February 29, 2012

ஆங்கில அறிவை வளர்க்க டிப்ஸ்

வணக்கம் நண்பர்களே வலைச்சரப்பணி முடிந்து மீண்டுமொரு பதிவின் வழியே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.இன்றைய உலகமயமாக்கப்பட்ட காலகட்டத்தில் படிப்பு, வேலை, வியாபாரம் என அனைத்திற்கும் அடிப்படை ஆங்கிலம் என்ற நிலை உருவாகி விட்டது. ஆங்கிலம் தெரிந்திருப்பது உலகளாவிய நோக்கித்திலான எண்ணங்களையும், தன்னம்பிக்கையும் தரும். எந்த ஒரு மொழியையும் கற்பதில் என்றுமே தவறில்லை. சமுதாயாத்தில் பெரும்பாலும் யாருடன் தொடர்பு கொள்ளவும் ஆங்கில மொழி அத்தியாவசியமாக விட்டது. குறிப்பாக, வேலைக்கான நேர்காணலில் இன்றைய இளைய தலைமுறையினரில் பெரும்பாலும் திறமை இருந்தும், ஆங்கில மொழி தெரியாத ஒரே காரணத்தால் குறுகிப் போகின்றனர்.அந்த ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள எனக்கு தெரிந்த சில விஷயங்களை கீழே பகிர்ந்துள்ளேன்.பார்த்து படித்து விட்டு தங்களது எண்ணங்களை பகிர்ந்து விட்டுச் செல்லவும்

எந்தமொழியையும் எளிதில் கற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் கீழ்கண்டவற்றை உங்களது வாழ்வில் பயன்படுத்த துவங்குங்கள்... மாற்றம் உங்களைத்தேடி வரும்

 • ஆங்கிலம் ஒரு அன்னிய மொழி; நம்மால் படிக்க முடியாது... போன்ற எதிர்மறையான எண்ணங்களை முதலில் உங்களது மனதில் இருந்து முழுவதுமாக அகற்றிவிடுங்கள்.
 • தினமும் குறைந்தது முப்பது நிமிடங்களாவது ஆங்கிலம் நாளிதழ், சிறுகதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை வாசியுங்கள்.
 • ஆங்கிலத்தில் எழுத பழகுங்கள்... போதுமான வார்த்தை ஞானம் இல்லை என்றால் எந்தமொழியிலும் திறம்பட உங்களது கருத்துக்களை வெளியிட முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, முடிந்தவரை ஆங்கில வார்த்தைகளின் அர்த்தத்தை கற்றுக்கொள்ளுங்கள்.
 • நீங்கள் கேட்ட, வாசித்ததில் புரியாத வார்த்தகளை குறித்துக்கொண்டு அதற்கான அர்த்தங்களை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இதை ஒரு பழக்கமாகவே தொடருங்கள்.
 • தவறாகப் பேசு விடுவோமோ ? மற்றவர்கள் ஏளனத்திற்கு ஆளாகிவிடுவோமோ ? போன்ற எண்ணங்களை அடியோடு தகர்ந்தெரிந்துவிட்டு ஆங்கிலத்தில் பேசப் பழகுங்கள்.

 • ஆங்கில டி.வி செய்தி சேனல்களை பாருங்கள். இந்திய ஆங்கில மொழி உச்சரிப்பை அறிந்துகொள்ள என்.டி.டி.வி போன்ற இந்திய ஆங்கில செய்தி சேனல்களையும் பார்க்கலாம்.
 • தனிமையில் உங்களது கருத்துக்களை ஆங்கிலத்தில் பேசி, அதை ரெக்கார்டு செய்துகொள்ளுங்கள். பின், அதை நீங்களே கேட்டு வார்த்தை உச்சரிப்பில் உள்ள தவறுகளை அறிந்து, அடுத்தமுறை அதனை தவிர்க்க பயிற்சி பெறுங்கள்.
 • எந்த ஒரு மொழிக்கும் இலக்கணம் அவசியம். பேசும்திறன், காலங்கள், வினைச் சொற்கள் போன்றவை ஒரு மொழியில் முக்கியத்துவம் பெறுகின்றன. அவற்றை முழு ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள முயலுங்கள்.
 • ‘டிக்ஸ்னரி’ (ஆங்கில அகராதி)யை உங்களது அபிமான நண்பராக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் குறிப்பெடுக்கும் வார்த்தைக்கான விளக்கத்தை டிக்ஸ்னரி உதவியுடன் அறிந்து கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை உங்களது தகவல் தொடர்பில் தொடர்ந்து பயன்படுத்துங்கள்.
 • ஆங்கில மொழியில் புலமை பெற்ற ஒருவரை ஆங்கில நாளிதழை சத்தமாக வாசிக்க சொல்லி, அவர் எவ்வாறு உச்சரிக்கிறார் என்பதை கூர்ந்து கவனியுங்கள்.
 • டைரி எழுவதை உங்களது பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அதனை நீங்கள் மட்டுமே பயன்படுத்துவதால், தவறாக எழுதிவிடுவோமோ என்ற பயம் உங்களுக்கு பெரும்பாலும் இருக்காது. தினமும் நூறு வார்த்தைகளாவது தயக்கமின்றி எழுதுங்கள்.
இவை அனைத்தையும் உங்களது ஆர்வத்தின் அடிப்படையில் மட்டுமே மிகச் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்பதை அடிமனதில் பதிந்துகொண்டு, பயிற்சி பெறுங்கள். ஆங்கிலம் என்பது கற்க முடியாத மொழி அல்லவே.


நன்றி நண்பர்களே டிப்ஸ் பற்றிய உங்கள் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.

மேலும் வாசிக்க

2/29/2012 by சம்பத்குமார் · 19

February 19, 2012

டியர் பேரண்ட்ஸ்
வணக்கம் நண்பர்களே ! தமிழ் வலையுலகில் கடந்த ஜூலை 2011 ல் பதிவெழுத ஆரம்பித்து இன்று வரை எழுத்துப்பணியை தொடர்ந்து கொண்டிருக்கின்றேன்.இனி பதிவுலகில் அடுத்த கட்ட முயற்சியாக பதிவுலகத்தின் பின்னூட்டப் பிதாமகன் திரு.சீனா ஐயா அவர்களால் நிர்வாகிக்கபட்டு வரும் வலைச்சரத்தின் இந்த வார (20.02.2012 முதல் 26.02.2012) ஆசிரியர் பொறுப்பினை ஏற்கவிருப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.இந்த வாய்பினை நல்கிய அவருக்கும் அவரது குழுவில் இருக்கும் நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் மற்றும் தமிழ்பிரியன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இதுவரை தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.அன்பர்கள், நண்பர்கள், மற்றும் வாசகர்கள் அனைவரும் தவறாது வலைச்சரம் வந்து ஆதரவளிக்க அன்போடு அழைக்கின்றேன்.

வலைச்சரத்திற்க்கு செல்ல இங்கே க்ளிக்கவும்

நன்றியுடன்

சம்பத்குமார்

மேலும் வாசிக்க

2/19/2012 by சம்பத்குமார் · 15

February 9, 2012

எழுத்தாற்றல் திறனை மேம்படுத்துவது எப்படி ? பாகம் 2


வணக்கம் நண்பர்களே ! நேற்றைய பதிவு பிறந்த குழந்தைகளை வளர்ப்பதில் ஒவ்வொரு பெற்றோரின் குணாதியசயங்களை வாசிக்க வலைப்பக்கம் வந்து சுவாசித்து கருத்துரையிட்ட அனைத்து நல் இதயங்களுக்கும் மிக்க நன்றி.இன்று குழந்தைகளின் எழுத்தாற்றல் திறனை மேம்படுத்துவது எப்படி எனபதினை விரிவாக அலசுவோம்.இதன் முதல் பாகத்தினை தவறாமல் இந்த லின்க்கில் சென்று படித்துவிட்டு இப்பதிவினை வாசிக்க தொடங்கவும்..குழந்தைகளின் எழுத்தாற்றல் திறனை மேம்படுத்த கீழே உள்ள அம்சங்களில் சிலவற்றை தொடர்ச்சியாக பின்பற்றினாலே போதும். குழந்தையின் உள்ளார்ந்த திறன்கள் நன்கு மேம்படும். இன்றைய தகவல்தொடர்பு உலகத்தில் எழுத்துப் பயிற்சிகளுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருந்தாலும், பெற்றோர்கள் தங்களின் கடமையை மறந்துவிட வேண்டாம்.ஏனெனில் படிப்பு ஒருவரை முழு மனிதனாக்குகிறது. கலந்துரையாடல் ஒரு மனிதனை தயார்படுத்துகிறது.ஆனால் எழுதுதல்தான் ஒரு மனிதனை ஒரு நுட்பமான, சரியான மனிதனாக்குகிறது

குழந்தைகளின் எழுத்தாற்றலை மேம்படுத்துதலில் பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள் :
 • ஊக்குவித்தல்
 • எழுதும் இடமும் நேரமும்
 • அணுகுமுறையில் மாற்றம்
 • தனித்தன்மை
 • பாராட்டுதல்
 • ரோல் மாடல்
 • தகவல்தொடர்பு
 • செவிவழி திறன்
 • பட்டியலிடுதல்
 • வாசிக்கும் பழக்கம்
இந்த அம்சங்களில் ஊக்குவித்தல்,எழுதும் இடமும் நேரமும் மற்றும்அணுகுமுறையில் மாற்றம்  ஆகியவற்றை பாகம் ஒன்றில் பார்த்திருந்தோம்.இனி மீதமுள்ள அம்சங்கள் ;

தனித்தன்மை

உங்கள் குழந்தை ஒன்றை எழுதியிருந்தால் அதை திருத்தி எழுத வேண்டாம். அப்படி செய்தால் உங்கள் குழந்தையின் தனித்தன்மை சிந்தனை பாதிக்கப்படலாம். உங்கள் குழந்தை எழுதிய விஷயங்களுக்கு அவர்கள் மட்டுமே உரிமையாளராக இருக்க வேண்டும். குழந்தையின் தனித்தன்மையை சிதைக்கும் விதத்தில் நடந்துகொள்ளக்கூடாது.

பாராட்டுதல்

ஒவ்வொரு மேதையுமே பாராட்டுதல்களிலிருந்து உருவாகிறார்கள் என்று ஒரு பொன்மொழி உண்டு. எனவே உங்கள் குழந்தையின் எழுத்திலுள்ள நேர்மறை விஷயங்களை எடுத்துக்கொண்டு அவர்களைப் பாராட்ட தவற வேண்டாம். நுட்பம், விரிவான விவரணங்கள், சிந்தனை மற்றும் கற்பனையைத் தூண்டும் விஷயங்கள் போன்ற அம்சங்கள்தான் எழுத்தில் இருப்பதுதான் ஒரு வளரும் மேதையின் அடையாளங்கள். எனவே, அதுபோன்ற அம்சங்களை அடையாளம் கண்டு நிச்சயமாக பாராட்ட வேண்டும்.

ரோல் மாடல்

உங்கள் குழந்தையின் எழுத்தில், வேறு எவரின் தாக்கமாவது இருந்தால் அதைப்பற்றி நீங்கள் கவலைக்கொள்ள தேவையில்லை. ஏனெனில், அது ஒரு ஆரம்ப படிநிலை. உலகில் பல பெரிய எழுத்தாளர்கள், இளமையில் வேறு யாரேனும் ஒரு இலக்கியவாதியால் கவரப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். எனவே இப்போதைக்கு பிறரின் பாதிப்பு உங்கள் குழந்தைக்கு இருந்தாலும், பின்னாளில் அது தனது தனித்தன்மையைப் பெறும்.

தகவல்தொடர்பு

உறவினர்கள் அல்லது நண்பர்களுக்கு உங்களின் பிள்ளையை கடிதம் எழுதச் செய்யும் செயல்பாடு ஒரு முக்கிய அம்சமாகும். இதன்மூலம் சமூக தகவல்தொடர்புத் திறன் உங்கள் குழந்தைக்கு மேம்படும். மேலும், பண்டிகை மற்றும் விழா காலங்களில் வாழ்த்து அட்டைகளில் குழந்தையின் சொந்த வாசகங்களை எழுத வைத்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அனுப்பலாம்.மேலும், பேனா நண்பர்கள் கலாச்சாரத்தையும் உங்களின் குழந்தைக்கு அறிமுகப்படுத்தலாம். இதன்மூலம் உங்களின் குழந்தைக்கு ஒரு புதிய உலகம் திறக்கப்படும்.

செவிவழி திறன்

உங்கள் குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட பாடல் மிகவும் பிடித்தால்(ஆபாசமில்லாத பாடல்கள்) அந்த பாடலை டேப்-ரெக்கார்டர் போன்றவற்றில் கேட்க வைத்து, அந்த வரிகளை அப்படியே பேப்பரில் எழுத வைக்கலாம். இதுமட்டுமின்றி, கவிதைகள் மற்றும் செய்யுள்கள் போன்றவைகளை, புத்தகத்தில் படித்தாலும், அவற்றை தனியாக பேப்பரில் எழுத வைக்கலாம். சிறந்த எழுத்துப் பயிற்சியானது, உங்கள் குழந்தையின் கைத்திறனை மட்டுமின்றி, மூளைத்திறனையும் அதிகரிக்கின்றது.

பட்டியலிடுதல்

அதிகமான பாடங்கள் படிக்க வேண்டியிருந்தாலும் சரி, வீட்டில் ஏதேனும் வேலை செய்ய வேண்டியிருந்தாலும் சரி, புத்தகங்களை அடுக்க வேண்டியிருந்தாலும் சரி, அதிகமானப் பொருட்களை வாங்க கடைக்கு சென்றாலும் சரி, இதுபோன்ற பல விஷயங்களுக்கு பட்டியலிட்டு வேலை செய்ய உங்கள் குழந்தையைப் பழக்கவும். ஏனெனில் இந்தப் பட்டியலிடும் பழக்கமானது, ஒரு அமைப்பு ரீதியான திறனை வளர்ப்பதோடு, எதையும் மறக்காமல் இருக்கவும் உதவுகிறது. மேலும் ஒரு வேலையை எங்கு தொடங்கி, எங்கு முடிப்பது என்ற ஒரு வரைவு திட்டத்தையும் வழங்குகிறது.

வாசிக்கும் பழக்கம்

செய்தித்தாள்கள் படிக்கும் பழக்கம் எழுத்தாற்றலை வளர்ப்பதற்கு ஒரு சிறந்த முறையாகும். சிறு பிள்ளைகளைப் பொறுத்தவரை, முக்கியமாக இரண்டு வகை சஞ்சிகைகள் இதற்கு பொருத்தமானவை. செய்தி சஞ்சிகைகள் மற்றும் சுற்றுலா சஞ்சிகைகள். செய்தி சஞ்சிகைகள் விரிவான சமூக அறிவை வளர்ப்பவை. சுற்றுலா சஞ்சிகைகள் உலகத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்து, அதன்மூலம் விஷயங்களை எளிதில் கற்று, எழுதத் தூண்டுபவை. எனவே, சஞ்சிகைகளை உங்களின் குழந்தைக்கு அறிமுகப்படுத்தி, அதன்மூலம் அவர்களின் உலகை பரந்துபடச் செய்யுங்கள்.

நாம் பெரியளவில் திட்டமிட்டு செயல்பட்டு, பல பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பி நம் குழந்தைக்கு எழுத்துப் பயிற்சி அளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. எல்லா பெற்றோர்களாலும் அது முடியாது. எல்லா குழந்தைகளுக்கு அதை வழங்க வேண்டிய அவசியமுமில்லை.மேற்கண்ட அம்சங்களில் சிலவற்றையாவது அவர்கள் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்து தந்தாலே நம்து குழந்தைகளின் எழுத்தாற்றல் திறன் நிச்சயம் மேம்படும் என்பதிம் மாற்றம் ஏதும் இல்லை.

உறவுகளே ! பதிவினை பற்றிய தங்களது எண்ணங்களை மறக்காமல் கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்

CuteParents ல் இன்றைய பதிவினை வாசிக்க அன்புடன் அழைக்கின்றேன்

Motivation Is the Key To Success

மேலும் வாசிக்க

2/09/2012 by சம்பத்குமார் · 17

February 8, 2012

குழந்தைகளின் பெற்றோர்கள் கவனிக்க...


வணக்கம் நண்பர்களே நீண்ட நாட்கள் கழித்து மீண்டுமொரு குழந்தைவளர்ப்பு பதிவின் வழியே உங்களை சந்திக்கவிருப்பதில் மிக்க மகிழ்ச்சி.இன்று உலகில் இருக்கும் அனைத்து பெற்றோர்களும் அறிந்துகொள்ள வேண்டிய பெற்றோர்களின் வகைகளைப்பற்றி விரிவாக பார்ப்போம்.இன்றைய அவசர யுகத்தில் நாம் ஒவ்வொருவரும் எந்த வகையில் இருக்கின்றோம் எனபதினை கண்டறிந்து மென்மெலும் குழந்தைகளை வாழ்வில் சிறந்தவர்களாக மாற்ற நம்மை நாமே மாற்றிக்கொள்வோம்.

பெற்றோர்களும் அவர்தம் வகைகளும் :

இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்களின் குணாதிசயங்களைக் கொண்டு
 • அவசர பெற்றோர்கள்
 • அன்பு பெற்றோர்கள்
 • அடிதடி பெற்றோர்கள்
 • இராமன் இராவணன் பெற்றோர்கள்
 • குழந்தை மையப்பெற்றோர்கள்
என ஐந்து வகைப்படுத்தலாம்.இதில் நீங்கள் எந்த வகையினை சார்ந்தவர் என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்

அவசர பெற்றோர்கள் :

பிறந்தவுடனேயே தங்கள் குழந்தைகள் அஹிம்சையில் காந்தியைப்போலவும் அன்பு காட்டுவதில் அன்னை தெரசா போலவும் செஸ் விளையாடுவதில் விஸ்வநாத் ஆனந்த் போலவும் இருக்க வேண்டும் எதிர்பார்ப்பார்கள்.தங்கள் குழந்தை நாளையே சாதிக்க வேண்டும் என்பதற்காக இன்றைய நாள் முழுவதையும் குழந்தைக்காக அர்ப்பணிக்கும் பெற்றோர்கள் இவர்கள். இவர்களின் குழந்தைகளை வைத்தே இவர்களைக் கண்டுபிடித்து விடலாம். இவர்களின் குழந்தைகள் ஆறு மணிக்கு கராத்தே கிளாஸ் போகும். ஏழு மணிக்கு நீச்சல் கிளாஸ் போகும். எட்டு மணிக்கு கம்ப்யூட்டர் கிளாஸ். பிறகு ஸ்கூல் , டியூசன், மாலை டான்ஸ் கிளாஸ் யோகா கிளாஸ் என்று ஏதாவது ஒன்றை கற்றுக் கொண்டே இருக்கும். இன்னும் என்னவெல்லாம் கற்றுக் கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ளவே ஒரு கிளாஸ் போகும்.காரணம், இவ்வகை பெற்றோர்களைப் பொறுத்தவரை குழந்தைகள் என்பது அவர்களின் பாக்கெட்டில் குத்திக்கொள்கிற பதக்கம். இன்ஸ்டன்ட் காபி போல இன்ஸ்டன்ட் வெற்றியை எதிர்பார்ப்பதால் இந்த வகை பெற்றோர்களை அவசர பெற்றோர்கள் என்கிறோம்.

இவ்வகை பெற்றோருடைய குழந்தைகள் தங்களைப் பற்றிய அதிக பெருமையுடனே வளர்வார்கள்.

அன்பு பெற்றோர்கள் :

நாம்தான் வாழ்க்கையில் கஷ்டப் பட்டோம். நம் குழந்தைகள் எந்தக் கஷ்டமும் படக்கூடாது என்று நினைப்பவர்கள் இவ்வகை பெற்றோர்கள். குழந்தைகளின் மனம் வாடக் கூடாது என்று எது கேட்டாலும் வாங்கிக் கொடுப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் கேட்பதற்கு முன்னாலே வாங்கிக் கொடுத்து விடுவார்கள்.கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் பெரும்பாலும் அவர்கள் அன்பு பெற்றோர்களாக இருந்து விடுவது உண்டு. தாங்கள் சம்பாதிப்பது எல்லாமே குழந்தைகளுக்குத்தானே என்ற கருத்தில் அவர்கள் கேட்பது எதையும் தட்டாமல் வாங்கிக் கொடுத்து விடுவார்கள். மேலும் குழந்தைகளோடு நேரம் செலவிட முடியாத இயலாமையை மறைப்பதற்காகவும் இப்படி எல்லாவற்றையும் வாங்கிக் கொடுக்கும் உத்தி இவர்களுக்கு உதவும்.இளம் மனங்கள் எதற்காகவும் வாடக் கூடாது என்பது இவர்களின் கொள்கையாக இருக்கும். அன்பை வெளிப்படுத்துவதற்கான வழி எதையாவது வாங்கித்தருவது என்பது இவர்களின் பிரதான செய்கையாக இருக்கும்.

இவ்வகை பெற்றோருடைய குழந்தைகள் பெரும்பாலும் பிடிவாதம் பிடிப்பவர்களாகவே வளர்கிறார்கள்.

அடிதடி பெற்றோர்கள் :

என்ன ஆச்சு? குழந்தை அழுதது. இரண்டு சாத்து சாத்து . நீ குழந்தையா இருக்கிறச்ச. அதான் செஞ்சேன். என்ன ஆச்சு ? குழந்தை அழுதது. இரண்டு உதை உதை. நீ குழந்தையா இருக்கிறச்ச. அதான் செஞ்சேன்.இது ஏதோ விளம்பர வரிகள் அல்ல.அடி உதவற மாதிரி அண்ணன் தம்பிகூட உதவமாட்டான். அடியாத மாடு படியாது. அடிமேல அடி அடிச்சா அம்மியும் நகரும். இப்படி அடிப்பதற்கு மட்டும் இவர்கள் ஆயிரம் தத்துவ முத்துக்களை தன் வசம் வைத்திருப்பார்கள். வழிகாட்ட வேண்டிய வயதில் குழந்தைகளை கண்டிப்பதன் மூலமாக மட்டுமே அதைச் செய்ய முடியும் என்பதை உறுதியாக நம்புகிறவர்கள் இவர்கள்.அடிப்பதனால் ஏற்படும் பாதிப்புகளை எங்கள் நிகழ்ச்சிகளில் நாங்கள் எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் எங்களை எங்க அப்பா அம்மா அடிச்சுதானே வளர்த்தாங்க. நாங்க இன்னிக்கு நல்லா இல்லையா? என்று எதிர் கேள்வி கேட்பார்கள்.அடித்து வளர்த்தே நீங்கள் இவ்வளவு வளர்ந்திருக்கிறீர்களே? அடிக்காமல் வளர்த்திருந்தால் இன்னும் எவ்வளவு வளர்ந்திருப்பீர்கள் என்றுதான் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வகை பெற்றோருடைய குழந்தைகள் தாழ்வு மனப்பான்மையுடனேயே வளர்வார்கள்.

இராமன் இராவணன் பெற்றோர்கள் :

இராமன் ஆண்டால் என்ன ? இராவணன் ஆண்டால் என்ன ? என்பதைப்போல குழந்தை படித்தால் என்ன, படிக்காவிட்டால் என்ன சாப்பிட்டால் என்ன, சாப்பிடாவிட்டால் என்ன என்று இருப்பவர்கள் இவ்வகை பெற்றோர்கள்.இந்த வகை பெற்றோரை ஓர் எளிய கேள்வியின் மூலம் கண்டறிந்துவிடலாம். உங்கள் குழந்தை என்ன வகுப்பு படிக்கிறது என்று கேட்டுப் பாருங்கள். ஆறாவதோ ஏழாவதோ படிக்கிறான் என்பார்கள் தடுமாறியபடியே. நான் கிண்டலாக சொல்வதுண்டு. உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்று கேட்டுப்பாருங்கள். இரண்டோ மூன்றோ என்பார்கள்.சில அதிஷ்டசாலி குழந்தைகளுக்கு மட்டும் பெற்றோரில் குறிப்பாக தந்தை இராமன் இராவணன் பெற்றோர் வகையை சேர்ந்தவராக இருந்தாலும் தாய் அன்பு பெற்றோர் இனத்தை சேர்ந்தவராக அமைந்து விடுவதுண்டு. 

இவ்வகை பெற்றோருடைய குழந்தைகள் தன்னம்பிக்கை யையும் சுயமதிப்பையும் வளர்த்துக் கொள்ள முடியாமல் தடுமாறுவார்கள்.

குழந்தை மையப்பெற்றோர்கள் :

யார் குழந்தையுடைய கண்களிலிருந்து இந்த உலகத்தை பார்க்கிறார்களோ, யார் குழந்தை யுடைய காதுகளிலிருந்து இந்த உலகத்தை கேட்கிறார்களோ, யார் குழந்தைகளுடைய இதயத்திலிருந்து இந்த உலகத்தை புரிந்து கொள்கிறார்களோ, அவர்களே குழந்தை மைய பெற்றோர்கள்.

ஓர் உதாரணம் சொன்னால், எல்லா வகை பெற்றோர்களையும் நீங்கள் சுலபமாக புரிந்து கொள்ளலாம்.வீட்டிற்கு வந்த விருந்தினர் தண்ணீர் கேட்கிறார். ஒன்றாவது படிக்கும் உங்கள் குழந்தை ஓடிப்போய் தண்ணீர் எடுத்து வருகிறது. ஈரக்கையில் கிளாஸ் டம்ளர் வழுக்கி கீழே விழுந்து உடைந்துவிடுகிறது.
 • ஒன்றுக்கும் லாயக்கில்லை என்று ஓங்கி ஓர் அறை வைத்தால் நீங்கள் அடிதடி பெற்றோர். 
 • ஐயோ டம்ளர் விழுந்துடுச்சு. கால்ல அடிபட்டிடுச்சு. பிராக்சர் ஆகியிருக்கும். டாக்டருக்கு போன் பண்ணுங்கள் என்று ஆர்ப்பாட்டம் செய்தால் நீங்கள் அன்பு பெற்றோர். 
 • டம்ளர் விழுந்த சத்தம்கூட கேட்காத மாதிரி உட்கார்ந்திருந்தால் நீங்கள் இராமன் இராவணன் பெற்றோர்.
 • பயப்படாத. கலங்காத. நீ என்ன வேணும்னா போட்டு உடைச்ச. எதிர்பாராமதான இப்படி நடந்தது. நான் கூட ஒன்றிரண்டு முறை கவனக்குறைவா இப்படி உடைச்சிருக்கேன்.எப்போதுமே தப்பு நடந்த அழத. அதை எப்படி சரி செய்யறதுன்னு பதட்டப்படாம யோசி. சரி. இப்ப பெரிய கிளாஸ் பீஸ் எல்லாத்தையும் நீ எடு. சின்ன கிளாஸ் பீஸ் எல்லாத்தையும் நான் எடுக்கிறேன். நான் எப்படி எடுக்கிறேன்னு பாரு. நாளைக்கு நான் இல்லாத போது இப்படி நடந்தால் நீயே சுத்தம் செய்து கொள்ளலாம். சரியா? என்பார்கள் குழந்தை மையப்பெற்றோர்கள்
இப்படி பேசுவதால் வாழ்க்கையில் உங்கள் குழந்தைகள் எதற்குமே துவண்டு போகாது. தோல்விகள் வந்தால் துவளாது. அதிலிருந்து மீள்வது எப்படி என்று யோசிக்கும். அதாவது குழந்தை மையப் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கையை எதிர் கொள்ளக் கற்றுக்கொள்கிறார்கள். இப்படி வளரும் குழந்தைகள் சாதனை யாளர்களாக, துணிச்சல்மிக்கவர்களாக தன்னம்பிக்கை மிக்கவர்களாக வளர்வார்கள்.

என்ன நண்பர்களே நீங்கள் எந்த வகை பெற்றோர்களாக இருக்கிறீர்கள் அல்லது இருக்க விரும்புகிறீர்கள் ? கருத்துரைப் பெட்டியில் பகிர்ந்துவிட்டுச் செல்லலாமே.வருங்கால சந்ததிகளுக்காக….

Cute Parents ல்இதனையும் வாசிக்கலாமே

How To Prepare For Final Exams


Ten Ways To Slash Your Medical Billsமேலும் வாசிக்க

2/08/2012 by சம்பத்குமார் · 28

;