ப்பது நல்லது )கொலை செய்வது, துன்புறுத்துவது, திருடுவது போன்ற கொடூரக்காட்சிகள் குழந்தைகளின் மனதைக் கெடுத்து விடக் கூடும். குழந்தைகளுக்கென்று அறிவையும், ஆற்றலையும் வளர்க்கக்கூடிய சினிமாக்களோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோ அதிகம் கிடையாது. விரும்பத்தகாத பல காட்சி களையும் குழந்தைகள் பார்க்க நேரிடுகிறது. இதனால் அவர்களையறியாமல் அவர்களின் காட்சிகளையும் கூட குழந்தைகள் பார்க்க நேரிடுகிறது. இதனால் அவர்களின் மனம் உள்ளூர கலக்கமடையச் செய்துவிடுகிறது.
 • 12 வயது வரை அவர்கள் பேச்சுப்போட்டி, படம் வரைதல் போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி, தையல், எம்பிராய்டரி, ஸ்டாம்ப் சேர்ப்பது நாணயங்கள் கற்கள் சேர்ப்பது போன்றவற்றைத் தங்கள் பொழுதுபோக்காக விரும்பக்கூடும்.
 • குறிப்பிட்ட நேரங்களில் சிறுவர்களுக்கென்று வரும் காட்சிகள் மட்டுமே தொலைக்காட்சியில் குழந்தைகள் பார்ப்பது என்று முறைப்படுத்திக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். மணிக்கணக்கில் தொலைக்காட்சியின் முன் உட்காருவதை நீங்களும் குழந்தையும் நிறுத்த வேண்டும்.
 • நல்ல கருத்துள்ள புத்தகங்களை அவர்களுக்கு வாங்கிக் கொடுப்பது நன்மை தரும். குழந்தைக்கு நிறைய புத்தகங்களை இந்த வயதில் படிக்க வேண்டு மென்ற ஆர்வத்தை ஊட்டுங்கள். பெரியோர்கள், தலைவர்கள், வீரர்கள் போன்றோரின் வாழ்க்கை வரலாறுகளையும் அவர்கள் செய்த சேவைகளையும் நிறைய படிக்கச் செய்யவும்.
 • சிறு குழந்தைகள் எந்தப் பொருளைக் கண்டாலும் அது தன்னுடையது இல்லை என்றாலும் தானே வேகமாகச் சென்று எடுத்துக் கொள்வார்கள். இது திருட்டாகாது. உண்மையில் எது தங்களுக்குச் சொந்தம், எது மற்றவர்களுக்குச் சொந்தம் என்றெல்லாம் அவர்களுக்குத் தெரிந்து கொள்ள இயலாது. அவர்களை திட்டியோ அவர்களிடமிருந்து பொருட்களைப் பறித்தோ மனதைக் களங்கப்படுத்தக் கூடாது.. நீ சமத்துப்பிள்ளை அவர் பொம்மையை நீயே கொடுத்துவிடுவாய் என்று சொல்லி அவளையும் இணங்க வைத்து பொம்மையையும் அவளே விரும்பிக் கொடுத்துவிடச் செய்யவும்.
 • ஒரு குழந்தை திருடியது பெற்றோருக்கோ, ஆசிரியருக்கோ தெரிந்துவிட்டால் அவன் மேல் மிகுந்த கோபம் கொள்கின்றனர். உடன் அக்குழந்தை மேல் பாய்ந்து அவனிடமிருந்து பொருளை மீட்கவும் அவனை அவமானப்படுத்தவும் முனைந்து விடுகின்றனர்.
 • குழந்தை திருடிவிட்டால் அந்தப் பொருளைத் தானே சென்று திருப்பிக் கொடுத்துவிட்டு வரச் செய்யுங்கள். குழந்தையை அவமானப்பபடுத்துவதைக் கூடுமானவரை தடுத்து விடுங்கள். குழந்தை தானாகவே தன் தவற்றைஉணர்ந்து திருத்திக் கொள்ள வகை செய்யுங்கள்.
வாசகர்கள்,நண்பர்கள்,பின் தொடரும் நண்பர்கள்,ஆதரவளிக்கும் அனைத்து நல் இதயங்களுக்கும் எனது இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.       (@ ஜுன் 17 ஞாயிறு )நண்பர்களே இன்னும் வளருவோம்...

பதிவினைப் பற்றிய தங்களது எண்ணங்களை மறக்காமல் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால தலைமுறைக்காக..

Cuteparents ல் இன்றைய பதிவு..

Important Role Of A Father

மேலும் வாசிக்க

6/15/2012 by Cute Parents · 29

;