December 30, 2011

புத்தாண்டு வாழ்த்துக்களும் தீர்மானங்களும்...


வணக்கம் நண்பர்களே ! 2011 வருடத்தின் கடைசி நாளில் பதிவின் வழியே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.கடந்த ஜூலை 15 ல் ஆரம்பித்த இந்த வலைப்பக்கத்திற்க்கு அன்பும் ஆதரவும் அளித்து உற்சாகப்படுத்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி.பொதுவாக ஆண்டின் முதல் நாளில் சில தீர்மானங்கள் எடுக்கின்றோம்.ஆனால் மாதம் செல்ல செல்ல எடுத்த தீர்மானங்கள் காற்றோடு காற்றாய் கரைந்துவிடுவது நம்மில் பலபேருக்கு நிதர்சனம்.இன்றைய பதிவில் உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களோடு புத்தாண்டில் எடுக்கிற தீர்மானங்களில் தீர்மானமாய் இருக்க சில வழிகளை அலசுவோம்.

 • குறிப்பிட்ட வேலைக்கென்று நேரம் ஒதுக்கி விட்டால் அதை மறுபடி மாற்றிக் கொண்டிருக் காதீர்கள். காலை நேர நடைப்பயிற்சிக்குப் போவது என்று முடிவெடுத்தால், இரண்டு பேர் வருவதற்கு முன்னால் புறப்பட்டுவிடுங்கள்.ஒருவர் பால்காரர். இன்னொருவர் பத்திரிகை போடுபவர். பால்காரர் வருவதைப் பார்த்துவிட்டால், ”ஒரு காபி சாப்பிட்டுப் போகலாம்” என்று தோன்றும். காபி வருவதற்குள் பேப்பர் வந்து விழும். தலைப்புச் செய்திகளை மட்டும் பார்க்கலாம் என்று கையில் எடுப்பீர்கள்.கைகளில் காபி மணக்க, கண்கள் பேப்பரை மேய, வெய்யில் வந்ததுமே ”நாளைக்கு போய்க்கலாம்” என்று எண்ணம் வந்துவிடும்.எத்தனை மணிக்கு எதைச் செய்வது என்று முடிவெடுத்தாலும் அத்தனை மணிக்கு அதை செய்து முடிப்பதே உத்தமம்.
 • நீங்கள் சில வேலைகளை முக்கியமானவை என்று வகுத்துக்கொண்ட பிறகு, தெரிந்தவர்கள் அதில் திருத்தத் தீர்மானம் கொண்டு வருவார்கள். மாலை ஐந்து மணிக்கு யோகா செய்வதென்று முடிவெடுத்து வைத்திருப்பீர்கள். நாலரை மணிக்கு நண்பர் போனில் அழைப்பார். ”பார்த்து ரொம்ப நாள் ஆயிடுச்சு! அஞ்சு மணிக்கு வரவா” என்று கேட்டால், ”அஞ்சரைக்கு முடியுமா?” என்று கேட்பீர்கள். அவர் வேலையிருக்கிறது என்பார். ”அப்ப சரி, அஞ்சு மணிக்கே வந்துடுங்க” என்பீர்கள். அப்படிச் சொன்னால், உங்களுக்கு யோகா முக்கியமில்லை என்று அர்த்தம். 
 • எதற்கு முதலிடம், எதற்கு முக்கியத்துவம் என்பதெல்லாம் நீங்கள் முடிவு செய்கிற விஷயங்கள்.உங்களுக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் உங்களின் அன்றாட நிகழ்ச்சி நிரலை வெளிப் படுத்துங்கள். நேரிலோ, செல்போனிலோ உங்களை எப்போதெல்லாம் அழைக்கலாம் என்பதைத் தெரியப்படுத்துங்கள். உங்கள் பழக்கங்களுக்கு நீங்கள் மரியாதை கொடுத்தால் தானே மற்றவர்கள் கொடுப்பார்கள். இதில் எப்போதும் உறுதியாய் இருங்கள்.
 • உடலில் எடையைக் குறைப்பது ஒருவகை வெற்றி. தொழிலில் லாபத்தைக் கூட்டுவது இன்னொரு வகை வெற்றி. இவை அனைத்திற்குமே சில விலைகள் உண்டு. திட்டமிடுவது, நேரம் ஒதுக்குவது, கவனம் குவிப்பது போன்றவையே அவை. உரிய விலைகளைக் கொடுத்தால் பெரிய வெற்றிகளைக்கூட எளிதாய் எட்டலாம் என்பதே சாதனையாளர்களின் வாழ்க்கை சொல்லிக் கொடுக்கிற சூத்திரம்.
 • பயன்தரும் நூல்களும், படைப்பாளுமையை மேம்படுத்தும் புத்தகங்களும் இளைஞர்களின் இதயங்களில் புதிய வெளிச்சங்களைப் புகுத்த வல்லவை.பார்க்கும் பழக்கத்தின் பிடியைவிட்டு படிக்கும் பழக்கத்திற்கு எல்லா வயதினருமே மாறிவருவது மிகவும் நல்லது. 

புத்தாண்டில் புத்தகப் பழக்கத்தைப் புதிதாக உருவாக்கிக் கொள்வதற்கென்று சில வழிமுறைகளை வீட்டில் மேற்கொள்ளலாம்.

 • வீட்டில் எல்லோரும் கூடி அமரும் இடத்தின் மையப்பகுதியாக தொலைக்காட்சி இருக்கும் நிலையை மாற்றி, இதுவரை தொலைக்காட்சி இருந்த இடத்தில் அழகிய புத்தக அலமாரி ஒன்றை அமைக்கலாம். தொலைக்காட்சியை சிறிய அறைகள் ஏதாவது ஒன்றிற்கு மாற்றலாம்.
 • மாத செலவுத் திட்டத்தில் புத்தகத்துக்கென்று தொகையை ஒதுக்கலாம். பாடத்திட்டத்தில் உள்ள புத்தகங்கள் நீங்கலாக, பொதுவான புத்தகம் ஒன்றினையாவது ஒவ்வொரு மாதமும் புதிதாக படிக்க வேண்டும் என்கிற பழக்கத்தை சிறியவர்களிடம் குடும்பத் தலைவர்கள் கொண்டு வரலாம்.
 • திருமணம் போன்ற வைபவங்களில் வழக்கமான “மொய்”யுடன் ஏதாவதொரு புத்தகத்தையும் பரிசாகக் கொடுக்கலாம்.புதுமனை புகுவிழா, பிறந்த நாள் போன்ற கொண்டாட்டங்களில் புத்தகங்களை மட்டுமே, பரிசளிப்பது என்கிற பழக்கத்தை ஏற்படுத்தலாம்.வீட்டிலிருக்கும் 
 • வெவ்வேறு வயதினரின் விருப்பங்களுக்கு ஏற்ற புத்தகங்களை சுழற்சி முறையில் மாதா மாதம் வாங்குவதோடு, வீட்டில் இருக்கும் சிறியவர்களை, நூலகப் பரிசளிப்புப் போட்டிகளுக்கு ஆளாக்கி பரிசுகள் தரலாம்.

உறவுகளே ! வருங்கால தலைமுறைகளுக்கு புது வெளிச்சம் தரும் புத்தகங்களின் ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையட்டும்.

 நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


பூக்கின்ற புத்தாண்டு புத்தக வாசிப்பாண்டாக இருக்கட்டும்.


வாழ்த்துக்களோடு பதிவினைப்பற்றிய தங்களது எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்.

cuteparents ல் சமீபத்திய பதிவினை வாசிக்க அன்புடன் அழைக்கின்றேன்

TOP TEN TIPS FOR GOOD PARENTING 

மேலும் வாசிக்க

12/30/2011 by சம்பத்குமார் · 24

December 29, 2011

எழுத்தாற்றல் திறனை மேம்படுத்துவது எப்படி ?


வணக்கம் நண்பர்களே ! மீண்டுமோர் குழந்தைகளுக்கான பதிவின் வழியே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.இன்றைய பதிவில் குழந்தைகளின் எழுத்தாற்றல் திறனை மேம்படுத்துவது பற்றி விரிவாக அலசுவோம்.நம் குழந்தை எழுத ஆரம்பிக்கையில், அதன் மூளையில் பலவிதமான துறுதுறுப்புகள் உண்டாகின்றன. இந்த துறுதுறுப்புகள் எழுத்து சிந்தனையால் ஏற்படுபவை. பின்னர், எழுதிய அந்த விஷயங்களை குழந்தையானது பேச முயல்கிறது மற்றும் முன்வருகிறது.வரைதல் என்பதும் தகவல் தொடர்பின் ஒரு நிலை. தகவல்தொடர்பின் ஒரு அற்புத நிலையாக வரைதல் திகழ்கிறது. குழந்தைகளுக்கு முன்பருவபள்ளி(Preschool) ஒரு முக்கிய காலகட்டம். தன்னுடைய உணர்வுகளை எளிய முறையில் தெரிவிக்கும் வகை வரைதலாகும். எழுத்திற்கு முன்னர் வரைதலே, தகவல் தொடர்பாக இருந்தது. வரைதல் என்பது சிறந்த கலை என்றாலும், தகவல் தொடர்பு என்ற அளவில் இது மிகவும் இன்று ஒதுங்கியிருக்கிறது. ஏனெனில், இது ஒரு அறிவியலாக வளரவில்லை.உங்கள் குழந்தையை வரைய ஊக்குவிக்கவும். தனது மனதில் இருப்பதை குழந்தை வரையப் பழகுவது நல்லது. பின்னர், சிறிது சிறிதாக அதை எழுதுவதற்குப் பழக்கலாம். அதிகமாகப் பேசும் குழந்தைக்கூட, எழுதும்போதுதான் திருப்தியாகவும், அமைதியாகவும் இருக்கும்

எழுதுதல் செயல்பாடானது, உங்கள் குழந்தைக்கு மகிழ்ச்சி உணர்வையும், திருப்தியையும் தருகிறது.இதில் ஒரு குழந்தை தன்னியக்க ஆனந்த செயல்பாட்டில் செல்கிறது. எனவே ஒரு வளரும் மேதைக்கு எழுத்து என்பது முக்கியமானது.பள்ளிக்கு ஒரு குழந்தையை அனுப்புகையில், ஆசிரியரால் ஒவ்வொரு குழந்தையின் எழுத்துத் திறனை மேம்படுத்துவதற்கும் தனியான கவனத்தைத் தர முடிவதில்லை. ஆனால் வீட்டில் பெற்றோர்களால் அதை செய்ய முடியும். எழுதுதலானது, ஒரு குழந்தையின் சிந்தனையை தெளிவுபடுத்துகிறது. இதைத்தவிர, பிறருடன் ஒத்துப்போகும் திறன் மற்றும் அமைப்புத் திறனையும் மேம்படுத்துகிறது. மேலும், நல்ல எழுத்துப் பயிற்சி ஒரு சிறந்த தகவல் தொடர்பாளராகவும் குழந்தையை மேம்படுத்துகிறது.

நாம் பெரியளவில் திட்டமிட்டு செயல்பட்டு, பல பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பி நம் குழந்தைக்கு எழுத்துப் பயிற்சி அளிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. எல்லா பெற்றோர்களாலும் அது முடியாது. எல்லா குழந்தைகளுக்கு அதை வழங்க வேண்டிய அவசியமுமில்லை. கீழே உள்ள அம்சங்களில் சிலவற்றை தொடர்ச்சியாக பின்பற்றினாலே போதும். குழந்தையின் உள்ளார்ந்த திறன்கள் நன்கு மேம்படும். இன்றைய தகவல்தொடர்பு உலகத்தில் இதுபோன்ற எழுத்துப் பயிற்சிகளுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருந்தாலும், பெற்றோர்கள் தங்களின் கடமையை மறந்துவிட வேண்டாம்.ஏனெனில் படிப்பு ஒருவரை முழு மனிதனாக்குகிறது. கலந்துரையாடல் ஒரு மனிதனை தயார்படுத்துகிறது.ஆனால் எழுதுதல்தான் ஒரு மனிதனை ஒரு நுட்பமான, சரியான மனிதனாக்குகிறது

குழந்தைகளின் எழுத்தாற்றலை மேம்படுத்துதலில் பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய அம்சங்கள் :
 • ஊக்குவித்தல்
 • எழுதும் இடமும் நேரமும்
 • அணுகுமுறையில் மாற்றம்
 • தனித்தன்மை
 • பாராட்டுதல்
 • ரோல் மாடல்
 • தகவல்தொடர்பு
 • செவிவழி திறன்
 • பட்டியலிடுதல்
 • வாசிக்கும் பழக்கம்

இனி இவை ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாக பார்ப்போம்

1.ஊக்குவித்தல்

உங்கள் குழந்தைக்கு நல்ல எழுத்துப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக,அவர்களை வற்புறுத்துதல் மற்றும் அடிக்கடி தொந்தரவு செய்வது கூடாது. இதனால் உங்கள் குழந்தைக்கு எழுவதின் மீதே வெறுப்பு ஏற்படக்கூடும். மாறாக, சிறு பரிசுப் பொருட்கள், பாராட்டு மற்றும் உற்சாகத்தைக் கொடுக்கலாம். எழுதுவதை ஒரு மகிழ்ச்சியான பொழுதுபோக்காக மாற்றலாம்.குழந்தையிடம், கதைகள் மற்றும் கவிதைகளைப் படிக்கலாம். கவிதைகளின் ஓசை நடையும், இனிய இசையும் குழந்தையின் கற்பனைத் திறனை வளர்க்கும். குழந்தையுடன் வார்த்தை விளையாட்டுக்களையும் விளையாடலாம். மேலும், வார்த்தை விளையாட்டை குடும்ப விளையாட்டாகவும் விளையாடலாம். டிக்ஸனரி உபயோகிக்கும் பழக்கத்தை கற்றுக்கொடுக்கலாம்.இதன்மூலம் குழந்தையின் வார்த்தை அறிவு வளர்ந்து அதன்மூலம் அதன் எழுத்து வளம் மேம்படும். ஒரு குழந்தை அறிவாளியாக வளரும் செயல்பாட்டில் வார்த்தை வளம் என்பதும் மிகவும் முக்கியம்.

நீங்கள் பணிக்கு செல்லும் பெற்றோராக இருக்கலாம். இதனால் போதுமான நேரத்தை உங்கள் குழந்தையுடன் செலவழிக்க முடியாமல் இருக்கலாம்.  உங்களின் குழந்தை உங்களிடம் பேச நினைப்பதை பேசுவதற்கு சந்தர்ப்பம் வாய்க்காமல் போகலாம். இதுபோன்ற நேரங்களில் உங்கள் குழந்தை உங்களிடம் பேச நினைப்பதை, எழுதுமாறு நீங்கள் கூறலாம். ஏனெனில், பல சமயங்களில் நேரடியாக பேசுவதைவிட, எழுதும்போது எண்ணங்கள் தெளிவாக வெளிப்படுத்தப்படும். குழந்தையின் சிந்தனைத் திறன் வளர்ச்சிக்கு இந்த எழுத்துப் பழக்கம் மிகவும் முக்கியமானது. அடிக்கடி எழுதுவதால் குழந்தையின் தகவல் தொடர்பு திறனோடு, சிந்தனைத் திறனும் வளர்ச்சியடைகிறது.

2.எழுதும் இடமும் நேரமும் 

உங்கள் குழந்தை வரைவதற்கும், எழுதுவதற்கும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடம் ஒதுக்கிக் கொடுத்திருக்கலாம். அதேசமயம், அந்த இடத்தைவிட்டு வேறொரு இடத்தில் உங்களின் குழந்தை அமர்ந்து எழுதினாலோ அல்லது வரைந்தாலோ, குறிப்பிட்ட இடத்திற்கு செல்லுமாறு வற்புறுத்தக்கூடாது. அதற்காக கடிந்து கொள்ளவும் கூடாது. ஏனெனில் குழந்தைக்கு சுதந்திரம்தான் முக்கியமே தவிர இடமல்ல. அது ஒன்றும் பெரிய தவறுமல்ல.மேலும், நீங்கள் உங்களின் குழந்தையிடம் சிறிய எழுத்துவேலை அல்லது வரையும் வேலையைக் கொடுத்திருந்தால் அதைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்கும்படி நெருக்கடி தரக்கூடாது. குழந்தைக்கு சிந்திப்பதற்கு நேரம் தேவை. ஒரு குழந்தை சிந்திப்பது என்பது நாம் சிந்திப்பது போன்றதல்ல. குழந்தை சிறிதுநேரம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் வேலையை செய்து கொண்டிருக்கலாம். அதன் மூளை தயாராக நேரம் தேவை. எனவே, குழந்தை சிந்திப்பதற்கு நல்ல சுதந்திரம் முக்கியம்.

3.அணுகுமுறையில் மாற்றம்

ஒரு குழந்தையின் எழுத்து முயற்சியில் சிறுசிறு தவறுகள் ஏற்படுவது ஒரு தவிர்க்கமுடியாத அம்சம். ஆனால் ஒரு நல்ல பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. உங்கள் குழந்தையின் கருத்துதான் முக்கியமே தவிர, அதிலிருக்கும் எழுத்துப் பிழை மற்றும் இலக்கணப் பிழை போன்றவைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், இவை காலப்போக்கில் சரிசெய்யத்தக்கவை.


நண்பர்களே உங்களின் நல்லாசியுடன் மீதம் உள்ள அமசங்கள் அடுத்த பதிவில் தொடரும்.

பதிவினைப் பற்றிய தங்களது எண்ணங்களையும்,கருத்துக்களையும் மறக்காமல் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள் நம் வருங்கால தலைமுறைகளுக்காக...

Cute Parents ல் சமீபத்திய பதிவுகளையும் வாசிக்க அன்போடு அழைக்கின்றேன்.

மேலும் வாசிக்க

12/29/2011 by சம்பத்குமார் · 13

December 27, 2011

விருந்தினர் வருகை
தனியாக வந்த காக்கை ஒன்று
கரைந்து கொண்டிருந்தது
வெகுநேரமாய்..!
நேரம் காலை
சுமார் ஒன்பது மணி..!

இடுப்பில் நிற்காத
கால்சட்டையை,மற்றொரு கையால்
தூக்கிப்பிடித்தபடி
ஸ்கூலுக்குக் கிளம்பிக்
கொண்டிருந்தான் மணிப்பயல்...!

மூன்றாவது முறையாக
திண்டிலிருந்து விழுந்து
ஒரு கணம் மூச்சு நின்றுவிட
கைக்குழந்தை ஐசுவுக்கு
வாயில் ஊதிக் கொண்டிருந்தாள் அம்மா...!வெகு அவசரமாக
வேறிடம் நோக்கி
இரைகளை நகர்த்திக் கொண்டிருந்தன
பிள்ளையார் எறும்புகள்...!

கொஞ்ச நேரம் வெளியில்
சென்று வந்து பார்க்கையில்
பக்கத்து வீட்டுக் கூரை நெருப்பு
பரவியிருந்தது எங்கள் கூரைக்கும்...!

அப்புறம்
நாலைந்து பேர் வந்தார்கள்
லாரி லாரியாய்
தண்ணீர் ஊற்றி அணைத்தார்கள்...!வழக்கம் போல
மின்சாரக் கசிவென
பதிவுசெய்து கொண்டார்
தொப்பை போலீஸ்காரர்...!

மதியம் வாக்கில்
மந்திரி வந்தார்
அவரது உம் என்ற முகத்தில்
ஆறுதல் அப்பிக்கிடந்தது..!

நிறைய பேர் வந்து
குசலம் விசாரித்தனர் 
இன்றைய பொழுதில் ,
நாளைக்கும் விருந்தினரை 
அழைக்க காக்கைக்கு இல்லை கூரை...!நண்பர்களே..! விருந்தினர்கள் வரத்தயங்கும் குடிசைவாசியின் பார்வையில் எழுந்த கவிதை பற்றிய தங்களது எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.

Cute Parents ல் இன்றைய பதிவினை வாசிக்க அன்புடன் அழைக்கின்றேன்

Common Signs Of Child's Hearing Problemமேலும் வாசிக்க

12/27/2011 by சம்பத்குமார் · 10

December 26, 2011

துப்புரவுத் தொழிலாளிவீதி கூட்டியெடுத்து
விதியெழுதும் மனிதர்கள்
நாதியற்றுப் போகும் நான்கும்
இவர்கள் மறுதலித்தால்...!

குடல்கள் துப்பும்
குப்பை கூழங்களையும் 
அள்ளும் கும்பிடத்தக்க 
உயர் பிறவிகள்...!

சாக்கடை தீரத்தில்
முத்துக் குளித்து 
அடைப்பெடுக்கும்
சந்தனமன மனிதர்கள்...!

நீர்க்கோழி போல் நீ 
சாக்குளித்து வருகையிலெ
நான் உடல் உதறி 
நடுங்குகிறேன் நண்பனே...!

என் வியர்வைக் கழிவையே 
நான் முகர மறுக்கிறேன்
எம் சகலக் கழிவுகளையும் 
கையேந்தி களைகிறாயே...!ஒருமூன்று வயது வரை 
எனதன்னை செய்தாள் – கடமை
இதுவரை நீ செய்கிறாயே 
பெருமை – எனக்கோ சிறுமை...!

இயந்திரங்கள் எத்தனையோ 
வந்துவிட்ட போதும்
விலகாதா இனியும் கொடுமை...!

காசி கங்கையில் பாவம் 
தொலைக்கப்போகும் பாவிகளே
கால்வாயில் குப்பைக்கூளம் 
கொட்டி வைக்காதீர்...!

மனிதக் கழிவு அகழியில் 
மனிதனையே இறக்குவதை
மனிதநேயமிக்கோரே 
இனியும் அனுமதியாதீர்...!


Cute Parents ல் இன்றைய பதிவினை வாசிக்க அன்புடன் அழைக்கிறேன்.


நண்பர்களே துப்புரவுத் தொழிலாளி கவிதை பிடித்திருந்தால் தங்களது எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்

மேலும் வாசிக்க

12/26/2011 by சம்பத்குமார் · 27

December 24, 2011

குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 3


வணக்கம் நண்பர்களே மீண்டுமொரு குழந்தைகளுக்க்கான் பதிவில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.இந்த தொடரின் முதல் இரண்டு பாகங்களை வாசிக்க 1.குழந்தைவளர்ப்பில் கவனிக்க வேண்டியவை மற்றும் கவனிக்கவேண்டியவை பாகம் 2.பொதுவாக குழந்தைகளுக்கு ஆசிரியரை பிடிக்கவில்லையென்றால் கூட அவர்கள் நடத்தும் பாடங்கள் பிடிக்காது, படிக்கப் பிடிக்காது என்பதை ஆசிரியர்கள் உணர்வதில்லை. அதனால் மாணவர்களுக்குப் பிடித்தது போல நடந்து கொள்ள முயற்சிப்பதில்லை.ஆசிரியர் பாடம் நடத்தும்விதம் பிடிக்க வில்லையென்றாலோ அல்லது தன்னை நடத்தும் விதம் பிடிக்கவில்லை என்றாலோ கூட ஆசிரியரை பிடிக்காது. இதன் காரணம் ஆசிரியர் நமது பிள்ளைகளை அடிப்பதினால் தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.இதில் யார் செய்தது சரி அல்லது தவறு என்று பார்ப்பதை விட ஆசிரியர்களுக்கும் மாணவர் களுக்குமான உறவை மேம்படுத்துவது எப்படி என்றும் அதற்கு பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றியும் பார்ப்போம்.

ஒருவரை அடிப்பது என்பது யார் செய்தாலுமே தவறுதான். மிருகங்களுக்குத்தான் அடித்து பயிற்சி கொடுப்பார்கள். ஆனால் இன்று மிருகங்களை அடிப்பதையே யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. அப்படியிருந்தும் அடிக்கும் பழக்கம் மட்டும் இன்னும் முழுதாக நம்மிடமிருந்து நீங்கவில்லை. பெற்றோர் , ஆசிரியர் அல்லது சகமாணவன் என யாரோ ஒருவர் யாராவது ஒருவரை அடித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் இன்னும். என்னதான் நாகரீகம் வளர்ந்தாலும் நம் அடிமனதின் ஆழத்தில் இன்னும் கொஞ்சம் காட்டுமிராண்டித்தனம் நீங்காமல் இருக்கிறதோ ? என்று தோன்றுகிறது.

‘என் பிள்ளை மேல கையை வைச்சது யாரு ? இப்பவே அந்த டீச்சர் இங்க வரணும்’ என்று பள்ளி வாசலில் நின்று கத்துகிற பெற்றோர்கள் இருக்கிறார்கள். ‘எங்களாலதான அவன அடக்க முடியல . நீங்களாவது நாலு அடி வைச்சாவது அவன நல்லபடியா கொண்டு வந்தா சரிதான்’ என்று சொல்லும் பெற்றோர்களும் இருக்கிறார்கள்.இதில் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டியது, அடிப்பதால் யாரும் திருந்தியது கிடையாது. கத்துவதாலும் யாரும் திருந்துவது கிடையாது. இப்படி எல்லாம் செய்வதால் ஆசிரியர்கள் மேலுள்ள மரியாதை மேலும் குறைந்து குழந்தைகள் இன்னும் அலட்சியமாக மாற ஆரம்பிக்கிறார்கள்.எனவே, ஆசிரியர்கள் பற்றிய குழந்தைகளின் கருத்துகள் என்ன என்பதை அவ்வப்போது மனம் விட்டு பேசுங்கள். ஆசிரியர்களைப்பற்றி குறை சொன்னால் கண்டிக்காமல் அதை நேர்மறையாக புரிந்து கொள்ள உதவி செய்யுங்கள்.உதாரணத்திற்கு ஆசிரியர் என்னை பாரட்டவில்லை. எப்போதும் குறைதான் சொல்கிறார் என்றால், பாராட்டுகிறவர்கள் நம்மை அதே நிலையில் வைத்திருப்பவர்கள் விமர்சிப்பவர்களே நம்மை மேம்படுத்துபவர்கள் என்பதை விளக்கமாக சொல்லிக்கொடுங்கள்.‘நீ நல்லா படிக்கிறேன்னு சொன்னா, சரி நாம தான் நல்லா படிக்கிறோமேன்னு நீ அலட்சியமா இருந்துடக்கூடாதுன்னுதான் நீ இன்னும் படிக்கணும்னு உன்னோட வாத்தியார் சொல்றாங்க’ என்பதினை புரிய வையுங்கள்.

ஆசிரியர்களை மதிக்கும் பழக்கம், மாணவர் களிடம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்று பெரும்பாலான ஆசிரியர்கள் நினைக்கிறார்கள். இது உண்மையும் கூட.போதாக்குறைக்கு சினிமாவில் ஆசிரியரை நக்கல் அடிப்பது என்று ஸ்பெசல் கிளாஸ் வேறு நடத்துகிறார்கள்.இதனை தவிர்க்க உங்கள் குழந்தைகளிடம், ’இந்த உலகத்தில் வெற்றி பெற்ற யாவரும் ஓர் ஆசிரியரின் வழிகாட்டுதலால் வென்றவர்கள்தான்’ என்பதை எடுத்துச் சொல்லுங்கள்.ஆசிரியர் நமக்கே தெரியாமல் நம்மை மேம்படுத்துபவர் என்பதை எடுத்துச்சொல்லி வகுப்புக்கு வராத ஆசிரியராக இருந்தால்கூட அவர்களிடமும் மதிப்போடும் கண்ணியத்தோடும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவ்வப்போது நினைவுபடுத்துங்கள்.

மேலும் குறைந்த மதிப்பெண் எடுக்கிற மாணவர்களை விட கற்றுக்கொள்ளும் ஆர்வமே இல்லாத மாணவனைத்தான் ஆசிரியர்களுக்கு பிடிப்ப தில்லை. எனவே உங்கள் குழந்தைகள் மதிப்பெண் குறைவாக எடுத்தால் ஆசிரியர்களை பயந்து விலகாமல் சந்தேகம் கேட்கவும் அதிக மதிப்பெண் பெற வழிகாட்டும்படியும் கேட்கச் சொல்லுங்கள்.எவ்வளவுதான் நன்றாக படிக்கிற பையனாக இருந்தாலும் வகுப்பில் அருகில் உள்ள மாணவனிடம் பேசிக்கொண்டிருப்பவர்களையும் ஆசிரியர்களுக்கு பிடிப்பதில்லை. உங்கள் குழந்தைக்கு அந்தப்பழக்கம் இருந்தால் உங்கள் குழந்தையை மட்டுமல்லாமல் அவர்களின் நண்பர்களையும் அழைத்து இப்பழக்கத்தை மாற்றிக்கொள்ள ஊக்குவியுங்கள்.வகுப்பறையில் நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்குமுறைகளை பெற்றோர்களே கற்றுக் கொடுத்துவிட்டால் இது போன்ற அசம்பாவித சம்பவங்களுக்கு வாய்ப்பேயில்லை.ஆசிரியரை நேசிக்க வைப்பது குழந்தைகளை மேதைகளாக்க விரும்பும் பெற்றோர்களாகிய உங்கள் கைகளில்தான் இருக்கிறது.ஏனெனில் ஆசிரியரை பிடித்தால்தான் குழந்தைகளுக்கு பாடங்கள் பிடிக்கும். படிக்கவும் பிடிக்கும்.

உறவுகளே ! தங்களுக்கு நேரமிருந்தால் CuteParents ல் இன்றைய பதிவினையும் வாசித்துச் செல்லலாமேபதிவினை சுவாசித்துவிட்டு தங்களது எண்ணங்களை கருத்துக்களாகவும் வாக்குகளாகவும் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.


மேலும் வாசிக்க

12/24/2011 by சம்பத்குமார் · 11

December 22, 2011

பூவுலகில் நாம்
இரட்டைத் தேகங்களின்
இன்பத்தேடலில்
இறுதிக்கட்டம்..!

ஒற்றை ஒற்றையாய்
ஒன்றிணைந்து உருவானோம்
இரட்டிபாகி இரட்டிப்பாகி
கோடி நூறு கோடிகளாய் கரங்களின்றி
ஒட்டிப் பிணைந்தோம்..!

அண்டவெளி விரிந்து கிடக்க
அன்னையின் அண்டச் சிறையில்
சின்ன உயிர்ப் பிண்டமானோம்...!

இதயத்துடிப்பும்
இமையற்ற
விழிகளும்
நாலிரண்டு
மில்லிமீட்டரில்
எத்தனித்தோம் வாழ...!அடுத்த கட்டம்
மூன்று சென்டிமீட்டராய்
வளர்ந்தோம்
கைககால்
விரல்கள்
முளைத்தது...!

அரைக்கர்ப்பிணி
அடிவயிற்றில்
அசைந்தோம்...!

காற்றுப் பைக்குள்
சற்றே விரிய
சத்துக்கள் உறிஞ்சினோம்...!

வாய் வெளுத்து பய
நோய் கொண்டாளம்மா
நம்மை ஈன்றெடுக்க...!இரண்டரை கிலோகிராம்
ஒன்றரை அடி
உயிர்ப்பூவானோம்...!

தாயின் உயிரைக் கிழித்து
தரையில் பிதுங்கினோம்
தொப்புள் கொடி துண்டித்து...!

அதன்பின் தான்
அவளை அழைத்தோமா
அம்மா என்று..?

அழைப்புக்குரல் கேட்டு
அவளின் உயிரும் பூக்கிறது
அகமகிழ்ந்து….!


நண்பர்களே கவிதையை பற்றிய தங்களது எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்


மேலும் வாசிக்க

12/22/2011 by சம்பத்குமார் · 17

December 20, 2011

விவசாயி விடும் எச்சரிக்கை
கலப்பையால் காணிநிலம் தட்டி
கதிரவனை துயில் எழுப்பும் கட்டியங்காரன்...!

உதவாக்கரைகளை உதறியெழுப்ப
சேவலுக்கு சேதி சொல்லும் சேவகன்...!

எதனை விதைக்கிறாயோ அதயே அறுப்பாய்
போதிக்கும் புத்தன்...!

சகதியில் சங்கடமின்றி தாம்திமித்தோம்
சங்கீதமிசைக்கும் தாள வித்துவான்...!

கம்பக்கூழும் வரகுக்களியும் அவ்வப்போது
இவன் சேற்றுக்கைகள் சோற்றைப்பார்க்கும் எப்போதாவது...செஞ்சூரியக் கொடுமையால் மேனி எழில் கறுமையானவன்...!

உழைப்பு வாசனை உடுத்தியிருப்பதால்
இவன் வியர்வை நாறுவதில்லை...!

நிலம் பார்த்து விதைப்பதால் இவன்
மனம் பார்த்து வாழலாம் நாம்...!

இயற்கை பொய்த்து செயற்கை மிகுவதால்
இடம்பெயர்கிறான் இன்று...!

சோற்று வடம் பிடிக்க இவர்களின்றி போவதால்
சேற்றுப்புழுக்களாய் நெளியப்போகிறோம் நாளை
எச்சரிக்கை...!

மனிதம் காக்கும் இந்த மகாத்மாக்களை
மகிமைசெய்து மானம் காப்போம் உறவுகளே..!


முல்லைபெரியாற்று பாசனத்தால் பயன்பெறும் விவசாய நிலங்கள் இனிவரும் காலங்களில் இப்படியும் மாறிவிடுமோ...? 


இணையத்தில் ஆதரவளிக்க வாருங்கள் நண்பர்களே..


பிரச்சினை நடந்து இவ்வளவு நாட்களாகியும் கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய அரசை தட்டியெழுப்ப உங்கள் மேலான ஆதரவை தாருங்கள் உறவுகளே..!


மத்திய அரசே..! மத்திய அரசே..! முல்லைப்பெரியாறு பிரச்சினையை உடனே தடுத்து நிறுத்து..மேலும் வாசிக்க

12/20/2011 by சம்பத்குமார் · 22

December 19, 2011

சர்க்கஸ் கூடாரம்
புதிதாக ஒன்றுமில்லை
கிழட்டுச் சிங்கங்கள்
நெருப்பு வளையங்களுக்குள்
நுழைந்து திரும்புகின்றன..!

புதிய பச்சைக்கிளிகளும்
பலூன்களைத்தான் சுடுகின்றன
துப்பாக்கிகளால்...!

பாதாளக் கிணற்றுக்குள்
மோட்டார் சைக்கிளை
வேகமாக ஓட்டுபவனின் முகம்வேறு.இந்தப் பாரிலிருந்து
அந்த பாருக்கு மாறும்
ஆண்களும் பெண்களும் கூட
புதியவர்கள்...!

கைகளயே வளையமாக்கி,அதில்
நுழைந்து வெளியேருகிற
ஆறுவயது சிறுமிக்குத் தெரியும்
இப்போது பார் விளையாடும்
அவள் அக்காவும்
இதைத்தான்
முன்பு செய்து கொண்டிருந்தது...!

மேலே மேலே இருபத்தைந்து
காபி கோப்பைகளை அடுக்கி
நெற்றியில் சுமந்து,நடந்து
கைத்தட்டல் பெறுகிறவன்
பழைய சாயம் போன
சட்டை அணிந்திருக்கிறான்...!காட்சிகளும் பார்வையாளர்களும்
கோமாளிகளும் ஆட்டக்காரிகளும்
மாறினாலும்,சர்க்கஸ்
அதே பழைய சர்க்கஸ்தான்...!

பழைய பெயரை வைத்தே
கூட்டம் சேர்த்துக்
கொண்டிருக்கிறார்கள்
முதலாளிகளின் வாரிசுகளும்..


உறவுகளே ! கவிதையைப்பற்றிய தங்களது கருத்துக்களை மறக்காமல் பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்

நன்றி மடல் :

நண்பர்களே..! 18.12.11 அன்று ஈரோட்டில் பதிவர் சந்திப்பினை அழகுற ஏற்பாடு செய்திருந்த ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமத்திற்க்கு தமிழ்பேரன்ட்ஸ் தளத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.விழா நடைபெற்ற அன்று விருது பெற்ற 15 நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.


இதில் கலந்து கொண்டு தங்கள் உதவியால் நல்ல நல்ல நண்பர்கள் கிடைக்கப் பெற்றேன்.கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்

இனி சங்கமத்தினைப் பற்றிய சுவாரஸ்யங்கள் நண்பர்களின் பதிவுகளில் கீழே..
இணைய நண்பர்களின் சங்கமம் - வீடு சுரேஷ் குமார்


சங்கமம் வெளிவராத செய்திகள் - கோகுலத்தில் சூரியன் வெங்கட்சங்கமம் - ஓர் டைரிக்குறிப்பு - வீடு திரும்பல் மோகன்குமார்

ஈரோடு பதிவர் சங்கமம் - 2011 - கந்தசாமி ஐயா 

ஈரோடு சந்திப்பு அன்பு வேண்டுகோள் - மெட்ராஸ் பவன் சிவக்குமார்

ஈரோடு சந்திப்பு - குறையொன்று - ரசிகன் ஷர்புதீன்ஈரோடு பதிவர்களின் இந்தப்பணி மென்மேலும் பல ஆண்டுகள் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்

நன்றியுடன்
சம்பத்குமார்.

டிஸ்கி : 

நண்பர்களின் பதிவுகள் 19.12.11 அன்று மாலை 8 மணி அளவு வரை திரட்டப்பட்டது.ஏதெனும் தவறியிருந்தால் நண்பர்கள் பின்னூட்டத்தில் லின்க் தருமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.

மேலும் வாசிக்க

12/19/2011 by சம்பத்குமார் · 14

December 17, 2011

என்ன பதில் சொல்ல...?
போதையில் தள்ளாடிய அவன் தோற்றம்
என் நெஞ்சில் பதிந்துவிட்ட சித்திரம்...!

வர்ணம் மங்கிய சுவர்
அதன் அருகில் அவன் உறக்கம்...!

என் இளம்பருவத்து தோழனவன்
எப்படி இதன் அடிமையானான்...!

அவன் கண்களில் குழம்பிய சிவப்பு
தன் பாசத்துக்குரியவர்களை காண ஏங்காதா..?அமுதம் போல பருகி அவன் மனம்
அடையும் பரவசம் அன்பால் அது நிறையாதா..?

ஏன் இப்படி என்கிறேன்
தயவுசெய்து விட்டுவிடு என்கிறேன்...!

மனைவியும் மூன்று பிள்ளைகளும்
மனம் கசிந்து நெருப்பில் வெந்த பிறகுமா
இப்படி என்கிறேன்...!

அவசரமாய்த் தலையாட்டி மறுக்கிறான் அவன்...!

அது அப்படி இல்லை என்கிறான்..
எதுவுமே உனக்கு புரியாது என்கிறான்..கூடவே கேட்கிறான் ஓர் கேள்வி...!

மதுவின் ரசத்தை உறிஞ்சுவது
எதையும் மறந்து தொலைப்பதற்கோ
போதைக்கோ இல்லை என் தோழா....!

இப்படியும் ஓர் வாழ்க்கை உண்டு என்பதை
உலகம் ஏற்க மறுப்பது ஏனடா என் தோழா..?

என்ன பதில் சொல்ல….?நண்பர்களே பதிவினைப் பற்றிய தங்களது எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் விட்டுச் செல்லுங்கள்


CUTE PARENTS -ல் இன்றைய பதிவினையும் வாசிக்கலாமல்லவா....


BACK TO SCHOOL CHECK LIST FOR YOUR CHILDREN


நன்றி..!

மேலும் வாசிக்க

12/17/2011 by சம்பத்குமார் · 7

December 15, 2011

குழந்தைகள் என்ன பந்தயகுதிரைகளா ?


வணக்கம் நண்பர்களே மீண்டும் ஒரு குழந்தைகளுக்கான பதிவின் வழியே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.இன்றைய பதிவு நம் செல்லகுழந்தைகளை பந்தயகுதிரைகளாய் மாற்றுவதை பற்றி விரிவான அலசல்.வாழ்க்கையின் ஓட்டத்தில் இன்று நாம் எல்லோரும் பரபரப்புடன் ஓடிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் ஓடிக் கொண்டிருக்கும் அனைவருமே ஓட்டத்தின் முடிவில் வெற்றி பெறுவார்கள் என்று சொல்வதற்கில்லை.பள்ளியில், கல்லூரியில் படிக்கும் தங்கள் குழந்தைகள் எவ்வாறு தேர்வு எழுதினார்கள், எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றனர் என்ற ஒரே சிந்தனை பெற்றோர்களுக்கு. ஒவ்வொரு தடவையும் முந்தைய தேர்வில் வாங்கிய மதிப்பெண்ணை விட அதிக சதவீதம் தங்கள் குழந்தைகள் பெற வேண்டும் என்ற ஏக்கமும் எதிர்பார்ப்பும் இன்றைய பெற்றோர்களை வாட்டி வதைக்கிறது.

தங்கள் பெற்றோர்களின் விருப்பப்படி அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வண்ணம் மாணவ, மாணவிகளும் கடுமையாக உழைத்து படித்துப்படித்து ஓய்ந்து போகின்றனர். எதிர்பார்த்ததை விட குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் பட்சத்தில் தங்களுக்கு உண்டாகும் கவலையை பற்றித்தான் மாணவ, மாணவிகள் பயப்படுகின்றனர். பலர் தூக்கத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் இழந்து தவிக்கின்றனர்.தங்கள் குழந்தைகளிடம் இருந்து கல்வியில் நல்ல சாதனையை பெற்றோர்கள் எதிர்பார்ப்பதில் தவறில்லை. அதற்காக தங்களின் கடந்தகால கல்விச் சாதனையை அறவே மறந்து விட்டு தங்கள் குழந்தைகள் மட்டும் தேர்வில் மதிப்பெண்கள் பெறுவதில் உயரத்தை எட்டிப் பிடிக்க வேண்டும். அதுவும் ஒரு தடவை கூட குறைந்து விடாமல் ஏறுமுகமாகவே இருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் நினைப்பதில் நியாயமே இல்லை
.
இன்றைய உலகம் கடும் போட்டிகள் நிறைந்தது தான். கல்வியில் சாதனை புரிபவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பும், வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்பதும் நிஜம்தான்.அதற்காக தங்கள் குழந்தைகளை பந்தய குதிரைகளாக பாவித்து காலாண்டுத்தேர்வில் எழுபது சதவீத மதிப்பெண் எடுத்தாய், அரையாண்டில் அவசியம் எண்பது சதவீதம் எடுக்க வேண்டும், இறுதியாண்டுத் தேர்விலோ தொன்னூறு சதவீதத்திற்கு கீழ் குறையவே கூடாது என்று பெற்றோர்கள் கண்டிப்போடு கட்டளையிடுவது ஆரோக்கியமான செயலல்லவே.

பெற்றோர்கள் தங்கள் வம்சத்தின் இயலாமையை தங்கள் குழந்தைகள் அவர்களது இளம் பருவத்திலேயே முறியடித்துக் காட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை இறுக பிடித்து கொள்வது விவேகமானது. தங்கள் குழந்தைகள் நன்கு படிப்பதற்கு நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்து அவர்களுக்கு படிப்பில் உற்சாகம் ஏற்படும் வண்ணம் ஊக்கப்படுத்தினாலே போதும்.அதன் பிறகு தங்கள் குழந்தைகள் நன்கு படித்து எடுக்கும் மதிப்பெண்கள் எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனோபக்குவத்தை பெற்றோர்கள் பெற வேண்டும். வாழ்க்கையில் வெற்றி என்பது பாடபுத்தகங்களுக்குள் மட்டுமே இல்லை. மதிப்பெண்கள் மட்டுமே உயர்நிலை அடைவதற்கு மார்க்கம் ஆகிவிடாது.

தேர்வில் ஏற்படும் ஓரிரு தோல்விகள் மட்டுமே மனித வாழ்க்கைக்கு முடிவுரை எழுதிவிட முடியாது. வாழ்வில் உயர்ந்து, பிறரோடு இணைந்து மகிழ்வோடு வாழ்வதற்கு மதிப்பெண்களை தாண்டி சில விஷயங்கள் உண்டு.தன்னம்பிக்கை, துணிவு, நன்னடத்தை, நல்ல குணாதிசியங்கள் இவைகளோடு கல்வியில் சாதனையும் சேரும் போது வெற்றி வீடு தேடி வரும் என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. படிப்பறிவோடு செயல் ஆற்றலும், வாழ்க்கையை எதிர் கொள்ளும் துணிச்சலும் தான் ஒரு ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். 

மாணவ, மாணவிகளை பந்தய குதிரைகளாக பாவிப்பதை பெற்றோர்கள் கைவிட வேண்டும். நம் பாசமிகு செல்வங்கள் மீது அளவுக்கு அதிக சுமையை ஏற்ற வேண்டாம்.அவர்களை இயல்பாக வாழவிடுங்கள். இயந்திரமாக அல்ல. சுதந்திரமாக வாழவிடுங்கள். அடிமையாக அல்ல. பாசத்தையும், பந்தத்தையும் புறம்தள்ளும் குதிரைப் பந்தயம் இனி நமக்கு வேண்டவே வேண்டாம்

நண்பர்களே பதிவினைப்பற்றிய தங்களது எண்ணங்களை கருத்துக்களாகவும் வருங்கால தலைமுறைக்கு கொண்டுசெல்ல வாக்குகளாகவும் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்


மேலும் வாசிக்க

12/15/2011 by சம்பத்குமார் · 13

December 14, 2011

வேர்விட்ட மரம்
தொட்டியிலிருந்தாலும் தோப்பிலிருந்தாலும்
ஆசை தணியாது
நீளும் மண்புணர ஆணிவேர்...!

தன் சருகிலிருந்து சாறெடுத்து
மீண்டும்
சருகின் மூலத்தை இயற்றும்
களைப்பின்றி காம்புகளில்
இலையுதிர் காலப்பொழுதுகளில்...!

காற்றின் ஊடலால்
ஓயாமல் சப்தமிடும்
மழையோசையை நகலெடுத்து
முற்றிய இலை அதரங்கள்...!மலரின் பரிணாமத்திற்க்காய்
விழிமூடி விழித்திருக்கும்
தியானத்தில் மொட்டு...!

எச்சமிட்ட பட்சியின் கூடுதாங்கி
மரங்கொத்தி செதுக்கிய
ரணம் ரசித்து
துழாவித் துழாவி
சுயம் தேடி
சலிக்காது கிளைவிடும்
புறச்சிராப்புடன் சல்லிவேர்கள்...!

மரணங்கண்டஞ்சாது
விதைக்குள் தனை சுருக்கி
வீழ்ந்து தேடித் தேடும்...!கைகள் கிளையாக
உடல் தண்டாக
கால்கள் வேராக
ரோமங்கள் இலையாக
உச்சந்தலையில் சிறுபட்சி கூடுகட்ட
தலைமுடி விழுதாகி காற்றிலாட
வாயை பொந்தென நினைத்து...

உற்சாகமாய் ஓடிவந்த மரங்கொத்திப்பறவை
சேகரித்த வார்த்தை புழுக்களைக்
கொத்தித் தின்ன தின்ன மௌனியாகி
தேட வைத்தது எதுவெனத் தேடுகையில்
என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது
தலைகீழாய்
பழந்தின்னி வௌவாலொன்று..!


வணக்கம் நண்பர்களே வேர்விட்ட மரம் கவிதை பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச்செல்லுங்கள்


மேலும் வாசிக்க

12/14/2011 by சம்பத்குமார் · 14

December 12, 2011

திருட்டுப் பூனை..
காவல் பலிக்கவில்லை
தினமும் பால்திருட்டு...!

எதேச்சையாய் பார்த்தது நின்று முறைக்கிறாய்
முன்வைக்கவோ
பின்வைக்கவோ
உன் தந்திரம் புரியவில்லை...!

துடிக்கும் மீசையில் கர்வம்...
கண்களில் கவியும் குரூரம்...
உடம்பில் புரளும் முறுக்கு..!

உன் கண்களுக்கு எதுவாய்த் தெரிகிறேன் நான்
எலியாகவா...?
எதிரியாகவா...?

சாத்திய ஜன்னல்கள் நடுவில்
கசியும் உன்குரல் இரக்கம் மிக்கது...!சோறு உனக்கு பிடிக்கவில்லை
கறி நான் சமைப்பதில்லை...!

குழந்தையிருக்கும் வீடு
பால் மிஞ்சினாலும் கொடுப்பதற்கில்லை..!

நேற்றுவரை உன் திருட்டின் ஆட்டத்தால்
எச்சரிக்கையானது வீடு..!

இதில் இன்னோர்
வீட்டிற்க்கு நீ சென்று கொண்டுவந்த..

எச்சில் மீன் தலையைத் துப்ப
என் வாசலா கிடைத்தது...?அதட்டலின் அர்த்தம் குழப்பிவிட்டது...!

உன் நகங்களின் ஆத்திரப்பதிவில்
பாதத்தில் கசியும் ரத்தக்கோடுகள்...!

என்ன புரிந்து எகிறினாய்..?
உன் மீன் எனக்கு இரையாகுமா
என் வாசல் தூய்மை தவறாகுமா…!


அன்பிற்கினிய நண்பர்களே தமிழக எல்லையிலிருந்து கேரளா எல்லைக்கு ஏலத்தோட்ட வேலைக்கு சென்ற நமது உடன்பிறவா சகோதரிகளை சீண்டிப்பார்த்த கேரளாவெறியர்களை தட்டிக்கேட்க,இப்பிரச்சினை நடந்து இவ்வளவு நாட்கள் ஆகியும் இன்னும் கண்டுகொள்ளாமல் தூங்கிக்கொண்டிருக்கும் நம் அரசியல் வாதிகளை தட்டி எழுப்ப இணையத்தில் ஒன்றினைந்து குரல் கொடுப்போம் வாருங்கள்


மேலுள்ள லின்கில் சென்று மறக்காமல் தங்களது ஆதரவினை தெரிவிக்க அன்புடன் அழைக்கின்றேன்.நம் மக்களை சீண்டிப்பார்த்த கேரளவெறியர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.முடிந்த வரை உங்கள் நட்புவட்டத்தில் இதனை கொண்டு செல்லுங்கள்.மேலும் வாசிக்க

12/12/2011 by சம்பத்குமார் · 15

December 10, 2011

குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 2


வணக்கம் நண்பர்களே ! நேற்றைய மைனா பதிவிற்க்கு வந்து வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மிக்க நன்றி.இன்றையபதிவில் குழந்தை வளர்ப்பில் கவனிக்கவேண்டியவை பற்றி அலசுவோம்.இதன் முதல் பகுதியை தவறவிட்டவர்கள் குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 1 சென்று வாசித்துவிட்டு இந்த பதிவினை வாசிக்கத்தொடங்கவும்.என்ன நண்பர்களே சுயபரிசோதனை முடித்துவிட்டீர்களா..?. நமது குழந்தைகளை வெற்றிகரமான மேதைகளாக உருவாக்குவதில் படைப்புத்திறன்,கற்பனைத்திறன்,அவர்களுக்கான சுதந்திரம் ஆகியவையே மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன.ஒரு மேதை என்பவர் வெறுமனே விஷயங்களை எளிதாக புரிந்து கொள்பவர் அல்ல.அவர் தனக்கான  தனித்தன்மையை இந்த சமூகம் மற்றும் இந்த உலகிலிருந்து பெறுகிறார். எனவே, ஒரு குழந்தையின் படைப்புத்திறன் பெரியளவில் எழுச்சிப் பெறுவதற்கு, படைப்பாக்க ஆர்வம், கற்பனை மற்றும் சுதந்திரம் ஆகியவை அதற்கு கட்டாயம் தேவை.

படைப்புத்திறன் - Creative Skills.

படைப்புத்திறனுக்கான அடிப்படை தன்மையாக படைப்பாக்க ஆர்வம் திகழ்கிறது. படைப்புத்திறனை உங்கள் குழந்தையினுள் உருவாக்க, பலவித விஷயங்களைப் பற்றி கேள்விக் கேட்கும் பழக்கத்தை தூண்டுங்கள். குழந்தையானது, புதிய அனுபவங்களை பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குங்கள். இதன்மூலம் அக்குழந்தைக்கு புதிய எண்ணங்கள் பிறக்கும்.
ஒரு குழந்தை கேள்வி கேட்கும்போது, உங்களின் முழு கவனத்தையும் அதன்பால் செலுத்தவும். ஏனெனில் இதில் ஒரு முக்கிய அம்சம் இருக்கிறது. பெரியவர்களை மதிக்க வேண்டும் என்று சிறுவர்களுக்கு பொதுவாக கற்றுத் தரப்படுகிறது. நாமும் அதைத்தான் அவர்களிடம் சொல்கிறோம். ஆனால் நாம் ஒன்றை யோசித்துப் பார்க்க வேண்டும். நாம் சிறுவர்களாக இருந்தபோது, நம்மை உதாசீனப்படுத்திய பெரியவர்களை நாம் விரும்பியிருக்கிறோமா? அல்லது மனதுக்குள் மதித்திருக்கிறோமா? எனவேதான், குழந்தைக்கான முக்கியத்துவத்தை நாம் நிச்சயம் வழங்கியாக வேண்டும்.மேலும் உங்கள் குழந்தையை வெளியே அழைத்துச் செல்லும்போது, கண்ணால் காணும் காட்சிகள் தொடர்பாக கேள்விகள் கேட்கலாம். (அந்த மனிதர் ஏன் செடிக்கு நீர் ஊற்றுகிறார், நின்று கொண்டிருந்த கார் எவ்வாறு ஓடியது, ஏன் கடை வைத்திருக்கிறார்கள்)

இதன்மூலம் சிந்தனைத்திறன் மேம்படும். ஏன், எதற்கு என்று யோசிப்பார்கள். அதற்கு விடைகாண முயல்வார்கள்.

கற்பனைத்திறன் - Imagination Skills

பள்ளியில் ஒரு குழந்தைக்கு, வரலாறு, புவியியல், சமூகவியல், அறிவியல், கணிதம் போன்ற பல பாடங்களைப் பற்றிய அம்சங்கள் பள்ளியில் கற்பிக்கப்படுகின்றன. ஆனால் அவற்றுடன் கற்பனைத்திறன் சேர்வது மிகவும் முக்கியம். கற்பனையற்ற அம்சங்கள் என்பவை பசுமையில்லாத தாவரங்களைப் போன்றவை. எனவே, பாடத்திட்டத்தில், ஊக்கமளிக்கப்பட்ட கற்பனைத்திறன் என்ற அம்சம் கட்டாயம் இருக்க வேண்டும். ஏ¦னினில், படைப்புத்திறனின் உயிநாடியாகஇந்த ஊக்கமளிக்கப்பட்ட கற்பனைத்திறன் திகழ்கிறது. உதாரணமாக, ஒரு விஞ்ஞானி ஒரு விஷயத்தை முதலில் கற்பனை செய்து, பின்னர் அதை நிஜமாக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார். அது தோல்வியடையும்போது, மீண்டும் வேறொரு கற்பனையை மேற்கொண்டு, தனது முயற்சியில் ஈடுபடுகிறார். இந்த செயல்முறைதான் அனைத்து வகை துறைகளிலும் இருக்கிறது.

உங்கள் குழந்தையின் கற்பனை சமயத்தில் அபத்தமாகவும், தவறாகவும் உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் அதற்காக அவர்களைத் திட்டுவது அதைவிட அபத்தமானது. ஏனெனில், இதன்மூலம் கற்பனை செய்யவே பிற்காலத்தில் குழந்தை பயப்படும். ஏனெனில் இதுபோன்ற கற்பனைகள்தான் வருங்காலத்தில் செம்மையான சிந்தனைகளாக மாறும்.

அவர்களுக்கான சுதந்திரம் - Independence

ஒரு மேதைக்கு, சுதந்திரம் என்பது ஜீவ நீரைப் போன்றது. அந்த சுதந்திரத்திற்கு தடை ஏற்பட்டால், ஒரு இளம் மேதை தன்னை ஒரு நல்ல படைப்பாளியாக உருவாக்கிக் கொள்வதில் பலவிதமான சிக்கல்களை ஏற்படும். ஒரு வளரும் மேதைக்கு பெரியளவிலான புறக்கணிப்பு ஏற்படக்கூடாது. அப்போதுதான், அந்த மேதை இன்னும் புதிய விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும். ஒரு இளம் மேதையின் சுதந்திரமானது, பெற்றோர் காட்டும் அன்பு மற்றும் ஆதரவில்தான் அடங்கியுள்ளது.

பழைய நடைமுறைகள் மற்றும் விதிகளை மீறினால்தான் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். அதுதான் உலக நியதி. எனவே, உங்கள் குழந்தை அந்த விதிகளை மீறினால், நீங்கள் அதிர்ச்சியடையாமல், ஆச்சர்யமடைந்து, உங்களின் குழந்தையை ஊக்குவிக்க வேண்டும்.

வறுமை என்பது ஒரு சிறு தடைதான். அதை மீறி சாதனை புரிந்தவர்கள் எத்தனையோ பேர். முறையான ஆதரவு, உற்சாகமளித்தல், திறமையை கண்டுகொண்டு உதவுதல், சுதந்திரம் அளித்தல், சோதனைகள் வந்தாலும் குழந்தையின் பக்கமே இருத்தல் போன்ற பலவித உதவிகள் கிடைக்காமல் காணாமல் போகும் மேதைகள்தான் அதிகம்!எனவே, அவர்களுள் ஒருவராக, உங்களின் குழந்தையும் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இன்னும் வளருவோம்..நண்பர்களே மேலே உள்ள தலைப்பு பலகை (HEADER BANNER) அழகுற வடிவமைத்துத் தந்த அருமை நண்பர் திரு. ஸ்பார்க் கார்த்தி அவர்களின் தன்னிகரற்ற சேவைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மேலும் இதனை வலைத்தளத்தில் பொருத்த உதவி செய்த பாசமிகு நண்பர் திரு.அப்துல் பாஸித் (ப்ளாக்கர் நண்பன்) அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


உறவுகளே! பதிவு பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களையும் வாக்குகளையும் மறக்காமல் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்


மேலும் வாசிக்க

12/10/2011 by சம்பத்குமார் · 12

வேலைக்காரி மைனா..
அலாரம் அடிச்சி அரமணி ஆவுது
இன்னுமா தூக்கம் எழுந்துருடி பொண்ணே...!

அடுப்பு மேட அசிங்கமா கிடக்குது
ராத்திரியே கழுவுடின்னா ஒடம்பு நோவுது...!

வாசலக் கழுவு... கோலம் போடு
தண்ணி வருதுடி இப்பவே புடிச்சுவை
கோழிகள எல்லாம் தெறந்து உடுடி
சாணிய அள்ளு... கொட்டாயக் கழுவு
கறக்கறவன் வந்தா சத்தம் போடுவான்...!

பெரியண்ணன் புள்ள ஸ்கூலுக்கு போவணும்
சீக்கிரம் பலகாரம் செஞ்சி அனுப்புடி
சின்னக்க புள்ள அழுவுது பாருடி..!ஆர்லிக்ஸ் இருக்குது கரச்சி குடுப்பாட்டு
அக்காவ எழுப்பாத பாவம் தூங்கட்டும்
ஆத்தா ஊட்லயாவது அக்கடான்னு தூங்கட்டும்
தம்பிங்க செருப்புங்கள தொடச்சி எடுத்துவை
புதுத்தண்ணி ஊத்தி பாட்டில்ல குடுத்தனுப்பு...!

எட்டு மணிக்குள்ள எதுக்குடி நாஷ்தா
துன்னு துன்னே ஊட்ட அழிங்கடி
மாடு மாதிரி எதுக்கு நிக்கிற...

ஆலைக்கு சாப்பாடு பத்தரைக்குப் போவணும்
அரிசிய எடுத்துக் கழுவுடி கடன்காரி
மீன் வாங்கப்போன சின்னவனக் காணோம்
வந்தா நறுவிசா ஆய்ஞ்சி கொழம்புவை...!

கீரத் தோட்டத்துல ஆடுங்க மேயுதே
கண்ணுங்க அவிஞ்சா போச்சு தொறத்துடி
அழுக்குத் துணிங்கள தொவச்சி ஒலத்து
நேத்து ஒலந்ததுக்கு இஸ்திரி போட்டுவை
ராத்திரி விரதம்டி தோசைக்கு மாவரை...!பருத்தி புண்ணாக்கு மாட்டுக்கு கலக்கிவை
பத்மா வீட்டிலிருந்து கழனிப்பான தூக்கிவா...!

சும்மாத்தான இருக்கிற சாணிய கொழப்பு
உண்டையா புடிக்கறன் செவுத்துல தட்டுடி...!

வெட்டி முறிச்சாப்ல என்னடி அலுப்பு
பொணம் மாதிரி வந்து விழுவுற...!

மார்ச் மாதம் பரீச்ச வருதுல்ல
இந்த வருஷமாது பாஸாகுர வழியப்பாரு..
டிகிரி இருந்தாத்தா எவனாச்சிம் கட்டுவான்
ஒனத்தியா ஒக்காந்து படிடி தடிச்சி..
எனக்கு நேரந்தவறாம டீயக் கொண்டாந்து குடுடி..!


பதிலேதும் பேச முடியாமல் 
புத்தகத்தை கையிலெடுத்தாள் மைனா...நண்பர்களே வேலைக்காரியின் வாழ்க்கை கவிதை பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்


மேலும் வாசிக்க

12/10/2011 by சம்பத்குமார் · 36

;