September 30, 2011

சுமைதாங்கிகள்


தொட்டில் முதல்
இடுகாடு வரை
எத்தனை சுமைகள்...!
சுமந்து சுமந்து
சாய்ந்த உடல்
நான்கு பேரின்
தோள்களுக்கு சுமையாகிறது !

பொதி சுமப்பது
கழுதைகள் மட்டுமா?
உள்ளம் உணர்வுகளால்
நிரம்புமிடமெல்லாம்…
சுமைகள் தான்...
சுமப்பது கூட சுகானுபவமே..!
சுமைத்தாங்கியைப் பார்த்து
சுமைகள் உபதேசமும் செய்வதுண்டு..!

சுமைகளை இறக்கிவிடவே
எல்லோரும் ஆசைப்படுகிறார்கள்
சிலர் மட்டுமே
பிறருக்காக
சுமை சுமக்கச் சம்மதிக்கிறார்கள்
அவர்கள் தான்
இந்த பூமியையே
சுமந்து கொண்டிருக்கிறார்கள்….


தங்கள் தோள்களில்
நமக்காக தேசத்தை 
நேசத்துடன் சுமக்கும் 
ஒவ்வொரு 
ராணுவ வீரனுக்கும்
எந்தன் வீர வணக்கங்கள்..!


நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.

மேலும் வாசிக்க

9/30/2011 by சம்பத்குமார் · 14

September 29, 2011

எதனை விட்டுச் செல்ல..


ஒரு மரம்..
ஒரு புத்தகம்..
ஓர் இயக்கம்..
எதையேனும் விட்டுச் செல்ல…
யாருக்கேனும் நிழல் கொடுக்க..
எனக்கும் ஆசைதான்…!
ஆனால்
என் கால்களுக்கு கீழே
பூமி வேகமாய்
ஓடிக்கொண்டிருக்க…


சேர்ந்து ஓடத் தெரியாமல்
விழுந்து, எழுந்து
மீண்டும் மீண்டும்
விழுந்து கொண்டிருக்கையில்
எதை இங்கே விதைக்க.. ?
என் தத்துவங்கள்
சுழல்களில் சிக்கி
மூச்சுத் திணறின…!
என் விதைகள்
யாருக்கோ தீனியாகின…!

இருந்தும்
எதையேனும் நிலைநிறுத்த
கிடைக்கின்ற நேரங்களில்...
வாழ்வியலின் இறுக்கத்தை
கிளறி சேமித்து
வைக்கிறேன்….
உங்கள் ஞாபகங்களில் பதியும்
நம்பிக்கைகளாய் விட்டுச்செல்ல….நண்பர்களே !  தமிழ் பேரன்ட்ஸ் வலைதளத்தையும் அங்கீகரித்து, இன்று வலைச்சரத்தில் மண்பயனுற வேண்டும் என்ற இடுகையில் அறிமுகப்படுத்திய இந்த வார ஆசிரியர் மிடிகிளாஸ் மாதவி அவர்களுக்கும், தளத்தின் பொறுப்பாசிரியர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

அறிமுகங்களுக்கு பின்னூட்டங்கள் வழியாக வாழ்த்துக்கள் தெரிவித்த ஒவ்வொரு நல் இதயத்திற்க்கும் கோடானுகோடி நன்றிகள்

மேலும் வாசிக்க

9/29/2011 by சம்பத்குமார் · 18

September 28, 2011

பசுமை நினைவுகள்


முதன் முதலில்
தஞ்சைப் பெரிய கோயிலில்
கண்களால் தரிசித்ததும்….


கடிதங்களால் சுவாசம் செய்ததும்….
கடற்கரையில் கைகோத்து
உலக நடப்பை அலசியதும்….
தொலைபேசியில்
பேசிப் பேசியே
காலத்தை தொலைத்ததும்..

நண்பர்களின் உதவியால்
பதிவு திருமணம் நடந்ததும்……
அடுத்த நாளே ஊட்டியில்
ஹனிமூன் கொண்டாடி
மகிழ்ந்ததும்…..


ஆஸ்திக்காக
ஒரு ஆண் பிள்ளையும்
ஆசைக்காக ஓர் பெண் பிள்ளையை
பெற்றுக் கொண்டதும்…..
இன்னபிற விஷயங்களும்
நன்றாய்
பசுமையாய் நினைவில் நிற்கின்றன...

அத்தனையும் எங்கள்
விவகாரத்து சான்றிதழை
கையிலெடுத்துப் பார்க்கும்
அந்தவொரு நொடிவரை…


நண்பர்களே !
வேண்டாமிந்த
விலக்கி வைக்கும்
விவாகரத்துகள்..!


உறவுகளே ! கவிதை பிடித்திருந்தால் தங்கள் கருத்துக்களையும்,வாக்குக்களையும் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.


மேலும் வாசிக்க

9/28/2011 by சம்பத்குமார் · 23

September 27, 2011

தேர்வெழுதும் குழந்தைகளின் பயம் நீங்க..


வணக்கம் நண்பர்களே ! மற்றுமொரு குழந்தைகளுக்கான பதிவில் உங்களைத் தேடி வருவதில் மிக்க மகிழ்ச்சி.இன்றைய பதிவில் படிக்கும் குழந்தைகளுக்கு வரும் தேர்வுபயம் பற்றி அலசுவோம். தேர்வுகள் நெருங்கிவிட்டால் மாணவர்களுக்கு தேர்வு பயம்தான் வருகிறது ஆனால் பெற்றோர்களுக்கோ தேர்வு ஜூரமே வந்து விடுகிறது. இப்படி தானும் பயந்து குழந்தை களையும் பயமுறுத்தும் பெற்றோர்களுக்கான தீர்வுகள்தான் என்ன ?.பயம் என்பது சிறு வயதில் பழகிவிட்டால் நாளை அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அது எதிரொலிக்கும். எனவே இப்போதே அதைத்தடுத்துவிட்டால் நாளை அவர்கள் வெற்றியை மட்டுமே சுவைக்க நாம் செய்த உதவியாக இருக்கும்.

கொஞ்சமாவது பயம்வேண்டாம் என்று சொல்லி சொல்லி நாம்தான் குழந்தைகளிடம் பயத்தை வளர்த்துவிடுகிறோம். பயம் இல்லை என்றால் கட்டுப்பட மாட்டான் என்று நினைத்து சின்னச்சின்ன விஷயத்திற்கும் நாம் நம் குழந்தைகளை பயமுறுத்தியே வைத்திருக்கிறோம்.குழந்தையாக இருக்கும்போது சாப்பிட வில்லை என்று பூச்சாண்டியை கூப்பிட்டோம். தூங்கவில்லை என்று ஒத்தக்கண்ணணை அழைத்தோம். நாம் அழைத்த போது அவர்களிடம் வந்தவர்கள் எப்போதும் குழந்தைகளின்  மனதை விட்டு செல்லவே மாட்டார்கள்

தேர்வு பயம் என்பதுகூட பெற்றோர்கள் மீதான பயம்தான். மார்க் குறைந்தால் வீட்டில் தொலைத்து விடுவார்கள் என்பதுதான் பயத்திற்கான பிரதான காரணமே. என்ன மார்க் வாங்கினால் என்னநான் ஒன்றும் சொல்ல மாட்டேன் என்று பெற்றோர்கள் சொல்லி விட்டால் போதும் அந்த நிமிடமே தேர்வு பற்றிய பயமே போய்விடும்.நாமும் பயந்து நம் குழந்தைகளையும் பயமுறுத்துவதை விட்டுவிட்டு நாமும் தைரியமாக இருந்து நம் குழந்தைகளையும் வாழ்க்கையை எதிர் கொள்ள தைரியப்படுத்துவோம்.குட்டிக்கதை ஒன்று..

அவர் ஒரு இளந்துறவி. சக துறவிகளுடன் ஆற்றில் குளித்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அவர் அழகில் மயங்கிய இளம் பெண் ஒருத்தி அவர் காலில் விழுந்து தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டாள்.அவர் உண்மையான துறவி என்பதால் அவளை பொருட் படுத்தாமல் சென்றுவிட்டார். மறுநாள் அவர் வரும் போது மறுபடியும் அந்தப்பெண் காலில் விழுந்து தன்னை மணந்துகொள்ளுமாறு கெஞ்சினாள். துறவி எதுவும் பேசாமல் சென்று விட்டார். ஆனாலும் அந்தப்பெண் விடுவதாயில்லை.தினமும் துறவி வருகிறபோது அவர் காலில் விழுந்து கேட்க ஆரம்பித்தாள். விஷயம் ஊர் முழுவதும் பரவி இதைப்பார்க்க கூட்டம் கூட ஆரம்பித்து விட்டது. செய்தி குருவை எட்டியது. இளம் துறவியை அழைத்து நாளை அந்தப்பெண் உன்னை அழைத்தால் அவளுடன் சென்றுவிடு என்றார். குருவுக்கு சம்மதம் சொன்னார் இளம் துறவி. சொன்னபடியே மறுநாள் அந்தப் பெண் காலில் விழுந்தபோது எதுவும் பேசாமல் அந்தப் பெண்ணோடு அவள் இல்லம் சென்றுவிட்டார்.

ஒரு வாரம் இரண்டு வாரம் ஆயிற்று. இளம் துறவி ஆசிரமம் திரும்பவில்லை. ஊர் முழுக்க பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தபோது துறவி நாளை ஆசிரமம் திரும்புகிறார் என்ற செய்தி எட்டியது.துறவறத்திலிருந்தபோது இருந்த அந்த இறை அழகு, இப்போது இல்லறத்திலிருக்கும் துறவியிடம் இருக்குமா? என்று பார்க்க, மறுநாள் ஊரே ஆசிரமத்தில் திரண்டிருந்தது. துறவி வந்தார். எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், துறவி தன்னுடன் ஒரு பெண் துறவியையும் அழைத்து வந்திருந்தார்.

ஆசிரமகுருவோ புன்னகைத்தார். இது எனக்கு முன்னரே தெரியும் என்பதுபோல.எல்லோரும் எதிர்பார்த்ததுபோல துறவி இல்லறத்திற்கு மாறவில்லை. அந்த பெண்ணை துறவுக்கு மாற்றிவிட்டார், அதுவும் அவள் போக்கிலேயே சென்று அவளையும் மாற்றிவிட்டார்

நாம் கொண்ட நம்பிக்கையில் உறுதியாக இருந்தால் நம் நிலையிலிருந்து மாறமாட்டோம். நம் குழந்தைகளின்மீது நமக்கு நம்பிக்கை இல்லை அதனால்தான் நாம் பதட்டமடைகிறோம்.குழந்தைகளிடமும் அந்த பதட்டத்தை விதைக்கிறோம்.நமக்கு நம்பிக்கை இருந்திருந்தால் நம் குழந்தைகளிடமும் அதையே விதைத்திருப்போம்.வருங்கால குழந்தைகளிடம் நம்பிக்கைகளை விதைப்போம்.நடக்கும் ஒவ்வொரு தேர்வுகளையும் பயமின்றி எதிர்கொள்ளச் செய்வோம்.


டிஸ்கி
நண்பர்களே ! கதையில் வரும் ஆசிரமம் நித்தி........தா ஆசிரமமோ அல்லது பிரே..............தா ஆசிரமமோ அல்ல


பதிவு படித்திருந்தால் தங்கள் கருத்துக்களை தயங்காமல் வழங்கிவிட்டுச் செல்லுங்கள்

மேலும் வாசிக்க

9/27/2011 by சம்பத்குமார் · 13

September 25, 2011

வேண்டாமிந்த வெளிச்சங்கள்


கண்கள் இருப்போர் 
என்னைக் காணமுடியாது..!
இருண்டு இருக்கிறது
நான் வாழும் உலகம்..!
தீபங்கள்,மெழுகுவர்த்திகள்
எதைக் கொண்டும்
நீக்கமுடியாத காரிருள்
படர்ந்த கானகத்தில்
காட்டுத் தீயாய் வேர்களைப்
பொசுக்கும் ஒளியின் கால்கள்..!
வேண்டாம் அந்த வெளிச்சம்..!


சிதை நெருப்பின்
ஆழத்தை விட
கர்பத்தின் இருள்
மேன்மையானது..!
பால் நிலவின்
வெண்மையை விட
நீள் இரவின்
கருமை அடர்த்தியானது...!
பரபரக்கும் பகலைவிட
இனிமையான இரவு
அமைதியானது..!

என்னுள்ளே இருக்கும்
இருட்டைக் காண..,
கண்களை மூடினால்
உள்ளிருந்து
கறுப்பாகிக் கசியும்
மகத்தான இருளின்
ரகசியங்களில்
எனக்குத் தெரிகிறது
எனக்கான ஒளி..!


நண்பர்களே இந்த இருளின் கவிதை பிடித்திருந்தால் தங்களின் கருத்துத்துக்களையும்,வாக்குகளையும் பதிந்துவிட்டுச் செல்லுங்கள்
 

மேலும் வாசிக்க

9/25/2011 by சம்பத்குமார் · 17

September 24, 2011

பெற்ற குழந்தைகளை அவமானப்படுத்தும் பெற்றோர்கள்

வணக்கம் நண்பர்களே ! மற்றுமொரு பதிவின் மூலமாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.இன்றைய பதிவு அடுத்தவர்களிடம் நம் குழந்தைகளை நாமே அவமானப்படுத்துவதை பற்றிய ஓர் விரிவான அலசல்.குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் அடுத்தவர்களிடம், அவர்களைப் பற்றி சொல்லுகின்ற குறைகள்  அந்த குழந்தைகள் மனதில் சொல்ல முடியாத சோகங்களை பதிவு செய்துவிடுகிறது.ண்ணில் படுகிறவர்களிடமெல்லாம் தன் குழந்தையைப் பற்றிய குறைகளை சொல்லி சொல்லி தன் மனதில் உள்ள பாரத்தை இறக்கிவிடுவார்கள்.மாறாக குழந்தைகள் மனதில் பாரத்தை ஏற்றிவிடுவார்கள்.

அதிலும் குழந்தை யாரிடம் பிரியமாக இருக்கிறதோ அவர்களிடம்தான் நடந்த அனைத்தையும் சொல்வார்கள். குழந்தை மாமாவிடம் பிரியமாக இருக்கிறது என்றால், மாமா வீட்டிற்குள் நுழையும்போது உன் மருமகன் இன்னிக்கு என்ன செய்தான் தெரியுமா? என்று புலம்ப ஆரம்பித்துவிடுவார்கள். மாமா ஏதாவது விட்டுக்கொடுக்காமல் பேசினாலும் நீதான் உன் மருமகனை மெச்சிக்கனும் என்று ஆரம்பித்து அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி அவர்களையும் சீக்கிரமே குழந்தையை வெறுக்க வைக்கும் எல்லா முயற்சிகளையும் தொடங்கிவிடுவார்கள்.

உறவுக்காரர்களின் முன் இப்படி அவமானப்படும் குழந்தைகள் அவர்களிடம் எப்படி பழகும்? யாரோடும் சரியாக பழகுவதில்லை என்று பிறகு குறையும் பட்டுக் கொள்வார்கள். மற்றவர்களிடம் சொல்வதுதான் என்றில்லை உடன் பிறந்தவர்களிடம் சொல்வதும் அவர்களோடு ஒப்பிட்டு பேசுவதும் கூட அவமானப்படுத்துவதுதான்.சிறுவயதிலிருந்தே மாமாவுக்கு டான்ஸ் ஆடிக் காமி.. ரைம்ஸ் சொல்லிக்காமி.. என்று பல பெற்றோர்களுக்கு குழந்தைகள் பெருமையடைவதற்கான வழிமுறைகளாக மட்டுமே இருக்கிறார்கள்.வளர்ந்த பிறகு குழந்தைகளை காட்டி பெருமைப்பட வேண்டும் என்று நினைக்கும் விஷயங்களில் இல்லாமல் வேறு ஏதாவது விஷயங்களில் குழந்தைகள் ஈடுபாடு காட்டினால் அவர்களை துவம்சம் செய்து விடுகிறார்கள்.குறைகளை எங்களிடம் சொல்லுங்கள். நிறைகளை மற்றவர்களிடம் சொல்லுங்கள் என்று ஹோட்டலுக்கு ஹோட்டல் எழுதிப் போட்டிருக்கிறார்கள். இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று, குழந்தைகளின் குறைகளை உறவினர்களிடம் நண்பர்களிடம் சொல்வதால் ஒரு பிரயோஜனமும் இருக்கப்போவதுமில்லை. இதனால் குழந்தைகளின் மனதில் தாழ்வு மனப்பான்மையும் மற்றவர்கள் மீது ஒரு வெறுப்பும்தான் ஏற்படப்போகிறது.

இதனால் ஏற்பட்ட இடைவெளியால் உங்களைப்பற்றிய குறையோடு வளர்வார்கள். பிற்காலத்தில் உங்கள் குறைகளை உங்களிடமே சொல்லிக் கொண்டிருப்பார்கள். குறை சொல்வதை உங்களிடம் இருந்துதான் கற்றுக்கொள்வர்கள்.நீங்கள் மற்றவர்களிடம் உங்கள் குழந்தைகளைப் பற்றி சொல்கிற விஷயங்கள் எல்லாம் மனம் விட்டு பேசினால் நீங்களே சரி செய்து விடுகிற விஷயங்கள்தான். பல நேரங்களில் குழந்தைகளுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிந்தாலும் அவர்கள் மனதில் இருக்கும் காயங்கள் அவர்களை செய்ய விடுவதில்லை.

உண்மையிலேயே உங்கள் குழந்தைகளின்மேல் அளவற்ற பிரியமும்,அக்கறையும் இருந்தால் தயவுசெய்து உங்கள் குழந்தைகளின் நன்மை கருதி அவர்கள் முன்னிலையில் குறைகளை அடுத்தவர்களிடம் எக்காரணம் கொண்டும் பகிர்ந்துவிடாதீர்கள்.


நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் தயங்காமல் தங்கள் கருத்துக்களையும்,வாக்குகளையும் பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்


மேலும் வாசிக்க

9/24/2011 by சம்பத்குமார் · 23

September 22, 2011

பார்வைகள்


கைகூப்பி வணங்கத்தோன்றும்
மனுஷியாய் ஒருத்தி
கண்ணில் பட்டாள் இன்றெனக்கு…

பெண்ணின் உடல் தாண்டி
ஆத்மாவை தரிசிக்கும்
தருணங்கள் பொன்னானவை....

அவளுக்கென..
உடுத்த ஒரு பாவாடை
தள்ளுபடியிலும் வாங்க இயலவில்லை..!

கணவனின் பழைய கைலிக்கு
நாடா கட்டியதில் அது
பாவாடையானது…!

இடுப்புச் சேலை
நெகிழ்ந்து போய்
அவள் இடையை மட்டுமல்ல
வறுமையையும் காட்டிக் கொடுத்தது…!

ஓடும் பேருந்தில்
ஒருக்களித்து கைக்குழந்தையை
சுமந்து நின்றிருந்தாள் அவள்…!

காலில் செருப்பு இல்லை...
கைகளில் கழுத்தில் பொன்நகை இல்லை...
ஆனாலும் கைக்குழந்தைக்கு
புதுசாய் சொக்காயும்
பவுடரும்,கைகளில்
கவரிங் வளையலும்
கால்களில் வெள்ளிக் கொலுசுகளும்
இருந்ததை பிரியத்துடன்
அடிக்கடி தொட்டுப்
பார்த்தாள் புன்னகையுடன்…!
உள்ளுக்குள் தான் உடுத்தியதாய் எண்ணி...

நண்பர்களே என் பேருந்து பயணத்தின் பார்வைகளை படித்து பிடித்திருந்தால் மறக்காமல் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்.மேலும் வாசிக்க

9/22/2011 by சம்பத்குமார் · 20

September 21, 2011

முத்தத்தின் முகவரி


பிஞ்சு விரல்களால்
உதட்டைத் தொட்டு
முத்தம் யாசிக்கும்
குழந்தைகளைக் கண்டால்
கொள்ளைப் பிரியம்
எனக்கு…!

என் தாய் கொடுக்கத்
தவறிய முத்தங்களையும்…!
என் மனைவியிடம்
அரைமனதுடன் பெற்ற
அந்தரங்க முத்தங்களையும்…!

நண்பர்களுக்கு
தரமுடியாமல்
தள்ளி நிற்கிற போலிபண்பினால்
சிதைந்த முத்தங்களையும்…!

தவறிப்போன முத்தங்களை
தருவதற்க்கும்

பெறுவதற்க்கும்
தடையற்றது குழந்தையின்
அன்பு முத்தம்...!


என் தோளில் ஒட்டி
டாட்டா காட்டும்
விரல் ஒவ்வொன்றிலும்
பிரியமாய் பதிந்து
வைப்பேன் அந்த முத்தங்களை
பெரிதாகிப் பிரிந்தாலும்
மறக்காதிருக்க….

நண்பர்களே ! முத்தக் கவிதை பிடித்திருந்தால் தயங்காமல் தங்கள் வாக்குகளையும்,கருத்துக்களையும் பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்
  

மேலும் வாசிக்க

9/21/2011 by சம்பத்குமார் · 21

September 20, 2011

குழந்தைகளின் பேசும் கலை வளர்க்க..நண்பர்களே.. நாம் மற்றவர்களிடம் பேசிப் பழகும் விதம்தான் நம் வாழ்க்கையின் வெற்றிக்கு உறுதுணையாக அமைகிறது. அது மட்டுமல்ல பழகும் விதம் புத்திசாலித்தனமாக கூட மதிக்கப்படுகிறது. ஆனால் எதிர்த்து பேசுவது, விவாதம் செய்வது, மரியாதையில்லாமல் பேசுவது, அலட்சியமாக பேசுவது என குழந்தைகள் தங்களிடம் பேசும் விதம் குறித்து பெரும்பாலான பெற்றோர்கள் வருத்தப்படுவதுண்டு. அந்த வருத்தத்திற்கு தீர்வு காணுவது எப்படி ஒரு அலசல்.

குழந்தைகள், பெற்றோர்கள் செய்யும் பல செயல்களை தாங்களும் செய்கிறார்கள்.சிறு குழந்தையாக இருக்கும்போது பெற்றோர்கள் பேசியதைக் கேட்டுத்தான் பேசக் கற்றுக்கொள்கிறார்கள். இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது பேசும் வார்த்தைகளை மட்டுமல்ல.. பேசும்விதத்தையும் உங்களிடம் இருந்துதான் கற்கிறார்கள்.உங்கள் குழந்தைகள் மரியாதையாக பேச வேண்டும் என்றால் நீங்கள் அவர்களை மரியாதையாக நடத்துங்கள். மரியாதையாக பேசுங்கள்.என்ன குழந்தைகளைப் போய் மரியாதையாக பேசுவதா ? என்று நினைக்க வேண்டாம்.

நம் குழந்தையை நாமே மதிக்காவிட்டால் நாளை மற்றவர்கள் எப்படி மதிப்பார்கள். நீங்கள் உங்கள் குழந்தையை மதித்தால் உங்கள் குழந்தை தன்னையே மதிக்கத் துவங்கும். பிறகு மற்றவர்களையும் மதிக்கும். மற்றவர்களை மதித்தால்தான் பேசும்விதமும் மரியாதையாக இருக்கும்.குழந்தைகள் கோபமாக பேசினால் பதிலுக்கு நீங்களும் உணர்ச்சிவசப்பட்டு திட்டாமல், ‘கத்தாதேஎன்று ஒரே வார்த்தையில் அவர்களை அடக்காமல், அவர்கள் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள். உணர்ச்சியை வெளிப்படுத்தாதே என்பதற்கு பதில் உணர்ச்சி வசப்படாதே என்று சொல்லிக்கொடுங்கள்.

நாம் கோபப்படுவதும், திட்டுவதும் நமக்கு தவறாகத் தெரிவதில்லை. ஆனால் நம்மைப்பார்த்து குழந்தைகள் அதுபோல நடந்து கொள்ளும்போது நமக்கு தவறாகத் தெரிகிறது. முளச்சு மூணு இலை விடல, உனக்கு இவ்வளவு கோபம் வருதேஎன்று ஆரம்பித்து சொல்லக்கூடாத வார்த்தைகளை எல்லாம் சொல்லி நம் கோபத்தை கொட்டி தீர்த்து விடுகிறோம். வயதில் பெரியவர்கள் என்பது கோபப்படுவதற்கும் கடுமையான சொற்களை சொல்வதற்கும் ஒரு தகுதியல்ல…. வயதின் முதிர்ச்சியை நீங்கள் பக்குவமாக நடந்து கொண்டு காட்ட வேண்டுமே தவிர கோபப்பட்டு அல்ல.

அடிக்கடி கேட்கிற வார்த்தைகளைதான் குழந்தைகளும் பயன்படுத்த துவங்குகிறார்கள். இப்பவே கண்ண கட்டுதே !டயலாக் எல்லா வீடுகளிலும் ஒலிப்பதற்கு இதுதான் காரணம். நீங்கள் கிண்டலான வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தினால் உங்கள் குழந்தைகளும் அதை பயன்படுத்துவார்கள். குழந்தைகளின் பேசும் விதத்தை மாற்ற வேண்டும் என்றால் குழந்தைகளிடம் நீங்கள் எப்படி பேசுகிறீர்கள் என்பதை கவனியுங்கள். குழந்தைகள் எப்படி இனிமையாக பேச வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அது போல நீங்கள் இனிமையாக பேசுங்கள். நிச்சயம் குழந்தைகளும் பின்பற்றுவார்கள்.

 வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடம் குழந்தைகள் நன்றாகப் பேசுவதில்லை என்ற வருத்தம் ஓவ்வொருவரையும் ஆட்டிப்படைக்கிறது.எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றை கூறுகிறேன்.பால்ய கால நண்பர் ஒருவரது வீட்டிற்க்கு செல்ல நேர்ந்த்து.நான் அங்கு செல்கையில் நண்பரும் அவரது மகனும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர்.என்னைக் கண்டதும் அவரது பையன் எதுவும் பேசாமல் டிவியை அணைத்துவிட்டு அவன் அறைக்குள்  மறைந்தான். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த என் நண்பருக்கு மிகவும் தர்ம சங்கடமாகப் போய்விட்டது. இப்படியா விருந்தினரை அலட்சியம் செய்வது என்று வருத்தத்தோடு போய் மகனிடம் கோபமாக, ‘ஏன் வந்திருக்கிறவங்ககிட்ட இரண்டு வார்த்தை பேசினா குறைஞ்சா போயிடுவ. வந்து என்னன்னு கேட்டுட்டு போஎன்று சொல்லியிருக்கிறார்.

அவரது பையனும் அதே கோபத்தோடே என்னிடம் வந்து என்ன?’ என்றான். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. திடீரென்று பையன் வந்து கோபமாக என்னஎன்றால் எனக்கு என்ன புரியும் ?. இருந்தாலும் மரியாதை கருதி ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டேன்.. இதை ஏன் சொல்கிறேன் என்றால் குழந்தைகளிடம் மரியாதையாக பேசுவதை ஒரு சடங்காக்க நினைத்தால்  இதுபோன்ற விபரீதங்கள் நிச்சயமாய் நிகழலாம். எனவே மரியாதையாக பேசுகிற பழக்கத்தை விட மற்றவர்களை மதிக்கின்ற உணர்வை வளர்த்தாலே போதும். பேச்சில் மரியாதை தானாக வெளிப்படும்.

ஒவ்வொருவரையும் மதிக்க கற்றுக்கொடுப்போம்.நம் குழந்தைகளை நல்லவர்களாக உருவாக்குவோம்.

நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் தங்கள் கருத்துக்களையும் வாக்குகளையும் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்களேன்

மேலும் வாசிக்க

9/20/2011 by சம்பத்குமார் · 10

September 19, 2011

சிறைக்கைதி..நான்கு சுவர்களுக்கு நடுவே
துன்பத்தோடு நான்…!
நித்தம் நித்தம் யுத்தம் நடத்தும்
மனம் நொந்த கைதியாகிறேன் !

சொந்த வீட்டிற்க்கு செல்ல விரும்பாமல் 
திமிறிய என்னை,வலுக்கட்டாயமாக
உள்ளே தள்ளி, கதவை
கள்ளமாய் மூடியது ஒரு ”பிறப்பு”ச் சுவர். !

சாப்பிட அமர்ந்தேன்…
என்னை திட்டிய தாய்”வீடு” என்ற
அடுத்த சுவரின் கதவு மூடி
நடுத்தெருவில் நிர்க்கதியாய் நிற்க வைத்தாள் !

கூலி வேலையாவது தேடினேன்.
”காலி இல்லை” என கூறி ”வாய்ப்பு”என்ற
மூன்றாவது கதவும்
புன்னகைத்து மூடிக்கொண்டது.!

இறுதி முயற்சியாக
உறுதியுடன் சாகச் சென்றேன்.
தடுத்த சட்டம் ”தண்டனை” என்ற
பெயரில் கண்டனத்தோடு
அடுத்த கதவையும் அடித்து மூடியது !

ஆக தாகத்தோடு
நான்கு சுவர்களுக்கு
நடுவே நான்...!
ஜாமீனெடுக்க வருவோரை
எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்….
ஏமாளியாக !

நண்பர்களே கவிதை பிடித்திருந்தால் மற்க்காமல் தங்கள் வாக்குகளையும் கருத்துக்களையும் பதிவு செய்து விட்டுச்செல்லலாமே..

மேலும் வாசிக்க

9/19/2011 by சம்பத்குமார் · 10

September 18, 2011

கூடங்குள போரட்டம் வெற்றிகிட்டும் வரை..
நமக்காக போராடும்
நம்மவர்கள் படும்பாடு
மிகக் மிகக் கொடுமை...!
போதும் போதும்
இனியும் பொறுமை…!
தீயாய் கனிந்து
அணு உலை இல்லா
கூடங்குளம் படைப்போம் !

ஓட்டுப்போட்டு ஓட்டுப்போட்டு
விரல் நகத்தில்
மை வைக்கப் பஞ்சம்… !
இன்று.. உடம்பில் கை வைக்க
எலும்பும், உயிரும்தான்…
எஞ்சியுள்ள மிச்சம்.

அரசாழ்வோரே..
சுதந்திர காற்றை சுவாசிக்க..
அகிம்சைக் கொடியேற்றிவிட்டு
உயிர்களின் சுவாசத்தை
பறிக்கப் போகும்
அணு உலைக் கொடியேற்ற துடிப்பது ஏன்?

அரசவையே ! உங்களின்
செவிக்குள் எங்களின்
ஒப்பாரிகள் ஒலிக்கவில்லையா ?
உங்கள் கண்ணீரின்
உப்பு கரிக்கவில்லையா ?
இதயக் கிணற்றில்
இரக்க நீர் சுரக்கவில்லையா ?
எங்களின் சுவாசங்கள்
அடைபடப் போகிறதே…
சுவாசிக்கும் உங்களுக்கு
இன்னுமேன் தெரியவில்லை ?

வெற்றிச் செய்தி 
விரைவில் கிட்டுமென்று
நாளும் எதிர்பார்த்துக் 
காத்திருக்கிறோம்.பதிவுலக நண்பர்க்ளின் துளிகளில் சில...
 நம்மை ஆள்வோருக்கு செய்தி அனுப்ப..வெற்றிகிட்டும் வரை ஓங்கிக்குரல் கொடுப்போம்.எழுப்பும் குரல் எட்டுத்திக்கும் எதிரொலிக்கட்டும்


நண்பர்களே ! எதிர்கால சந்த்திகளுக்கு என்ன விட்டுச்செல்ல போகின்றோம் ? ஒரு கணம் சிந்தியுங்கள்

மேலும் வாசிக்க

9/18/2011 by சம்பத்குமார் · 20

September 16, 2011

குழந்தைகள் முன் சண்டையிடும் பெற்றோர்களே...


வணக்கம் நண்பர்களே ! குடும்பத்தில் அடிக்கடி ஏற்படும் சண்டை,சச்சரவுகளால் வளரும் குழந்தைகள் படும்பாடுகள் எண்ணிலடங்காதவை.சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் படி சதா சண்டையிட்டுக்கொள்ளும் பெற்றோரின் குழந்தைகள் பள்ளிகளில் அவர்களுக்குத்தரப்பட்ட செயல்களை செய்வதில் சிரமப்படுவதாக முடிவு வெளியாகியுள்ளது. பெற்றோருக்கு இடையே அடிக்கடி நிகழும் சண்டைகளின் காரணமாக இக்குழந்தைகள் சக மாணவர்களுடனும், பிறருடனும் விட்டுக்கொடுத்து நடக்கும் தன்மையும் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

முந்நூறு குழந்தைகளை வைத்து கிட்டத்தட்ட மூன்றாண்டு காலத்திற்கு இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. பெற்றோரின் நடத்தை மற்றும் சண்டை சச்சரவு பற்றிய தகவல்களை குழந்தைகள் வாயிலாகச் சேகரிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதனை வைத்து எதிர்மறை எண்ணங்களும், கவலைகளும் குழந்தைகளின் மனதை எப்படி ஆழமாகப் பாதிக்கின்றன என்ற ரீதியில் ஆய்வு செய்யப்பட்டது.

இப்படி சச்சரவுகளில் சிக்கிய குழந்தைகளின் நடத்தை, சகமாணவர்களுடன் அவர்களின் உறவு ஆகியவற்றை வைத்து பள்ளியுடன் அவர்களின் ஒத்துப்போகும் தன்மையைப் பற்றிய விபரங்கள் ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்டது. குறிப்பாக சக மாணவர்களுடன் ஒத்துழைப்பு, ஆசிரியரின் அறிவுரையை மதித்தல், வகுப்பறையின் பொருட்களை குறைவாக உபயோகித்தல் போன்ற அம்சங்களில் குழந்தைகளின் அணுகுமுறையும் வெளிக்கொணரப்பட்டது.இதே மாதிரியாக குழந்தைகளிடம் பெற்றோரும் கவனம் செலுத்த வகை செய்யும் விதத்தில் பெற்றோரின் அறிக்கை, கணினி உதவியுடன் குழந்தைகளிடம் அக்கறை காட்டும் படிவம் போன்றவையும் பெறப்ட்டது.

பெற்றோரின் வாழும் முறை குழந்தைகளிடம் எப்படி கவனச்சிதறலை உருவாக்குகிறது என்பதை ஆய்வு செய்கையில் பெற்றோரின் சண்டைகளைப் பார்க்க நேரிட்ட குழந்தைகள் மன அளவில் பாதிக்கப்படுவதால், வர்களது சுட்டித்தனமும், சுறுசுறுப்பும் குறைந்துவிடுகிறது. இதனால் பள்ளிகளில் அவர்களால் சிறப்பாக இருக்க முடிவதில்லை. அதேப்போல, தங்களது வகுப்பில் படிக்கும் பிள்ளைகளுடன் அவர்களால் இயல்பாக பழக முடிவதில்லை.
தங்களை குறைவாக மதிப்பிடல், எப்போதும் ஒருவித சோகத்தில் இருத்தல் போன்ற பிரச்சினைகள் எழுகின்றன.இவற்றிலிருந்து தப்பிக்கும் விதத்தில் எதிர்மறை எண்ணங்களை அதிகமாக வளர்த்துக்கொள்வது கண்டறியப்பட்டுள்ளது.பிரச்னைகள் உள்ள குடும்பங்களிலிருந்து வரும் குழந்தைகளின் நிலையை உணர்வது மற்றும் தகுந்த பயிற்சி மூலம் அவர்களுக்கு நம்பிக்கை அளித்த உயர்த்துவது என்பவை கிட்டத்தட்ட தற்போது ஒரு சமூகப்பிரச்னையாகவே மாறியுள்ளது. இவற்றைச் சரி செய்யும் விதத்தில் மாற்று முயற்சிகள் மேற் கொள்ளப்பட வேண்டும்.

நம் குடும்பத்தில் அடிக்கடி எழும் சண்டை சச்சரவுகள் வளரும் குழந்தைகளை அடியோடு மாற்றிப் போட்டுவிடுகிறது நண்பர்களே. குழந்தைகள் முன்பு சண்டையிடுதலை அடியோடு தவிர்ப்போம்.

முக்கிய அறிவிப்பு : நண்பர்களே ! கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூடக்கோரி நம் பதிவுலக நண்பர்களுடன் ஒன்றிணைந்து ஆதரவளித்து ஓங்கி குரல் கொடுப்போம்.பாதுகாப்பற்ற அணு உலையினால் ஏற்படும் விளைவுகள் முற்றிலும் விபரீதமானவை.இதைப்பற்றி மத்திய மாநில அரசுகளுக்கு இந்த லிங்கில் சென்று உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள்.எல்லாம் நம் வருங்கால தலைமுறைக்காக ! 

மேலும் வாசிக்க

9/16/2011 by சம்பத்குமார் · 17

;