October 31, 2011

வேலி தாண்டிய கணத்தில்..வேலி கடந்த கணத்தில்
முகத்தில் உறைத்தது சூழல்..!

நிறைய பார்த்தேன்...

பனியிலும் வெயிலிலும்
பாரம் இழுக்கும் காளைகளை !

அநாதைகளாய் சாலைகளில்
மரிக்கும் கன்றுக்குட்டிகளை !

திருடப்பட்டு
இறைச்சிக் கடைகளில்
தொங்கும் அடிமாடுகளை !


ஈக்களும் கொசுக்களும் மொய்க்க
சாலையோரம் துயிலும் பசுக்களை !

நீயும்
இதுபோலாக வேண்டுமா ?
மிரட்டி மூக்கணாங்கயிறு சொருகிக்
கட்டிப்போட்டார்கள்

நேரத்திற்க்குப் புண்ணாக்கு
வைக்கோல் புல்கூட உண்டு
வெதுவெதுப்பான தொழுவம்...
மாலையில் வேலியிட்ட 
தோட்டத்தில் உலாவல்...!
நன்றாகவே இருக்கிறது..


கொஞ்சம் கண் மறைந்தாலும்
அழுதுவிடுகிறது கன்று...
பால் குடிக்கும் போது முட்டித் தீர்க்கிறது
கோபமாய் மாறிய அழுகையை...!

எனினும்...
சிலநேரம் இழைந்து வரும்
மூச்சுகாற்று சொல்கிறது
தோட்டத்திற்க்கு வெளியிலும் உலகமிருக்கிறது”.


நண்பர்களே ! தாய்பசு வேலி தாண்டிய க(வி)தை பிடித்திருந்தால் தங்களது எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து விட்டுச்செல்லுங்கள்


மேலும் வாசிக்க

10/31/2011 by சம்பத்குமார் · 34

October 29, 2011

வயதான மூதாட்டி..


ஓடித்திரிகையில்
பக்கத்துவீட்டு மாமா
கோவிலுக்குச் சைக்கிளில்
அழைத்துச் சென்றார்..
”எவ்வளவு பக்தி” என்று
மகிழ்ச்சியாய் அனுப்பி வைத்தார்கள்

அப்போது அப்பாவின் சின்னஞ்சிறு மகள். !

கல்லூரி ஆண் நண்பர்களுடன்
சினிமா பார்க்கச் சென்றபோது
ஆளுக்கொரு புறம் முகம் தூக்கி
வைத்துக் கொண்டனர்…

அப்போது அண்ணனின் தங்கை. !

சாலை மறியலால்
குடும்ப நண்பரின் மொபட்டில் வர
எல்லார் கண்ணும் ஈட்டியானது…

அப்போது ஒருவருக்கு மனைவி !

”நான் கூட ஒருகாலத்தில்
கார் ஓட்டியிருக்கிறேன்”
சொன்னவனை கேலியாய் பார்த்தனர்

அப்போது பிள்ளைகளின் தாய்..!

”உனக்கெல்லாம் வண்டி சவாரி
ஒத்து வராதென”
வீட்டிலேயே உட்கார்த்திவிட்டு
கையசைத்துச் செல்கின்றனர்…

இப்போது குழந்தைகளுக்குப் பாட்டி !

யாருக்கும் தெரியவில்லை இன்னும்
நானும் ஓர் மனுஷியென….நண்பர்களே ! தீபாவளி பயணத்தில் என்னுடன் கலந்துகொண்டு வாழ்த்திய ஒவ்வொரு நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி..


உறவுகளே...கவிதை பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்..
மேலும் வாசிக்க

10/29/2011 by சம்பத்குமார் · 35

October 24, 2011

தீபாவளி பயணம்அடித்துப் பிடித்துக் கொண்டு
ஊருக்கு கிளம்பினேன்
முதன் முதலாய் தீபாவளிக்காக
பாட்டியின் வீட்டிற்க்கு...!

பர்ஸ் முதல் பற்பசைவரை
எல்லாவற்றையும்
தூக்கிக் கொண்டு..!

பேருந்து
விரைந்து கொண்டே இருந்த்து
இரவைக் கிழித்தபடி….!

தூக்கம் பிடிக்கவில்லை
சன்னலோரம்
கதை பேசியது காற்று...!

பௌர்ணமி நிலவு
நதியில் ஓடி மறைந்தது
கோவில் கோபுரம் தகதகத்தது…!


வாழைத் தோட்டங்கள் விழித்திருந்தன
புலர்ந்த போது
வெளிய நிலா
வயல் நீரில் தேய்ந்துபோனது..!

இன்னும் இன்னுமென்று
ஓடிக்கொண்டிருந்த பேருந்து
நின்றது...!

இரண்டு நாரைகள்
தூக்கம் கலைந்து பறந்து போயின...

செம்மணல் மேடுகள்
பளிச்செனப்
பார்வையில் இடறின...

தூரத்தில் கடலும் கைதட்டிகூப்பிட்டது
இறங்கிச்
சிலவீடுகளை கடந்துபோனபோது
வேலியில் ஆவலாய் முகங்கள்
“யார் இவன் ?”


வாஞ்சயுடன் பாட்டி கை இறுக்கி
ஏக்கத்துடன் கேட்டாள் “எல்லாரும் சுகமா ?”

பக்கத்திலேயே அமர்ந்து பரிமாறினாள்,
பார்த்தவர்கள் எல்லோரிடமும்
அறிமுகப் படுத்தினாள்...

”ஏன் இப்படி கூடு மாதிரி இருக்கிறாய் ?”
எனக்காக கவலைப்பட்டாள்..!

புத்தகங்களும் பத்திரிக்கைகளும்
கொஞ்சம் தள்ளி நின்றன..!

மீறிக் கையிலெடுத்தாலும்
எட்டி நின்று கவனிக்கும் குழந்தைகள்
மூட வைத்துவிடும்...!

எல்லாம் முடிந்து
ஊருக்கு கிளம்பியவுடன்
மீண்டும் தனியே பாட்டி...!
துணைக்கு...
ஒரு பசுமாடும்
இரண்டு பூனைக்குட்டிகளும்…!
உறவுகளே ! பல உண்மைகளை உணர்த்திய ”தீபாவளி பயணகவிதை” பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களையும் வாக்குகளையும் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.
நண்பர்கள் அனைவருக்கும் தமிழ்பேரண்ட்ஸின் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்..


நட்புடன்
சம்பத்குமார்
தமிழ்பேரண்ட்ஸ்மேலும் வாசிக்க

10/24/2011 by சம்பத்குமார் · 61

October 23, 2011

ஆறாத புண்கள்சாலையை அரைத்துக்
கொண்டே நகருகிறது
மண் லாரி...!

வேடிக்கை பார்க்க
ஒடி வருகின்றன்
சுட்டிக் குழந்தைகள் !

யானை மாதிரி
மண் மீது
உருள்கிறது ரோடுரோலர் !

மனை வாங்குகிறார் காண்ட்ராக்டர்...!

காலாண்டு விடுமுறையில்
மீண்டும் அதே சாலையில்
உருள்கிறது ரோடு ரோலர்...

அடித்தளம் போட்டு வீடு கட்டுகிறார்...!

அரையாண்டு விடுமுறை
விடுவதற்க்கு முன்
மழை இழுத்துச் 
செல்கிறது போட்ட சாலையை..

மனை புகுவிழா நடத்துகிறார்...!

உறவுகளும் நட்புகளும்
குண்டும் குழியுமான
சேறுதங்கிய சாலைகளில்...

தடுக்கித் தள்ளாடிக்
கொண்டே செல்கின்றனர்
கைகளில் பரிசுப்பொருள்களுடன் !

சாலையிருக்கிறது
தீர்க்கபடாத புண்களுடன்....!


நண்பர்களே ! சாலையின் தீர்க்கப்படாத புண்கள் கவிதை பிடித்திறுந்தால் தங்களது எண்ணங்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்மேலும் வாசிக்க

10/23/2011 by சம்பத்குமார் · 36

October 21, 2011

குழந்தைகள் விரும்பும் குழுபடிப்பு (Group Study)வணக்கம் நண்பர்களே ! மற்றுமொரு குழந்தைகளின் கற்கும் திறனை மேம்படுத்த உதவும் பதிவின் வழியாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.இன்றைய பதிவில் பெற்றோர்களை அச்சுறுத்தும் குழுபடிப்பினை (Group study) பற்றியும் அதனை மேற்கொள்ள தேவையான வழிமுறைகள் பற்றியும் அலசுவோம்.பொதுவாகவே,எல்லா பெற்றோர்களும், குழுபடிப்பு என்கின்ற ஒரு விஷயத்தை, குழந்தைகள் படிப்பதாக கூறி ஏமாற்றும் ஒரு வித்தை என்றே  நினைக்கின்றனர்.


இன்றைய நிலையில் பல பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் குழுபடிப்பில் ஈடுபடுவதை விரும்புவதில்லை. ஏனெனில் நண்பர்களுடன் சேர்ந்து படிக்கிறேன் என்ற போர்வையில், அரட்டை அடித்து நேரத்தை  பிள்ளைகள் வீணாக்குகின்றனர் என்ற கவலை அவர்களுக்கு. குழுபடிப்பு என்ற வெற்றிகரமான பயிற்சியை சரியாக அமைத்துக்கொள்ளவில்லை எனில், பெற்றோர்களின் கவலை நிஜமாகிவிடும். ஆனால் ஒரு குழுபடிப்பு என்பது, அதன் உண்மை அம்சத்தோடு மிக சரியாக மேற்கொள்ளப்பட்டால், அதன்மூலம் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.அதனை மேம்படுத்த உதவும் சில வழிகள்...


1.குழுபடிப்பு என்பது தேர்வு நேரத்தில் மட்டுமின்றி, எல்லா காலங்களிலும், ஏன், மாணவர் பருவம் முழுவதும் கடைபிடிக்கத்தக்க ஒரு வெற்றிகரமான அம்சம். ஒரு சிறந்த நன்மையைத் தரும் இவற்றை  எவ்வாறு மேற்கொள்வது என்ற முக்கிய வழிமுறையை மாணவரும், பெற்றோரும் அறிந்து கொள்வது அவசியம்.


2.இந்த குழுவிற்கு ஆட்கள் அமைவது முதல் முக்கியம். ஒரே வகுப்பில் அல்லது ஒரே பள்ளியில் படிக்கும் அல்லது அருகருகே வசிக்கும் மாணவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்குள் ஒரு நல்ல புரிந்துணர்வு இருக்க வேண்டும். படிப்பில் அக்கறையும், தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற ஆர்வமும் இருக்க வேண்டும். அதிகபட்சமாக ஐந்து மாணவர்கள் வரை இக்குழுவில் பங்கேற்கலாம்.

3.நல்ல குழுபடிப்பு என்பது மற்றொரு வகுப்பறை போன்றது. ஏனெனில் பல மாணவர்கள் சேரும்போது ஒரு பாடத்தில் தங்களின் தனிப்பட்ட புரிந்துணர்வுகளை பரவலாக பகிர்ந்துகொள்கின்றனர். இதில் ஒரு பாடத்தை படிக்க எடுத்துக்கொள்ளும்போது, எத்தனை மாணவர்கள் இருக்கிறார்களோ அத்தனை பகுதிகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். அந்த பாடத்தை அனைவரும் முடிக்க ஒரு குறிப்பிட்ட நேரத்தையும் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.

4.முடிவில் பிரித்துக்கொண்ட ஒவ்வொரு பகுதியிலும் அவரவர்களுக்கு புரிந்த விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதனால் ஒரே பாடத்தில் பரவலான புரிதல் ஏற்படும். அந்த பாடத்தைப் பற்றிய பயம் போகும். ஒருவேளை அதுசம்பந்தமான ஏதேனும் குழப்பங்கள் தோன்றினால், ஆசிரியரிடம் கேட்டு சரிசெய்துகொள்ள வேண்டும்.

5.பகுதிகளைப் பிரித்துக்கொண்டு படிக்கும்போது, தங்களின் பகுதியை நன்கு படித்து தெளிவாக விளக்க வேண்டும் என்ற ஆர்வம் ஒவ்வொருவருக்கும் ஏற்படும். எனவே ஒவ்வொருவரும் ஆழமாகவும், கவனமாகவும் படிப்பார்கள். இதனால் ஒரு ஆரோக்கியமான படித்தல் போட்டி அங்கே உருவாகும். ஒருவருக்கு சரியாக தெரியாத விஷயம் மற்றவருக்கு நன்றாக தெரிந்திருக்கும். இதன்மூலம் பாடத்தில் எழும் சந்தேகங்கள் தீர்க்கப்படும்.

6.படிப்பதற்க்கு தேர்ந்தெடுக்கும் இடம் பற்றி யோசிக்க வேண்டியதும் முக்கியம். எந்த தொந்தரவும், இரைச்சலும் இல்லாத, கவனம் சிதறும் வகையிலான விஷயங்கள் இல்லாத இடமாக இருந்தால் மிகவும் நல்லது. ஒரு நல்ல அறையாகவோ, மொட்டை மாடியாகவோ மற்றும் ஒதுக்குப்புறமான மரத்தடியாகவோ இருக்கலாம்.


7.மேலும் தேர்வுக்கான ஒரு மாதிரி கேள்வித்தாளை உருவாக்கி நண்பர்களுக்குள் எழுதிப் பார்க்கலாம். அவற்றை மாற்றி மாற்றி திருத்திக் கொள்ளலாம். தேர்வுக்கான நேரத்தையும் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். இதனால் ஒரு பயிற்சி தேர்வை எழுதிய அனுபவம் உங்களுக்கு கிடைத்து, தேர்வு பயம் அகன்றுவிடும். விடைத் தாள்களை மாறி மாறி திருத்திக் கொள்வதால் உங்களின் தவறுகள் எளிதாக கண்டுபிடிக்கப்படும்.

8.இதனில் ஈடுபடும் முன்பாக ஒரு குழு தலைவரை தேர்வுசெய்து கொள்ளுதல் நல்லது. அவர் குழுவின் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பார். ஒவ்வொரு மாணவரும் மாறி மாறி குழுத் தலைவராக இருக்கலாம். ஆனால் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு என்பது மிகவும் முக்கியம்.

உறவுகளே குழந்தைகளின் குழுப்படிப்புகளுக்கு அனுமதி கொடுங்கள். அணை போடவேண்டாமே..

நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தயங்காமல் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்..
மேலும் வாசிக்க

10/21/2011 by சம்பத்குமார் · 16

October 19, 2011

கட்சிக் கொடிகள்


நான்...
கட்சிக் கொடிகளைத்
தைக்கின்ற ஓர் அப்பாவி…!
வண்ணங்களை
சேர்ப்பதோடு சரி.
எண்ணங்களை பற்றி
அறியாத பாவி !

தைக்கும் வரை
கொடிகளுக்கு
நான் எஜமானன்….
தைத்த பின்
கொடிகள்
எனக்கு எஜமானன்…

தைக்கும் போது
குனிந்த என் 
தலையை அவை
பறக்கும் போதும்
குனிய வைக்கின்றன…
குனிவதற்க்கு
எனக்கொன்றும் வெட்கமில்லை...
தேசமே
உலகவங்கியிடம்
தலைகுனியும்போது…!

கொடிகள்
தோரணமாய்
தொங்குவதைக் கண்டால்
வருத்தமாயிருக்கும் எனக்கு…
என்ன பெரிதாய்
இழப்பு நேர்ந்தது ?
அவைகள் தூக்குபோட்டு
கொல்(ள்)வதற்க்கு…..?

கொடித்தலைவரிடம் ஓர்
நீண்ட நாள் சந்தேகம்…
கலர் கலராக
இத்தனை கொடிகள் எதற்கு..?
தலைவரின் முழக்கம் :
“வறுமையை அறவே
ஒழிப்பதற்க்கு !”
ஒரே கொடியாலே 
தீர்க்க இயலாதா ?
”அவன் வேறு
நான் வேறு
ஒன்றாக முடியாது !”

கொடிகளை நம்பி 
வாழ்க்கை நடத்துகிறோமே...
உங்கள் கட்சியா பெரிது ?
கொடிகளின்
கண்ணியம் தானே பெரிது !
பதிலேதுமில்லை..

தீர்க்கமாய்த் தீர்மானித்தேன்…
வாழ்க்கையைத் தருகிற
கொடி ஒன்று வரும்வரை
கொடிகள் தைப்பதைத்
தள்ளி வைக்கலாமென்று….


நண்பர்களே கட்சிக்கொடிகள் கவிதை பிடித்திருந்தால் தங்களது கருத்துக்களை பகிர்ந்து விட்டுச்செல்லலாமே..

மேலும் வாசிக்க

10/19/2011 by சம்பத்குமார் · 35

October 18, 2011

பெற்றோர்கள் அறிய வேண்டிய நோய்கள்


வணக்கம் பெற்றோர்களே மீண்டுமொரு குழந்தைகளுக்கான பதிவில் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.இன்றைய பதிவில் பெற்றோர்கள் குழந்தைகளின் கற்கும் முறையில் எதிர் கொள்ள வேண்டிய நோய்கள்,அந்த நோய்கள் தோன்றுவதற்கான அறிகுறிகள் பற்றி அலசுவோம்.
குழந்தை வளர்ப்பு  என்பது, இன்றைய வேகமான சூழலுக்கேற்ப அவர்களை உருவாக்கி வளர்ப்பதும் பெரும் சவாலானதாகத் தான் இருக்கிறது. நமது கல்வி முறை தான் நமது குழந்தைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக இருப்பதால் பெற்றோர்களின் கவலையும் கவனமுமாக இருப்பது கல்வி முறை தான். இதனால் தான் ஆரம்பக் கல்வி முதல் கல்லூரிப் படிப்பு வரை இன்று பெரிய கவனம் செலுத்தப்படுகிறது.

பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்லும் வாழ்க்கை முறையில் குழந்தைகளின் கற்கும் திறன் குறித்து தேவைப்படும் கவனத்தை செலுத்த முடிவதில்லை. இவை குறித்து எண்ணற்ற ஆய்வுகளும் ஆலோசனைகளும் இருந்தும் கூட, அன்றாட வாழ்வின் வேகமான போக்கினாலும் அடிப்படையிலேயே பொறுப்பற்ற பெற்றோர்களாலும் இது போன்ற குழந்தைகள் இலக்கின்றி காலத்தின் போக்கில் எடுத்துச் செல்லப்படுகிறார்கள்.

ஒத்த வயதுடைய குழந்தைகளுடன் ஒப்பிடும் போது படிப்பது, எழுதுவது, தகவல் பரிமாற்றம், கவனிக்கும் திறன், பொருள்படுத்தும் திறன் மற்றும் கணிதம் தொடர்புடைய அம்சங்களில் நம் குழந்தைகளுக்கு ஏகப்பட்ட பிரச்னைகள்.சிறு வயதில் இந்த பிரச்சினைகள் பெற்றோரால் உணரப்படவில்லையென்றால் அந்த குழந்தையின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறிவிடும் சாத்தியம் அதிகம் என்பதை இது போன்ற குழந்தைகளின் பெரும்பாலான பெற்றோர் உணருவதில்லை.இந்த கல்வி கற்கும் குறைபாடானது படிப்பில் துவங்கி, படிப்படியாக மனக்குறைபாடு, தாழ்வு மனப்பான்மை, மனச் சோர்வு, சக மாணவர்களுடன் உறவுச் சிக்கல் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு அவர்களை கொண்டு செல்லும் தன்மையை கொண்டுள்ளது.


அவர்களின் கற்கும் குறைகளை கண்டுபிடிப்பதில் ஆசிரியர்களின் பங்கு தலையாயது. சக மாணவர்களுடன் பழகும் தன்மை, ஒதுங்கும் மனப்பான்மை, கோபம், தகவல் பரிமாற்றம், புதியவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம், ஒப்பிட்டு முடிவெடுக்கும் திறன் போன்றவற்றில் குழந்தையின் நிலை என்ன என்பதை ஆசிரியர்களால் மட்டுமே உணர முடியும். தற்செயலாக ஒரு குழந்தையிடம் இதுபோன்ற குறைபாடுகள் காணப்பட்டால் உடனே பெற்றோருக்குத் தெரிவிப்பது ஆசிரியரின் கடமையே.


குறைபாடுகள் உணரப்பட்டவுடன் பெற்றோர் குறிப்பிட்ட குறைபாட்டுக்கான சிறப்பு மருத்துவரின் உதவியை நாட வேண்டும். இப்போது முரண்பட்ட குறைபாடுகளைக் கொண்ட குழந்தைகளுக்கான பிரத்யேகமான பள்ளிகள் உள்ளன. இதில் இது போன்ற குழந்தைகளை சேர்ப்பதில் தயக்கமே கூடாது. L.K.G வகுப்புகளில் சேர்ப்பதற்கு முன் Pre - KG வகுப்புகளில் சேர்ப்பது கூட ஒரு விதத்தில் பிரச்னையை முதற்கட்டத்திலேயே அறிய உதவலாம். இந்த குறைபாடுகள் ஒரு நோயல்ல என்பதையும் சரியான கவனிப்பின் மூலமாகவும் நமது உடனடி நடவடிக்கைகளின் மூலமாகவும் இவற்றை களைந்து குழந்தையை மேம்படுத்தலாம் என்பதையும் பெற்றோர் உணர வேண்டும்.

கற்பதில் பொதுவாகக் காணப்படும் சில நோய்கள்


Dyspraxia


குழந்தைகளின் ஒருங்கிணைப்பற்ற செயல்கள், சப்தங்கள் பற்றிய பயம், மந்தமான மொழி வளர்ச்சி, போதுமான கவனமில்லாதிருப்பது, தூக்கத்தில் பிரச்னை ஆகியவைதான் Dyspraxia 

Tiskalkuliya

கணிதத்தை புரிந்து கொள்வதில் உள்ள பிரச்னை இது. வரிசைப்படுத்துவது, பெருக்குவது, வகுப்பது, சூத்திரங்களை புரிந்து கொள்வதில் பிரச்னைகள் இருந்தால் அது Tiskalkuliya நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.

Tiskirapiya

மனதில் நினைப்பதை எழுதுவதில் பிரச்னைகள் இருந்தாலோ கையெழுத்து மிகவும் மோசமானதாக இருந்தாலோ அது Tiskirapiya  நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.

Dyslexia

படிப்பது, எழுதுவது மற்றும் உச்சரிப்பில் பிரச்னை இருந்தால் அது  Dyslexia நோயின் அறிகுறியாக இருக்கலாம். தயக்கமான பேச்சு, வலது மற்றும் இடது அறிவதில் குழப்பம், வார்த்தைகளை உச்சரிப்பதில் குழப்பம், ரைம்ஸ் உரைப்பதில் சிரமம், குழப்பமான கையெழுத்து போன்றவை இதன் அறிகுறிகள்.

இந்த அறிகுறிகள் எல்லாம் நோய்களல்ல... சரிசெய்யப்படக் கூடியவை தான் என்பதை அறிந்து செயல்பட்டால் குழந்தைகள் தங்களது எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைத்துக்கொள்ளலாம் என்பதை பெற்றோர் உணர வேண்டும்.

நன்றி : பெயர்கூட புரியாத இந்த நோய்களுக்கு அருமையாக விளக்கங்கள் அளித்து உதவி புரிந்த மருத்துவ நண்பர் திரு.ஸ்டீபன் அவர்களுக்கு...

நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் தங்களது வாக்குகளையும் கருத்துக்களையும் தயக்கமில்லாமல் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால தலைமுறைக்கு உதவட்டுமே...மேலும் வாசிக்க

10/18/2011 by சம்பத்குமார் · 26

;