November 29, 2011

பதறவைக்கும் செல்போன் பயன்பாடுகள்


வணக்கம் நண்பர்களே மீண்டுமொரு குழந்தைகளுக்கான பதிவின் வழியாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.இன்றைய பதிவில் குழந்தைகளின் செல்போன் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளும் அதனால் ஏற்படும் இழப்புகளைப் பற்றியும் ஓர் விரிவான அலசல்.மற்றவர்களிடம் பேசுவதற்காக கண்டறியப் பட்ட செல்போனில் ஏராளமான வசதிகள் நாளுக்கு நாள் இணைக்கப்பட்டு கொண்டே வருகிறது. பாட்டு கேட்கலாம். போட்டோ, வீடியோ எடுக்கலாம். குரலை பதிவு செய்து வைக்கலாம். இணையம் பார்க்கலாம். வசதிகள் சேர சேர தொல்லைகள் தான் அதிகமாகிறது.செல்போன் என்பது மற்றவர்களை எளிதாக தொடர்பு கொள்வதற்கான சாதனம். ஆனால் அதனால்தான் இன்று மனிதர்களுக்கு இடையே தொடர்புகளே குறைந்து வருகிறது. முக்கியமாக குடும்பத்திற்குள்.மனிதர்கள் யாரும் இப்போது மனிதர்களோடு பேசுவதில்லை. செல்போன்களோடு மட்டும்தான் பேசுகிறார்கள்.சில நண்பர்களை நேரில் போய்ப் பார்ப்பதைவிட போனில் பேசிவிடுவது நல்லது. நேரில் போனால்கூட அவர்கள் நம்மையும் உட்கார வைத்துக்கொண்டு செல்போனில்தான் பேசிக் கொண்டிருப்பார்கள்.நண்பரின் வீட்டிற்க்கு சென்றிருந்தேன்.என்னை உட்கார வைத்துவிட்டு செல்போனில் கடைசிவரை பேசிக்கொண்டே இருந்தார்.பிஸியாக இருந்த நண்பருக்கு நான் அங்கிருந்தே போன் செய்தேன். என் நம்பரை பார்த்தவுடன் அதிர்ச்சியாகி, உன்னோட போன் நம்பர் வருது என்றார். ஆமா நேர்லதான் பேச முடியல அதான் போன்ல பேசலாம்னு போன் செய்தேன் என்றேன்.இதுபோன்று அலுவலகங்களில் மேலதிகாரிகள் தனக்கு கீழே வேலைபார்ப்பவர்களை அல்லது தன்னை பார்க்கவரும் விற்பனைப்பிரதிநிதிகளை பார்க்காமல் தவிர்ப்பதற்க்கு செல்போனில் பேசுவதைப்போன்று பாவ்லா காட்டுவது அநேகமாக ஒவ்வொரு இடத்திலும் தற்போது நடந்துகொண்டிருக்கிறது.

இன்று சிங்கிள்சிம் செல்போன் வைத்திருப்பது பேஷன் என்ற நிலை தாண்டி டூயல்சிம் செல்போன் வைத்திருப்பதுதான் ஸ்டைல் என்றாகி விட்டது. புதிதாக சந்தையில் என்ன மாடல் வந்திருக்கிறது என்று தெரிந்துகொள்வதிலும் அதை உடனடியாக வாங்க வேண்டும் என்பதிலும் உள்ள மனவேகம் இன்று எல்லோரிடமும் அதிகரித்துவருகிறது. சாலையில் சிலர் தனியாக பேசிக்கொண்டு போகிறார்கள். விசாரித்தபின்தான் தெரிகிறது காதில் ப்ளூ டூத் வைத்திருக்கிறார்கள் என்பது.வீட்டில் ஹாலில்தான் எப்போதும் போன் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்தால் இப்போது இவர்கள் குளியலறையையும், கழிப்பறையையும்கூட விட்டு வைப்பதில்லை. அங்கேயும் போய் போன்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.இதெல்லாம் பரவாயில்லை பலரும் இப்போது ரயில்வே டிராக்கையும், சாலைகளையும் கடக்கும் போதும் ஏன் வாகனம் ஒட்டும்போதும் கூட செல்போன் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.செல்போன் பேசிக்கொண்டே சாலையை கடப்பதால் அதிகரிக்கும் விபத்துக்கள் பற்றிய செய்திகளை படித்தவர்களும் கூட நாம் கவனமாக இருப்போம் என்ற குருட்டு தைரியத்தில் சாலையைக் கடந்து அடிபட்டு சாகிறார்கள்.கார் ஒட்டும்போது போன் வந்தால் பேசாதீர்கள், அழைப்பது எமனாக கூட இருக்கலாம் என்று எழுதி வைத்திருப்பது இவர்கள் கண்ணில் படுவதேயில்லை, எப்போதும் போன் பேசிக்கொண்டிருப்பதால்.விடுமுறையில் சுற்றுலா சென்றால்கூட அங்கே குழந்தைகளோடு பேசாமல் செல்போனோடு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.வேலை பார்க்கிற இடங்களில் சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை நேரத்தில் போன் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். நிறுவனங்கள் ஒன்றும் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றன.


பொது இடங்களில் அதிக சத்தமாக பேசுவது தன்னிடம் சொல்வதை ஸ்பீக்கர் போட்டு மற்றவர்களையும் கேட்கச்செய்து நம்பிக்கை மோசடி செய்வது என்று செல்போன் மனிதர்களிடம் இருக்க வேண்டிய அடிப்படை நாகரிகத்தை குறைத்துவிட்டது.அமைதியாக இருக்க வேண்டிய இடங்களான ஹாஸ்பிடல் பிரார்த்தனை கூடங்களில் கூட செல்போன் மணி விடாது ஒலித்துக் கொண்டிருக்கிறது.செல்போன் குற்றங்கள் என்று வகைப் படுத்துகிற அளவிற்கு செல்போனால் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.எப்போதும் செல்போனை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்களா? சும்மா இருக்கும்போது எதுவும் செய்தி வந்திருக்கிறதா என்று அடிக்கடி பார்க்கிறீர்களா? யாருக்கு இப்போது பேசலாம் என்று யோசிக்கிறீர்களா? நீங்கள் செல்போன் பைத்தியமாகிவிட்டீர்கள் என்று அர்த்தம். அந்த அளவுக்கு போகவில்லை என்கிறீர்களா அப்படியெனில் வெகு சீக்கிரத்தில் நீங்கள் அப்படி ஆகப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

பெரியவர்களை விட குழந்தைகளைத்தான் செல்போன் அதிகம் பாதிக்கிறது. மற்ற சாதனங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி கடந்த பத்தாண்டுகளில் வேகமாக மாணவர்களிடம் பரவிவிட்டது இந்த செல்போன் கலாச்சாரம்.பள்ளிகளில் கல்லூரிகளில் வகுப்பில் பாடங்கள் நடந்து கொண்டிருக்கும்போதே அடுத்த வரிசை பையனுக்கோ பெண்ணிற்கோ குறுஞ்செய்தி அனுப்பி ஆசிரியரை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.பகல் முழுவதும் பள்ளி டியூஷன் என்றிருக்கும் குழந்தைகள் இரவு பத்துமணிக்கு மேல் செல்போனை எடுத்தால் நடுநிசி ஒருமணி வரை கூட கீழே வைப்பதில்லை.இதனால் தூக்கம் கெடுவது மட்டுமல்ல. காது சூடாகி செவித்திறன் பாதிக்கப்படும் என்பது மட்டுமல்ல, மனநிலை கூட பாதிக்கப்படலாம்.


பலருக்கு பகலிலேயே செல்போன் ஒலிக்காமலேயே ஒலிப்பது போன்ற பிரமை ஏற்படுகிறது. குழந்தைகள் வீட்டிற்கு தெரியாமல் ஒரு சிம் கார்டு வைத்திருக்கிறார்கள் என்கிறது ஒரு பகீர் தகவல். தன்னுடைய பாய் அல்லது கேர்ள் ப்ரெண்டுக்கு மட்டுமே அந்த எண்ணை தருவார்கள்.பெண் பிள்ளைகளுக்கு புதிய நம்பரில் இருந்து போன் வரும் அல்லது எஸ்.எம்.எஸ். வரும். யார் என விசாரித்து போன் செய்தால் அவர்கள் சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்கிறார்கள் என்று அர்த்தம்.பெற்றோர்களே உங்கள் குழந்தைகளின் செல்போனை வாங்கி அவர்கள் அதில் எவ்வளவு நேரம் பேசியிருக்கிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் வாழ்நாளில் உங்களிடம் பேசியதை விட அதிகமாக செல்போனில் பேசியிருப்பதைப் பார்த்து உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படக்கூடும்.நாள் முழுவதும் மூளையை மழுங்கடிக்கும் விளையாட்டுகளை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் தவறான படங்கள் வாங்கி செல்போனில் சேமித்து வைத்துக் கொள்கிறார்கள். வினை விதைத்துவிட்டோம். இனி வேறு வழியில்லை . அதை அறுவடை செய்தே ஆகவேண்டிய கட்டாயத்தில்தான் இன்று இருக்கிறோம்.இதனை தவிர்க்க ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் போனில் பேசுவதற்கும் எஸ்.எம்.எஸ் படிப்பதற்கும் அனுப்புவதற்கும் செலவிடுகிறார்கள் என குறித்து வையுங்கள்.வீட்டில் செல்போனுக்கு என்ற ஒதுக்கப்பட்ட நேரம் தவிர மற்ற நேரத்தில் பயன் படுத்தாதீர்கள். இரவு ஒன்பது மணிக்கு மேல் குழந்தைகளின் செல்போனை வாங்கி அணைத்து வைத்து விடுங்கள்

ஏற்கனவே செல்போனால் உறவுகளை இழந்து விட்டோம். ஏன் சில உயிர்களைக் கூட இழந்து விட்டோம். சுருக்க எஸ்.எம்.எஸ் அனுப்பி வார்த்தைகளை இழந்துவிட்டோம். சொற்களின் அர்த்தங்களை இழந்து விட்டோம். வாழ்க்கையில் அர்த்தமே தொலைந்துவிட்ட பிறகு சொற்களின் அர்த்தம் பற்றியா கவலைப்பட முடியும் ?

இனிமேலும் இதில் இழக்கப்போவது இவைகளாக இருக்கலாம்..

  • இனி முகம் பார்த்து மனிதர்கள் பேசுவது அரிதாய் மாறிப்போகலாம்.
  • இப்போதே இப்படி இருக்கிறதே. இனி எதிர்காலம் எப்படி இருக்கும்?
  • பள்ளிகள் தொடங்கி எல்லா இடங்களிலும் உணவு இடைவேளை போல நாளை செல்போன் இடைவேளை கொடுக்க வேண்டி வரும்.
  • வரும் காலங்களில் ஆடைகள் அணியாத மனிதர்களைகூட பார்க்கலாம். செல்போன் இல்லாத மனிதர்களை பார்க்க முடியாது.
  • செல்போன்கள் நவீன சிகரெட் என்று சொல்லலாம். ஏனெனில் இனி நோ ஸ்மோக்கிங் ஏரியா என்பது போல நோ ஸ்பீக்கிங் செல்போன் ஏரியா அமைக்கப் பட்டு பொது இடங்களில் போன் பேசக்கூடாது என்று வரலாம்.
  • பாக்கெட்டிற்கு பதில் காதுக்குள்ளேயே செல்போனை வைத்துக்கொள்கிற காலம் வரலாம். 
  • நண்பர்களே செல்போன் பயன்பாடு வாழ்க்கைக்கு முக்கியத்தேவைதான் எனினும் அதிலேயே முழுநேரமும் செலவிடுவது கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டுமல்லவா..?பதிவினை சுவாசித்துவிட்டு தங்களது எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்..

மேலும் வாசிக்க

11/29/2011 by சம்பத்குமார் · 22

November 24, 2011

அம்மா சொன்ன வார்த்தைகள்
வறண்ட ஏரிக்குள் கம்மங்காடு
காவல் காக்கும் மூத்த பையனுக்கு
கூழெடுத்து வருவாள் அம்மா...!

பசிதீர்ந்த களைப்பில் தூங்குவான் மூத்தவன்
மிச்சக்கூழை அம்மா குடிப்பாள்...!

தூங்க மாட்டாள் அம்மா
தலையில் கூடை சுமந்து
சாணம் வேண்டி மாடுகள் பின்னால்
செருப்பற்ற காலுடன் ஏரிக்குள் சுற்றுவாள்...!

குட்டைக்குப் போன மூத்தவன்
பானையில் தண்ணீர் தருவான்
துணி அழுத்திய பொத்தலில் தண்ணீர் கசியும்...


இருவரும் சேர்ந்து சாணம் மிதிப்பார்கள்
உருட்டி உருட்டி தருவான் மூத்தவன்
விரல்தடம் பதியத் தட்டுவாள் அம்மா...!”எருமுட்ட வித்ததும் கண்டிப்பா ஒனக்கு
இந்த தரமாச்சும் பேனா வாங்கலாம்”

புதுப்பேனா கனவில் மூத்தவன்
மனசறிந்து ஏமாற்றும் கவலையில் அம்மா
இருட்டின் தடத்தில் வீடு திரும்புவார்கள்...!

இரைச்சல் தணிந்த இரவு
அப்பா வருவது எப்போதும் தாமதம்
நிலா தொடும் வாசலில் பாய்விரிந்து கிடக்கும்
வந்து உட்கார்வாள் அம்மா..
தொடையில் சாய்ந்து படுப்பான் மூத்தவன்
மடியில் முகம் புதைப்பாள் இளையவள்...!

கர்ணன் கதைதான் ரொம்ப பிடிக்கும்
திரும்பத் திரும்பச் சொல்வாள் அம்மா
குள்ளநரிக்கதையும் மிளகாய்க் கதையும்
கொக்கு நண்டுக் கதையும்
இளையவளுக்கென்று தனியே சொல்வாள்...!

அசந்து தூங்குவாள் இளையவள்
மேலும் கதைகள் வேண்டுவான் மூத்தவன்
சிரித்தபடியே தொடர்வாள் அம்மா
பிஞ்சு விரல்களைப் பற்றி
கண்கள் தளும்ப ஆவலாய்க் கேட்பான்...”இந்த கைதான் அப்பாவக் காப்பாத்துமாமா
இந்த கைதான் கஞ்சி ஊத்துமா
இந்த கைதான் சந்தோஷமா வச்சிக்குமா”

பத்து வயதில் கேட்ட கோரிக்கை
ஆணி எழுத்தாய் பதிந்து கிடக்கிறது...!

உள்ளூரிலேயே பள்ளிப் படிப்பு
பக்கத்தூர்க் கல்லூரியில் பி.காம் முடித்தான்

குடும்பக் கவலைகள் கோடி இருந்தது
படிக்கிற ஆசை நுரையாய் உடைந்தது...!

”படிச்சுக் கிழிச்சது போதும்
வேலைக்கு அனுப்புடி தொழிலாச்சும் கத்துக்கலாம்”

அப்பாவின் குரலில் இயலாமை வெடித்தது
பரிந்து பேச அம்மா முயல்கையில்
ராத்திரி தோறும் ரகளை நடந்தது...

“நீயாச்சும் வளைந்து குடேன்டா”

அழுது அழுது களைத்தான் மூத்தவன்..!
பொங்கல்திருவிழாவுக்கு போன இடத்தில்
வீட்டில் வைத்து மாமா சொன்னார்
”ஆசப்படறவனை எதுக்குத் தடுக்கணும்
நம்ம வீட்ல தங்கிப் படிக்கட்டும் அனுப்புங்க”

மாமாவின் வார்த்தைக்கு அப்பா அடங்கினார்

மூக்குத்தி மோதிரம் வளையலை அடகுவைத்து
பணம் கொண்டு வந்து அம்மா தந்தாள்
இளைய கைகளைப் பற்றி

கண்ணீர் கலங்க மெதுவாய்ச் சொன்னாள்...!

“எட்டுப் புள்ளைங்க இருக்கிற ஊடு
தத்துப் புள்ளையா இருந்து படிக்கணும்
எல்லாரோடையும் அன்பா பழகு
அன்புதான் முதல் படிப்பு
அதுக்கப்பறம் தான் பட்டப்படிப்பு”
படங்கள் : கூகுள் தேடல்


நண்பர்களே.. அம்மாவின் வார்த்தைகள் கவிதை பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்

மேலும் வாசிக்க

11/24/2011 by சம்பத்குமார் · 19

November 23, 2011

வேண்டாம் இந்த ஆசிரியர் பணி

வணக்கம் நண்பர்களே ! நேற்றைய பதிவினை சுவாசித்து வாழ்த்திய அனைத்து நல் இதயங்களுக்கு மிக்க நன்றி.இன்றைய பதிவில் பெற்றோர்கள் குழந்தைகளிடம் காட்டும் ஆசிரியர் பணி பற்றிய ஓர் விரிவான அலசல். பொதுவாகவே எதையும் கற்றுத்தருவதை விட கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துவதுதான் பெற்றோர்களின் கடமை. ஆனால் பல பெற்றோர்கள் குழந்தைகளின் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை சிதைத்து எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்து விடுகிறார்கள்.கற்றுக்கொள்வது என்பது இயற்கையிலேயே குழந்தைகளுக்கு உள்ள இயல்பு. அதனால்தான் குழந்தைகள் கண்ணில்படும் எல்லாவற்றையும் எடுக்க முயற்சிக்கிறது. நாற்காலியைப்பார்த்தால் இழுக்க முயற்சிக்கிறது. செல்போனைப் பார்த்தால் பேச முயற்சிக் கிறது. புத்தகதை கையில் எடுத்தால் கிழிக்க் முயர்ச்சிக்கிறது ஆனால் இதெல்லாம் நடக்கும்போது நாம் சொல்லும் ஒரே வார்த்தை செய்யாதே. ஆக கற்கும் ஆர்வத்தை நாம்தான் எடுக்காதே, இழுக்காதே, தொடாதே என சொல்லி சொல்லி குறைத்து விடுகிறோம்.

குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது. அவர்களுக்கு நாம்தான் எல்லாவற்றையும் கற்றுத் தரவேண்டும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஓரிரு நாள் அமைதியாக குழந்தைகளை வேடிக்கை பாருங்கள். அவர்களிடம் நாம் கற்றுக் கொள்ள நிறைய பாடங்கள் இருக்கிறது என்பதை நிச்சயமாய் உணர்வீர்கள்.வீட்டில் குழந்தையை கவனித்துப் பார்த்தால், எதன் மீதாவது ஏறி இடறி விழுந்து அடிபட்டிருந்தாலும் மறுபடியும் அதன்மீது ஏறுவார்கள். சேரை இழுத்துப்போட்டு எதையோ எடுக்க ஏறுகிறார்கள். இடறி விழுந்து கையில் கட்டுப்போடும்படி ஆகிவிட்டது என்றாலும் கட்டுப்போட்ட நிலையிலேயே ஏறுவார்கள். ‘நம்மால் ஏறமுடியாது. ஏறினால் விழுந்து விடுவோம்’ என்று அவர்கள் நினைப்பதில்லை. அந்த வயதில் ‘முடியும்’ என்பதை மட்டும்தான் நினைக்கிறார்கள்.

இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது இந்த உலகத்திற்கு வரும் போது ஒவ்வொரு குழந்தையும் ‘முடியும்’ என்ற வெற்றிச் சிந்தனையுடன்தான் வருகிறது.ஆனால் வளர்ந்த பிறகு ஒன்றிரண்டு தேர்வுகளில் பெயிலாகி விடுகிறது. ‘எனக்கு படிப்பு வராது. என்னால் படிக்க முடியாது’ என்கிறது. இன்னும் கொஞ்சம் வளர்ந்து விடுகிறது. இப்போது பிஸினஸ் செய்கிறது . பிஸினஸில் தோல்வி வருகிறது. ‘எனக்கு பிஸினஸ் லாயக்கில்லை. என்னால் பிஸினஸ் செய்ய முடியாது’ என்கிறது.முடியும் என்ற ஒரே சிந்தனை மட்டுமே கொண்டிருந்த அவர்கள், வளர்ந்த பிறகு ‘முடியாது’ என்று மாறியது எப்படி ? இதற்கு காரணம் நாம் செய்கிற ஆசிரியர் வேலைதானே. அதிலும் முடியும் என்பதை விட முடியாது என்பதைத்தான் அதிகம் குழந்தை களுக்கு சொல்லிக்கொடுக்கிறோம்.

எப்போது பார்த்தாலும் எதையாவது கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம். ‘அங்க போகாதே. அப்படி ஆயிடும். இதைச் செய்யாதே இப்படி ஆயிடும்.மேலும் படித்தால்தான் எதிர்காலம் என்ற பாடத்தை நாம் நம் குழந்தைகளுக்கு கதறக்கதற தினமும் கற்றுத் தருகிறோம். அதற்கு பதில் பல்வேறு வேலைக்கு செல்கிறவர்களை சந்திக்கச் செய்யுங்கள். அவர்கள் செய்யும் வேலை, அவர்களின் வாழ்க்கை தரம் ஆகியவற்றை காண்பித்து இதிலிருந்து என்ன புரிகிறது என்று கேளுங்கள்.என்ன படித்திருக்கிறார்களோ, அதற்கேற்ற வேலை. அதற்கேற்ற சம்பளம் அதற்கேற்ற வாழ்க்கை முறைதான் அமைகிறது . எனவே நாமும் நன்றாக படித்து அறிவில் சிறந்து வாழ்வில் உயர வேண்டும் என்று அவர்களாக பாடம் கற்பார்கள்.  எப்போது பார்த்தாலும் எதையாவது கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்காதீர்கள். குழந்தைகளுக்கு ஒவ்வொன்றையும் கற்றுத் தரும்போதும் அதை அவர்களாக கற்பதிலிருந்து நாம் தடை செய்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். பல பெற்றோர்கள் வீட்டில் அப்பா அம்மாவாக இருப்பதில்லை. டீச்சராக மாறி எப்போதும் எதைப்பற்றியாவது பாடம் நடத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒரு குட்டிக்கதை

பள்ளி முடிந்து வந்த தன் குழந்தையை உட்கார வைத்து வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தார் அம்மா. ஒவ்வொன்றையுமே ஒரு முறைக்கு இரு முறை சொல்ல வேண்டி இருந்தது. இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருப்பதால் அம்மா சீக்கிரம் சலிப்படைந்து கத்த ஆரம்பித்தார். “ஒவ்வொன்னையும் எத்தனை தடவ சொல்லித் தர்றது. ஒரு தடவ சொன்னா புரிஞ்சுக்கிறதுல்ல.. உன் வயசுல உள்ள குழந்தைங்க எல்லாம் தானா உட்கார்ந்து ஹோம் ஒர்க் செய்யுதுங்க..” என்று துவங்கிய அர்ச்சனை இரவு உணவு வரை நீண்டது.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. புதிதாக வாங்கியிருந்த இரண்டு சக்கர வாகனத்தை எப்படி ஓட்ட வேண்டும் என்று குழந்தையின் அம்மாவுக்கு அவனது அப்பா சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். வண்டியை ஸ்டார்ட் செய்து காண்பித்து, ‘இப்போது நீ செய்’ என்று அம்மா கைக்கு வண்டி வரும். ஏறி உட்கார்ந்து பட்டனை அழுத்த, வண்டி ஸ்டார்ட் ஆவதற்கான சத்தம் எல்லாம் செய்து கடைசியில் போக்கு காட்டி அணைந்து விடும். அப்பா சலித்து விட்டார். கத்த ஆரம்பித்தார்.. “ஒவ்வொன்னையும் எத்தனை தடவ சொல்லித்தர்றது. ஒரு தடவ சொன்னா புரிஞ்சுக்கிறதுல்ல..”

இதை பார்த்துக் கொண்டிருந்த குழந்தை குறுக்கிட்டு, “திட்டாம சொல்லிக் கொடுங்கப்பா.. திட்டிக்கிட்டே சொல்லிக்கொடுத்தா பதட்டத்திலேயே தப்புத்தப்பாதான் வரும். பாவம்பா அம்மா. ப்ளீஸ் திட்டாம சொல்லிக் கொடுங்ப்பா.” என்று கூறியது.குழந்தை இப்படிச்சொன்னதும் வண்டியிலிருந்து தாவிக்குதித்த அம்மா குழந்தையை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து சொன்னார், “இனிமேல் நான் உனக்கு கற்றுக் கொடுக்கும் டீச்சர் இல்லை என்று.

நீங்களும், உங்கள் குழந்தைகளிடமிருந்து கற்றுக் கொள்ளத்தயாராக இருந்தால் உங்கள் குழந்தைகளும் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ளும். நீங்கள் ஆசிரியராக வேண்டிய அவசியமே இருக்காது.

நன்றி அறிவிப்பு :

உறவுகளே பதிவு எழுத ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை,வருங்காலத்திற்காக சேகரித்த முத்துக்களின் எண்ணிக்கை நூறாக உயர்ந்துள்ளது.இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தமிழ்பேரண்ட்ஸ் வலைத்தளத்தினையும் அங்கீகரத்து ஆதரவளித்த,ஆதரவளித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி! நன்றி!! நன்றி!!!

உங்களது ஆதரவோடு எனது பயணம் தொடரும் நண்பர்களே…மறக்காமல் பதிவினைப் பற்றிய தங்களது எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்மேலும் வாசிக்க

11/23/2011 by சம்பத்குமார் · 35

November 22, 2011

செத்தும் கொடுத்த சீதக்காதி
எண்ணெய் காணாச் சிகையென
சீறிச்சிலிர்க்கும் கூரைக்குள்
சுதந்திரமாய் வேர்விடும்
சூரிய விழுதுகள்...!

காற்று மழையோடு
போரிட்டுப்பெற்ற
விழுப்புண் பொத்தலில்
கூச்சமின்றி நுழைந்து
வெளிச்ச விரலால் தரை தழுவும்
நிலவின் குறும்பு...!அதியிருளென வெளிச்சம் விதைத்தால்
ஒளி உண்ணச் சூழும்
தற்கொலைப்படை விட்டில்கள்...!

பட்டினிப் படிமமாய்
புதைந்து புரையோடிய
மூங்கில் கால்கள்...!

வளைந்து மெலிந்து…
மண்சுவரையும் தாக்கியது
இளம்பிள்ளை வாதம்...!ஆதிக்கப் பாடமெடுக்கும்...
குணிவது பணிவன்று
முன் வாசல்...!


ஆயினும்...
நீர்பிரளயத்தின் குட்டி ஒத்திகைக்கும்
அக்னிக் குளியலுக்கும்,
மூழ்கி, சரிந்து,
மூச்சுத் திணறி, கருகி
செத்தும் கொடுத்தது


ஐந்து கிலோ அரிசியுடன்
புடவையும்… வேட்டியும்..


பாவிகள் அதிலும் ஊழல் செய்கிறார்களே...!


படங்கள் ; கூகுள் தேடல்
டிஸ்கி :

1. படங்களுக்கும் ஊழலுக்கும் சம்பந்தமில்லை.

2.செத்தும் கொடுத்த சீதக்காதி இதன் மூலக்கதை அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்

நண்பர்களே ! கவிதை பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்
மேலும் வாசிக்க

11/22/2011 by சம்பத்குமார் · 19

November 21, 2011

கேள்விக்கு பதில் என்ன ?
நெல்லும் கரும்பும் விளைந்த 
வயலில்அடுக்கு மாளிகயின் 
அஸ்திவாரப் பள்ளத்தை
தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்...!

எந்திரமாய் இயங்கும்
பெண்களின் கைகளில்
மண்சட்டிகள் மாறி மாறி 
கரையேருகின்றன...!

ஆண்கள் உயர்த்தும் 
கடப்பாரைகள்பூமித்தாயின் 
மார்பை குத்திக் கிழிக்கின்றன...!
வேகத்தைக் கண்டு 
வியப்பில் கண்மலர
வேடிக்கை பார்க்கிறான் 
ஓர் சிறுவன்...!

பச்சை வயல்களை ஏன் அழிக்கிறீர்கள்
என்றவன் கேட்கவில்லை...!

நெல்லும் கரும்பும் இனி எப்படி விளையும்
என்று அவன் கேட்கவில்லை...!

நெல் இல்லாமல் இருப்பது எப்படி
என்று அவன் கேட்கவில்லை...!

இப்படியே சென்றால் இந்த உலகம் இருக்குமோ
என்றும் அவன் கேட்கவில்லை...!
இனி தும்பிகளை எங்கே போய்த்தேடுவது
என்றும் அவன் கேட்கவில்லை...!

இன்று அவன் ஒரு அப்பாவிச் சிறுவன்

மோசடிக் கும்பலின் நாசகாரியம்
முடிவுற்றப் பின்னாலாவது...!

இக்கேள்விகளை முன்வைக்கக் கூடும் அவன்


அப்போது இப்பூலகம் தரும் பதில் என்ன ?
உறவுகளே..நேரமிருந்தால் இங்கேயும் சென்று பெற்றோர்களை அச்சுறுத்தக்கூடிய நோயின் அறிகுறிகளை அறிந்துகொள்ளுங்கள்

நண்பர்களே பதிவினை சுவாசித்துவிட்டு தங்கள் எண்ணங்களை கருத்துக்களாய் பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்..

மேலும் வாசிக்க

11/21/2011 by சம்பத்குமார் · 27

November 20, 2011

வாடகை வீடு
விட்டுச் சென்றதும் 
குடிவைத்துக் கொள்ள...

ஆள்கிடைத்த மகிழ்ச்சியில்
நாள் கடந்து போனதை 
ஞாபகமூட்டுகிறார் உரிமையாளர்..!

அன்புக்குரிய உரிமையாளரே...
பெட்டிகள் படுக்கை மின்விசிறி

தொலைக்காட்சிமுதல் எரிவாயுஅடுப்பு வரை
மூட்டை கட்டிக்கொண்டிருக்கிறோம்...!

வாடகை வண்டி வந்ததும்
ஏற்றிக்கொண்டு கிளம்புகிறோம்...!கொண்டு செல்ல முடியாத சொத்தாக
பின்புறத்தில் நிற்கிறது ஓர் மரம்...!

எங்களை நினைவூட்டினாலும்
எங்களைப் போல் இருக்காது அது...!

குழாயில் தண்ணீரை ஏன் நிறுத்தினீர்கள்
என்று ஒருபோதும் கேட்காது...

மின்சார நேரத்தைக் கூட்டச்சொல்லி
முற்றத்தை மறித்து குழையாது...

மழை புயல் கஷ்டங்களை முன்வைத்து
பழுது பார்க்கவும் வேண்டாது...ஊரிலிருந்து உறவினர்கள் வந்தாலும்
உங்களைப்போல் வருத்தப்படாது..


நேருக்கு நேர் பார்த்தாலும்
எவ்வித சங்கடமும் தராது

வருத்தமோ கசப்போ எங்களோடு போகட்டும்

நாங்கள் வளர்த்த மரத்துக்காவது
கருணை காட்டுங்கள்..

நண்பர்களே..! கவிதை பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்..மேலும் வாசிக்க

11/20/2011 by சம்பத்குமார் · 13

November 19, 2011

காப்பியடித்தலும் அதன் காரணங்களும்..


வணக்கம் நண்பர்களே ! மற்றுமொரு குழந்தைகளுக்கான பதிவின் வழியே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.இன்றைய பதிவில் குழந்தைகள் தேர்வில் காப்பியடிப்பதற்கான காரணங்கள் பற்றி அலசப் போகிறோம்.பொதுவாக மனிதப்பிறவியில் திருமணத்திற்கு முன் சமைக்கத் தெரியுமா? சம்பாதிக்கத் தெரியுமா? என்று தகுதி பார்க்கிற மாதிரி ஒரு உயிரை வளர்த்தெடுக்கிற ஆற்றல் இருக்கிறதா? அதற்கான தகுதி இருக்கிறதா? என்றெல்லாம் குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்கு முன் பார்ப்பதில்லை.பொறுமை, நிதானம், இதெல்லாம் அருகிவரும் பழக்கமாகிவிட்டது. குழந்தைகள் தவறு செய்தால் திட்டுவதும் அடிப்பதும் மட்டுமே பெற்றோர்களுக்கு தெரிந்த தீர்வாக இருக்கிறது. 

உதாரணத்திற்க்கு உங்கள் செல்போன் பழுதடைந்து விட்டது என்று வைத்துக்கொள்வோம். உங்களால் சரி செய்ய முடியுமா? முடியாது. காரணம் பழுதுநீக்கும் முறைகள் தெரியாது.செல்போன் சரிசெய்ய முடியாததும் அல்ல. உங்களால் அதன் மெக்கானிசத்தை கற்றுக்கொள்ள முடியாது என்பதும் கிடையாது. ஆனால் கடையில் கொடுத்து சரி செய்து கொள்கிறீர்கள். காரணம் நேரம் இல்லை. செல்போன் விஷயத்தில் அப்படி இருக்கலாம். குழந்தைகள் விஷயத்தில் அப்படி இருக்கலாமா? உங்கள் குழந்தை தவறு செய்தால் ஒருநாளும் அவர்கள் திருந்தமாட்டார்கள் என்று அர்த்தம் கிடையாது. உங்களுக்கு திருத்தும் மெக்கானிசம் தெரியாது அவ்வளவுதான். தெரிந்துகொள்ள தேவையான முயற்சியும் எடுக்கவில்லை.சரிவர வேலை செய்யாத செல்போனை ரெண்டு தட்டுத்தட்டி சரி செய்யும் பழைய குருட்டு மெக்கானிசதத்தைதான் குழந்தைகள் விஷயத்திலும் பலரும் கடைபிடிக்கிறார்கள். 

உங்கள் குழந்தை காப்பியடிக்கிறது அல்லது பிராகரஸ் கார்டில் கையெழுத்துப் போடுகிறது என்றால் காரணம் யார் ? மாற்றமே இல்லாமல் நீங்கள்தான். முதலில், ஏன் காப்பியடிக்கிறார்கள்? என்று யோசித்துப் பாருங்கள்.பெற்றோர் மேல் உள்ள பயம்தான் காப்பியடிக்கவும், பொய் சொல்லவும், ஏன், பிராகரஸ் ரிப்போர்டில் கையெழுத்துப் போடவும் காரணமாகிறது.தன்னால் முடியாது என்று முடிவெடுக்கிறபோதுதான் எப்படியாவது மதிப்பெண் பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் காப்பியடிப்பது, புத்தகத்தை கிழித்து பிட் எடுத்துக்கொண்டு போவது போன்ற தேர்வறை குற்றங்களில் மாணவர்கள் ஈடுபடுகிறார்கள். ஒன்றை அடைவது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் அதை எப்படி அடைகிறோம் என்பதும் என்று நம் குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தராததன் விளைவுதான் இந்த தவறுகள்.மதிப்பெண் குறைவதால் ஏற்படும் அவமானத்தைவிட காப்பியடிப்பது ஒன்றும் பெரிய அவமானம் இல்லை என்று நினைப்பதால்தானே நம் குழந்தைகள் காப்பியடிக்கிறார்கள். 

மதிப்பெண் ரிப்போட்டில் உங்கள் கையெழுத்தை அவர்கள் போடுவது தவறுதான். ஆனால், ஒரு நிமிடம் யோசித்துப்பாருங்கள். உங்களிடம் காட்ட முடியாமல் இரண்டு நாளாக ஸ்கூல் பேக்கில் வைத்துக்கொண்டு அவர்கள் எப்படியெல்லாம் தவித்துப்போய் இருப்பார்கள். எந்த அளவிற்கு பயமும் குற்றவுணர்ச்சியும் அடைந்திருப்பார்கள். கையெழுத்துப் போடும்போது எந்த அளவிற்கு உள்ளூர நடுங்கியிருப்பார்கள். உங்கள் மேல் இத்தனை பயத்தை ஏற்படுத்தியது, உங்கள் தவறு என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? பெற்றோர் மேல் இருக்க வேண்டியது மரியாதைதானே தவிர பயம் அல்ல. உங்களைப் பார்த்து உங்கள் குழந்தைகள் பயப்படுகிறது, பொய்சொல்கிறது என்றால் ஒரு பெற்றோராக நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்று அர்த்தம். உண்மை சொல்கிற அளவிற்கு நீங்கள் நடந்து கொள்ளவில்லை என்று அர்த்தம். 

வகுப்பு ஆசிரியர் கூப்பிட்டு உங்களிடம் சொல்வது, அவமானம் அல்ல, குழந்தைகளை இந்த நிலையில் நாம் வைத்திருக்கிறோம் என்பதுதான் அவமானம். உங்கள் குழந்தைகள் தேர்வில் வெற்றியடைவதை விடவும் முக்கியம், நீங்கள் பெற்றோராய் தோற்றுப் போகாமலிருப்பது. கணவன் மனைவிக்குள் சிறு சச்சரவு வந்து ஒருவரை ஒருவர் கோபித்துக்கொண்டால் அன்றைய பணிகளை உற்சாகமாக செய்ய முடிகிறதா? இல்லையே. சோர்வு அதிகரித்து எந்த வேலையும் செய்யப் பிடிப்பதில்லை. நாம் திட்டினாலும் அடித்தாலும் நம் குழந்தைகளுக்கும் இதே நிலைதான். ஒவ்வொரு மாதமும் என்ன மார்க்? என்று கேட்டு திட்டுவதற்கு பதிலாக ஒவ்வொரு நாளும் இன்று என்ன கற்றுக்கொண்டாய்? என்று கேட்டு விளக்கச் சொல்லியிருந்தால் மதிப்பெண்ணிற்காக மண்டை காயாமல் கற்றுக்கொள்வதில் கவனம் செலுத்தியிருப்பார்கள். கற்றுக்கொள்வதை நீங்கள் அக்கறையோடு கேட்பதைப் பார்த்து உற்சாகம் அடைந்திருப்பார்கள். நிச்சயம் மதிப்பெண்ணிலும் மேம்பட்டிருப்பார்கள். 

ஒருவர் சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால் உற்சாகப்படுத்த வேண்டுமா? அல்லது திட்டவோ அடிக்கவோ வேண்டுமா? என்று யோசித்துப்பாருங்கள் பெற்றோர் என்ற வார்த்தைக்கு குழந்தையின் பெற்றோர் என்று மட்டும் அர்த்தம் அல்ல வளர்ப்போர் என்ற அர்த்தமும் கூடத்தானே...
உறவுகளே தங்களுக்கு நேரமிருந்தால் இதனையும் வாசிக்கலாமே...Is Your Child Ready For Kindergarten..?

நண்பர்களே பதிவு பித்திருந்தால் தங்களது கருத்துக்களை மறக்காமல் பகிர்ந்து விட்டுச் செல்லலாமே..மேலும் வாசிக்க

11/19/2011 by சம்பத்குமார் · 33

November 18, 2011

கருச்சிதைவு
இந்நேரம்...

எதிர்வீட்டுக் குழந்தை போல்..
நர்சரிக்குச் செல்லும் பொம்மைகள்போல்..

சின்னத்தேர் போல்..
இருந்திருப்பாய்...!

அழகழகாய் மழலை பேசி...
பிஞ்சுக் கால்களில் கொலுசணிந்து...
முகத்தில் எட்டி உதைத்திருப்பாய்...!

சீருடையணிந்து...
தினமும் காலையில்...
ஒழுங்காய் பள்ளிக்குச் சென்றிருப்பாய்....!
தூக்கம் வராத இரவுகளில்..
முதுகின் மேல் ஏறி...
யானையேற்றம் பழகியிருப்பாய்...!

ஆனாலும்
நீ எதிர்கொள்ள வேண்டிய...

ஸ்டவ் வெடிப்புகளைவிட...
பெல்ட் உதைகளைவிட..

புகுந்த வீட்டாரின்
நெருப்பு வார்த்தைகளைவிட...

அதிகமில்லை இந்த வலி....!ஒருவேளை
 இன்று இருந்திருப்பாய்...

கருவிலேயே நீ சிதைந்திருக்காவிடில்.....!
இதனையும் வாசிக்கலாமே..

How to Create Library at Home


நண்பர்களே கருசிதைவு கவிதை பிடித்திருந்தால் தங்களது எண்ணங்களை கருத்துக்களாய் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்


மேலும் வாசிக்க

11/18/2011 by சம்பத்குமார் · 26

November 17, 2011

முதிர் கன்னி
கேள்விப்பட்ட நொடியில் அதிர்வு
வாயே திறக்கவில்லை...!

இயல்பாய் இருப்பதுபோல் நடித்து 
ஒப்புக்குப் பேசி எங்கோ வெறித்து...

பஸ் நெரிசலில் 
வியர்வையுடன் 
இமையோரக் கண்ணீரத் துடைத்தேன் ...!

அதட்டலுக்கு அடங்காத 
செல்லப்பிள்ளை போலக் கண்ணீர்...!உதடு இறுக்கியும் 
தலை குனிந்தும் விடுவதாயில்லை...!

அறையில் புத்தகங்களிலும் அமிழ்வதாயில்லை ...

தேவையில்லாமல் 
இரண்டு அறை வாங்கினான் தம்பி...!

வெட்கமாயிறுக்கிறது 
தாள்களைக் கிழத்தெறிந்தேன்...!

தூக்கமே வராதோ 
நினைத்துக் கொண்டிருக்கும்போதே 
கண் சொருகியது ...!விழித்துப் 
 பல் தேய்க்கும் போது 
பேசாமல் ஒதுங்கிப்போனான் 
தம்பி...! 

எனக்கு இல்லாமல் போய்விட்டது என்பதையா...?
இன்னொருவருக்கு கிடைத்துவிட்டது என்பதையா...? 

எதையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது இந்த கண்ணீர்...!
நண்பர்களே முதிர்கன்னியின் கவிதை பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்..


மேலும் வாசிக்க

11/17/2011 by சம்பத்குமார் · 20

November 15, 2011

தொலைக்காட்சி செய்திகள்
அந்தரத்தில் வெடித்துச் சிதறியது விமானம்..!


பாலம் பிளந்து 
கரை புரண்டோடும் நீரில் 
தலைகுப்புற விழுந்தது 
பேருந்து...!

புயல் மழை வெள்ளத்தால் 
மாண்டோர் எண்ணிக்கை 
எழுநூறாக உயர்வு ...!


பூகம்பம் 
விழுங்கியோர் கணக்கு 
சரிவரத் தெரியவில்லை ...!இரசாயனக் கழிவு 
குழாய் நீரில் கலப்பு ...

பல்லாயிரம் மக்கள் வாழ்க்கை 
விஷமாக்கப்பட்டது ...!

அரிவாள் வீச்சுகள் குண்டு வெடிப்புகள் 
அமில மழைகள்...!

இன்னும் காணியெங்கும் கலவரங்கள் போர்கள் 

புன்னகையுடன் 
நளினமாகத் தலையசைத்து 
வாசிக்கப்படும் தொலைக்காட்சிச் செய்திகள் ...!

அறிவிப்பாளர்களைக் 
குறை சொல்லிப் பயனில்லை 

நாசி புகுந்து வரும் காற்றாய் 
சகஜமாகிவிட்டன இன்று 

சகமனிதர்களின் மரணங்கள்.....!
படங்கள் நன்றி : கூகுள் தேடல்நண்பர்களே கவிதை பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களை பகிர்ந்து விட்டு செல்லுங்கள்


Cute Parents  ல்இன்றைய குழந்தைகளுக்கான பதிவையும் வாசிக்கலாமே...


Teach Child to Appreciate Nature
மேலும் வாசிக்க

11/15/2011 by சம்பத்குமார் · 14

November 14, 2011

வளரிளம் குழந்தைகளின் வழிகாட்டிவணக்கம் நண்பர்களே ! அனைவருக்கும் மனமார்ந்த குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்.இன்றைய பதிவில் வளரிளம் குழந்தைகளின் வழிகாட்டியாவது பற்றி அலசுவோம்.ஐந்து வயதுமுதல் பதிமூன்று வயது வரை இருப்பவர்களை வளரிளம் குழந்தைகள் என்கிறோம் இந்த பருவத்திற்கு உட்பட்டவர்கள் குழந்தையாகவும் இல்லாமல் வயது வந்தவர்களாகவும் இல்லாத நிலை. அதனால் அவர்களுக்குள் தாங்கள் யார் என்று அடையாளம் காண்பதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு நெருக்கடி அவர்களும் வளர் இளம் பருவத்தில் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு மாற்றங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் நிகழும். மளமளவென்று உடலின் உயரம் கூடும். பேச்சிலும் செயலிலும் குழந்தைத்தனம் குறையும். இதுவரை குடும்பத்திற்குள்ளேயே வலம் வந்தவர்கள் இனி வீட்டையும் தாண்டி வெளி உலகத்திற்கு வரத்துடிப்பார்கள். 

தங்களுக்கென சொந்தமான ஒரு தன் உணர்வை தேடிக் கொண்டிருப்பார்கள். அக்கம் பக்கத்தில் உள்ள சம வயதினரோடு நட்புறவை வளர்க்க ஆசைப்படுவார்கள். புதிய நண்பர்களின் வரவு அவர்களுக்கு பேரானந்தத்தைக் கொடுக்கும். அவர்களது வாழ்க்கை முறையிலும் பல்வேறு மாற்றங்கள் தெரிய வரும். தாங்கள் குளிப்பதிலிருந்து தலைமுடியை சீவுவது வரை பிறரின் உதவியின்றி தாங்களே செய்து கொள்வார்கள். பவுடரை முகத்தில் அப்பிக் கொள்வார்கள். தங்களுடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பிறரின் உதவிகளை நாடுவதை தவிர்ப்பார்கள். மொத்தத்தில் தங்களுக்கு தாங்களே ஒரு சுய காரியதரிசியாக இருக்க விரும்புவார்கள். இந்த வயதில்தான் இவர்கள் மிக கவனமாக கையாளப்பட வேண்டியவர்கள். 

இந்த பருவத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் ஆலோசனைகள் அதிகமாக தேவைப்படுவது பெற்றோர்களுக்குத்தான். இப்பருவத்தினருடன் பேசுவதை விட அதிகமாக அவர்களின் பேச்சை கூர்ந்து கவனிக்க வேண்டும். அவர்களுக்கு மனித வாழ்க்கையில் சந்தோஷங்களையும் சோகங்களையும் சொல்லி கொடுக்க வேண்டும். அப்போது தான் எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளும் மனோபக்குவம் அவர்களுக்கு ஏற்பட வழிவகுக்கும். இப்பருவத்தினரோடு பழகும் போது எதிர்மறைவான பேச்சையும், நடவடிக்கைகளையும் பெற்றோர்கள் கவனத்தோடு தவிர்த்து விட வேண்டும். அதுவே ஆரோக்கியமான மனநோக்கு இவ்வயதினருக்கு ஏற்பட துணையிருக்கும். இதுமட்டுமல்ல குடும்பத்தில் ஜனநாயக சூழ்நிலையை உருவாக்கி குடும்ப சம்பந்தப்பட்ட விஷயங்களில் முடிவெடுப்பதில் இவர்களும் பங்கு கொள்ளுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 

இது அவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்க பயன்படும். அவர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க விடுவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. வீட்டு விசேஷங்கள், சுற்றுவட்டார சமுதாய நிகழ்ச்சிகள் என்று வெளி உலக நிகழ்வுகளில் அவர்களையும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். பொறுப்புணர்ச்சி மேலோங்க இது உதவும். இந்த பருவத்தினர் வீட்டில் இருக்காமல் வெயிலிலேயே சுற்றித் திரிகிறார்கள் என்று புலம்புவதை விட்டு விட்டு அவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் பெற்றோர்கள் அவர்களோடு தரமான முறையில் அதிக நேரத்தை முதலீடு செய்ய வேண்டும். 


குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் அவர்களோடு சேர்ந்து உற்சாகமாக உறவாடி ஒற்றுமை உணர்வை வளர்க்க வேண்டும். நாமும் இந்த பருவத்தில் இப்படித்தான் இருந்தோம் என்று பெற்றோர்கள் உணர வேண்டும். இந்த வயதில் குழந்தைகள் பெற்றோர்களிடம் எதிர்பார்ப்பது இரண்டே இரண்டுதான். ஒன்று இதுவரை குழந்தையாக இருந்த போது கிடைத்து வந்த அன்பும், அரவணைப்பும், இரண்டாவது இதுவரை அவர்களுக்கு கிடைக்காத சுதந்திரமும், தன்னிச்சையாக செயல்படும் வாய்ப்பும் தான். அதை தயங்காமல் வழங்குவது தான் நாம் செய்ய வேண்டிய முதல் கடமை..


இன்றைய நன்னாளில் குழந்தைகளின் நல்ல வழிகாட்டியாவோம்.அவர்களை கொண்டாடுவோம்..

முக்கிய அறிவிப்பு :

நண்பர்களே ! பதிவுலகில் அடுத்த கட்ட முயற்சியாக நான் கற்றதையும், பெற்றதையும், ஆங்கிலத்திலும் பகிர்ந்து கொள்ள Cute Parents  என்ற ஆங்கில வலைத்தளம் உங்களின் ஆசியோடு துவங்கப்பட்டுள்ளது.விருப்பமுள்ள நண்பர்கள் அந்த தளத்திலும் இணைந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றேன்.தளத்திற்க்குச் செல்ல கீழுள்ள படத்தில் க்ளிக் செய்யுங்கள்.
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் தங்களது எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்


மேலும் வாசிக்க

11/14/2011 by சம்பத்குமார் · 16

November 12, 2011

மழலை நாட்கள்

வயல்வெளியின் ஆட்டுக்குட்டிகள், 
பொதிக் கழுதைகளாய் செல்லுகின்றன 
முதுகுப்பையோடு......!

நான்கு சுவர்கள் 
ஒருகதவு ஒரு சன்னல் 
வரிசையாய் மரப்பெஞ்சுகள் ...!

கைதிபார்த்து மிரளும் 
துப்பாக்கி போல்..
கரும்பலகைக் கிறுக்கல்களைச் 
சுட்டிக்காட்ட எடுத்த ஸ்கேல்… 

சிறைச்சாலையின் மாதிரி வடிவம் 
வெளிச்சமும் காற்றும் தவிர்த்து...! 


பூதங்கள் குடுகுடுப்பைக்காரன் 
பூச்சாண்டி வரிசையில் 
பிரம்பு பிடித்த முகமும்....! 

அம்மாவின் அணைப்பிலிருந்து 
நீங்கிய நினைவில் அழுதும் 
வந்தவுடனே தூங்கியும் 
கனிவாய்க் குறுகுறுப்பாய் நோக்கியும் ...

சிரமப்பட்டு உட்கார்ந்திருக்கும் 
மலர்களைப் பார்க்கும் போது 
வலிக்கத் தொடங்கும் நெஞ்சு… 

பேர்சொல்லி அழைத்ததும் 
மருண்டு விழித்து உடல் நெளித்து 
இமையோரம் திரளும் ஈரம் ..


காதிதக் கப்பலைக்கூடத் 
தூக்க முடியாத கைகளில் 
புத்தக பாரங்கள்.. !

பிஞ்சு விரல்களில் எந்நேரமும் பென்சில் ...

ABCD,  அஆஇஈ,  123 என 
வதங்கி ஒலித்துத் தேயும் மெல்ல..


மழலை நாட்கள்…!
பதிவினை சுவாசித்துக் கொண்டிருக்கும் உறவுகள் அனைவருக்கும் அவர்தம் குழந்தைகளுக்கும் தமிழ் பேரண்ட்ஸ் தளத்தின் 2011 ம் வருடத்தின் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்....

வாழ்த்துக்களுடன்...

சம்பத்குமார்


நண்பர்களே கவிதை பிடித்திருந்தால் தங்களது எண்ணங்களை பகிர்ந்த்து விட்டுச் செல்லுங்கள்...

மேலும் வாசிக்க

11/12/2011 by சம்பத்குமார் · 24

November 10, 2011

விருந்தோம்பல் வீடு
இன்னும் கொஞ்ச நேரத்தில் 
எல்லாம் நடக்கும்... 

இறுகிய முகங்கள் 
சாவி கொடுத்தாற்போல கலகலக்கும்....!

 இனிப்புப் காரமும்...
அறை முழுவதும் விரவிக் கிடக்கும் ....!

குரோட்டன் செடிகள் பற்றியும்
அழவைத்த அழுகாச்சி சீரியல்கள் பற்றியும்... மாலைநேரச் சினிமா பற்றியும்
புதியதாய் வாங்கிய சேலை பற்றியும்...

ஆர்வமாய்க் கருத்துப் பரிமாறல்கள் நிகழும் ....!

இடையிடையே...
அடங்காத பிள்ளையின் மீதும் 
சீற்றம் பாயும்...!

அத்தைகளுக்கு..
வாய்த்த கணவன்களின் போக்கும் 

நகைகள் முழுவதையும் 
உடலில் அடுக்கிக் கொள்ளும் 
ஒன்றுவிட்ட பெரியப்பா பெண்ணின் 
சகிக்கமுடியாத ரசனையும்
விமர்சிக்கப்படும்....!சென்ற வாரத்துப் 
புதுதின்பண்டத்தின் செய்முறையும் 
இடையில் புகுந்து விளையாடும் ....!

அனிச்ச மலர்களை 
முகம் திரியாமல் வழியனுப்பியவுடன் 
பொருத்திக் கொண்ட முகத்திரைகளைப் 

பத்திரமாய் வைத்துச் 
சுருண்டு கொள்ளும் வீடு....!
நண்பர்களே வீடு கவிதை படித்திருந்த்தால் தங்களது கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்


மேலும் வாசிக்க

11/10/2011 by சம்பத்குமார் · 30

November 9, 2011

மழைகாலங்களில் மட்டும்..கணங்கள் தோறும் 
வெவ்வேறு முகங்கள் 
வெவ்வேறு வாகனங்கள் 

வெவ்வேறு மேகங்கள்… 

தேயத் தேய நீண்டுறங்கும் 
புழுதியையும் சேற்றையும் 
மாறி மாறி அணிந்து சிரிக்கும்..!

”குழந்தை அழுவானே எனக்காக” 

காப்பகத்தை நினைத்த 
இளம்தாயின் தவிப்பு மட்டும்...!
”அம்மா ! இந்த சாக்லேட் 
சீக்கிரமாய் கரைந்து விடுகிறதே”

குழந்தையின் ஏக்கம் மட்டும்...!

“பூச்சி ஏதாவது கடிச்சுடுச்சா
எத்தனை வீக்கம் !” 

கணவனின் வீங்கிய கையை 
வருடும் பெண்ணின் கரிசனம் மட்டும்...!

”நீங்க நல்லா இருக்கணும் சாமி” 

பத்து ரூபாய்க்கான 
பிச்சைக்காரரின் நிறைவு மட்டும்...!

“எம்புள்ள விரட்டிப்புட்டான் 
தெருத்தெருவா அல்லாடுறேன்
எதுனா கொடுப்பா” 

காதை சுரண்டும் 
பெரியவரின் பிசிறிய குரல்மட்டும்....!

வெடித்து உடைகிறது சாலை....

கரைந்து உருகுகிறது மண் ....

சேர்ந்து கலக்கிறது சகதியாய்.

மழைக்காலங்களில் மட்டும்.....!
டிஸ்கி : நண்பர்களே இன்று முதல் கூகுள் பிளஸ்ஸிலும் தமிழ் பேரன்ட்ஸ்
வலைத்தள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.தொடர அன்புடன் அழைக்கிறேன்நண்பர்களே ! எழுதிய கவிதை பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச்செல்லுங்கள்மேலும் வாசிக்க

11/09/2011 by சம்பத்குமார் · 26

;