June 15, 2012

குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6

வணக்கம் அன்பின் நண்பர்களே.மழலை சமுதாயம் கோலோச்சுகின்ற சமயம் தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் குழந்தைகளின் பங்கேற்பு அபரிமிதமாகவே உள்ளது.விளையாட்டு மற்றும் ஏனைய துறைகளிலும் கூட அவர்களின் திறமைகள் மற்றும் ஆர்வங்கள் எல்லாமே வியப்பைத்தருகின்றன.எனினும் நமது நாட்டில் எந்த அளவிற்க்கு மழலை சமுதாயம் முன்னேற்றம் கண்டுள்ளதோ அந்த அளவிற்க்கு பின்னடைவும் கண்டுவருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.இதனை அதிகரித்து வரும் குழந்தைகள் கடத்தல்,நரபலி,ஆசிரியர் மாணவர் உறவு முறிவு போன்றவற்றில் இருந்து நன்கு உணரமுடியும்.தவறான உறவுகளில் பிறக்கும் குழந்தைகளிலிருந்து பெண் சிசு கொலைகள் வரை இன்று சர்வ சாதரணமாகவே சமுதாயத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அல்லது கேட்டுக் கொண்டிருக்கும் அன்றாடச் செய்திகளாகிவிட்டன.குழந்தைகளின் வாழ்க்கை ஆரம்பத்திலிருந்தே நெருக்கடிகளுக்கும் பயமுறுத்தல்களுக்கும் ஒடுங்கி வாழும்நிலைக்கு தள்ளப்பட்டு விடுவதால் அவர்களின் வளர்ச்சியில் தீவிரவாதமும் வன்முறையும் கூடவே வளர்ந்துவிடுகிறது.இதனை தவிர்க்கவே இன்றைய தலைமுறை பெற்றோர்கள் ஒவ்வொருவரும் குழந்தை வளர்ப்பினைப் பற்றிய சூட்சுமங்களை கற்றுக்கொள்வது மிகவும் அவசியமாகிறது.இன்றைய பதிவில் குழந்தைகளின் ஆறுவயது முதல் பன்னிரண்டு வயது வரை பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பற்றி விரிவாக அலசுவோம்.

இதன் முந்தைய பதிவுகளை படிக்க...ஆறு வயது முதன் முதலில் வெளி உலகம்
 • ஆறு வயதிற்குப் பின்னர்தான் குழந்தைகள் பெற்றோரை எந்த நேரமும் தேடிக் கொண்டிராமல் சுதந்திரமாக வாழ ஆரம்பிக்கின்றனர். இந்த வயதில் குழந்தைகளைக் கட்டுப்படுத்துவது அவர்களின் பொறுமையை இழக்கச் செய்துவிடும்.
 • பெற்றோர்களின் நடை, உடை, பாவனைகள் அப்படியே தாங்களும் செய்துகொள்ள விரும்பிய குழந்தைகள் இப்பொழுது அவற்றில் தங்களுக்குப் பிடித்தமானவைகளை மாத்திரம் வைத்துக் கொண்டு மற்றவைகளை விட்டுவிடவும் செய்கின்றன.உதாரணமாக பிறர் தங்களை நெருங்கி வந்து முத்தம் கொடுத்தால் அது அவர்களுக்குப் பிடிப்பதில்லை.
 • இந்த வயதில் புத்தகம் படித்தல், வரைதல், கணக்குப் போடுதல், பாட்டுப்பாடுதல், மெஷின்களை கழற்றி மாட்டுதல், இயற்கை வள ஆராய்ச்சி போன்றவற்றில் அவர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள்.
 • பெற்றோரோ, மற்றோரோ அவர்களை ஒரு பொம்மை போல் வைத்துக் கொண்டு கொஞ்சுவதை அவர்கள் விரும்புவதில்லை. தாங்களும் தன்மதிப்புடன் வாழும் இளைஞர்கள் என்பதை உணருகிறார்கள். மற்றவர்களும், தங்களை அவ்வாறே நடத்த வேண்டுமென்று எண்ணுகிறார்கள்.
 • 3-5 வயதுக் குழந்தைகள் எதைக் கற்றுக் கொடுத்தாலும் அதைத் தவறின்றி சரிவரச் செய்ய மிகவும் ஆர்வம் காட்டுவார்கள். உதாரணமாக பல் தேய்க்க, குளிக்க உடை போட்டுக் கொள்ள, உட்கார்ந்து அமைதியுடன் சாப்பிடுவதில், தலைவாரிக் கொள்வதில், கைகளைக் கழுவி சுத்தமாக வைத்துக் கொள்வதில் மிகவும் அக்கறை காட்டுவார்கள். ஆறு வயதில் மேற்கூறியவற்றை சரியாக செய்து கொள்வதில் அக்கறை காட்ட மாட்டார்கள். பெற்றோர் என்ன சொன்னாலும் காதில் வாங்க மாட்டார்கள்.
 • இதைக் கண்டு சகிக்காமல் பெற்றோர் குழந்தையை அடிக்கவோ, அதட்டவோ, இதைச் செய் இப்படிச் செய் என்று அதிகாரமாகப் பேசுவதோ கூடாது. குழந்தை தவறு செய்தால் அதனிடம் சாதாரணமாகப் பேசுவதுபோல் இவ்வாறு நீ செய்வது சரியில்லை என்பதை மட்டும் தெரிவித்துவிட்டு சென்றுவிட வேண்டும். அத்துடன் குழந்தையிடம் சிறிது கண்டிப்புடனும் நடந்து அவனைத் திருத்திவிட வேண்டும். சரிவர செய்துவிட்டால் குழந்தையைப் பாராட்டி ஒரு சிறு பரிசும்கூட அளிக்கலாம். நாளடைவில் குழந்தை தன் தவறுகளைப் புரிந்து கொண்டு தானே நிறுத்திவிடுவான்.

ஏழு வயது முதல் பன்னிரண்டு வயது வரை..
 • ஏழு வயதிற்கு மேல் கற்பனையில் ரயில் ஓட்டுவதும், வீடு கட்டுவதும், பறக்க விடுவதும், கால்பந்து, ஹாக்கி, சடுகுடு, கிரிக்கெட், கோலி விளையாட்டு, கோலாட்டம், கும்மியாட்டம், பரத நாட்டியம் போன்றவற்றில் ஆர்வம் காட்டுவார்கள். கேரம், செஸ், சீட்டாட்டம் போன்றவற்றிலும் ஆர்வம் காட்டக் கூடும். விதிகளைத் தெரிந்து கொண்டால் அவற்றை மிகவும் கண்டிப் புடனும் கடைப்பிடிப்பார்கள்.
 • இந்த வயதில் குழந்தைகள் தங்கள் உடைகளை புத்தகங்களை இதர சாமான்களைப் பத்திரமாகவும், சுத்தமாகவும், அடுக்கியும் வைத்துக் கொள்ள ஆசைப் படுவார்கள். ஒரு நாள் சுத்தமாக வைத்துக் கொண்டாலும் மறுநாளே அவற்றைக் கலைத்தும் திரும்பவும் சாமான்களை இங்குமங்காக போட்டு விடக் கூடும். தங்கள் பொருட்களை நன்கு வைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் இருந்துகொண்டு தான் இருக்கும்.
 • சினிமாவிலோ, தொலைக் காட்சியிலோ, கொடூரமான காட்சிகளைப் பார்ப்பது தவிர்க்கப்பட வேண்டும். ( இன்றைய காலகட்டத்தில் இது கொஞ்சம் சிரமம்தான் என்றாலும் முடிந்த வரை தவிர்ப்பது நல்லது )கொலை செய்வது, துன்புறுத்துவது, திருடுவது போன்ற கொடூரக்காட்சிகள் குழந்தைகளின் மனதைக் கெடுத்து விடக் கூடும். குழந்தைகளுக்கென்று அறிவையும், ஆற்றலையும் வளர்க்கக்கூடிய சினிமாக்களோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோ அதிகம் கிடையாது. விரும்பத்தகாத பல காட்சி களையும் குழந்தைகள் பார்க்க நேரிடுகிறது. இதனால் அவர்களையறியாமல் அவர்களின் காட்சிகளையும் கூட குழந்தைகள் பார்க்க நேரிடுகிறது. இதனால் அவர்களின் மனம் உள்ளூர கலக்கமடையச் செய்துவிடுகிறது.
 • 12 வயது வரை அவர்கள் பேச்சுப்போட்டி, படம் வரைதல் போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி, தையல், எம்பிராய்டரி, ஸ்டாம்ப் சேர்ப்பது நாணயங்கள் கற்கள் சேர்ப்பது போன்றவற்றைத் தங்கள் பொழுதுபோக்காக விரும்பக்கூடும்.
 • குறிப்பிட்ட நேரங்களில் சிறுவர்களுக்கென்று வரும் காட்சிகள் மட்டுமே தொலைக்காட்சியில் குழந்தைகள் பார்ப்பது என்று முறைப்படுத்திக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். மணிக்கணக்கில் தொலைக்காட்சியின் முன் உட்காருவதை நீங்களும் குழந்தையும் நிறுத்த வேண்டும்.
 • நல்ல கருத்துள்ள புத்தகங்களை அவர்களுக்கு வாங்கிக் கொடுப்பது நன்மை தரும். குழந்தைக்கு நிறைய புத்தகங்களை இந்த வயதில் படிக்க வேண்டு மென்ற ஆர்வத்தை ஊட்டுங்கள். பெரியோர்கள், தலைவர்கள், வீரர்கள் போன்றோரின் வாழ்க்கை வரலாறுகளையும் அவர்கள் செய்த சேவைகளையும் நிறைய படிக்கச் செய்யவும்.
 • சிறு குழந்தைகள் எந்தப் பொருளைக் கண்டாலும் அது தன்னுடையது இல்லை என்றாலும் தானே வேகமாகச் சென்று எடுத்துக் கொள்வார்கள். இது திருட்டாகாது. உண்மையில் எது தங்களுக்குச் சொந்தம், எது மற்றவர்களுக்குச் சொந்தம் என்றெல்லாம் அவர்களுக்குத் தெரிந்து கொள்ள இயலாது. அவர்களை திட்டியோ அவர்களிடமிருந்து பொருட்களைப் பறித்தோ மனதைக் களங்கப்படுத்தக் கூடாது.. நீ சமத்துப்பிள்ளை அவர் பொம்மையை நீயே கொடுத்துவிடுவாய் என்று சொல்லி அவளையும் இணங்க வைத்து பொம்மையையும் அவளே விரும்பிக் கொடுத்துவிடச் செய்யவும்.
 • ஒரு குழந்தை திருடியது பெற்றோருக்கோ, ஆசிரியருக்கோ தெரிந்துவிட்டால் அவன் மேல் மிகுந்த கோபம் கொள்கின்றனர். உடன் அக்குழந்தை மேல் பாய்ந்து அவனிடமிருந்து பொருளை மீட்கவும் அவனை அவமானப்படுத்தவும் முனைந்து விடுகின்றனர்.
 • குழந்தை திருடிவிட்டால் அந்தப் பொருளைத் தானே சென்று திருப்பிக் கொடுத்துவிட்டு வரச் செய்யுங்கள். குழந்தையை அவமானப்பபடுத்துவதைக் கூடுமானவரை தடுத்து விடுங்கள். குழந்தை தானாகவே தன் தவற்றைஉணர்ந்து திருத்திக் கொள்ள வகை செய்யுங்கள்.
வாசகர்கள்,நண்பர்கள்,பின் தொடரும் நண்பர்கள்,ஆதரவளிக்கும் அனைத்து நல் இதயங்களுக்கும் எனது இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.       (@ ஜுன் 17 ஞாயிறு )நண்பர்களே இன்னும் வளருவோம்...

பதிவினைப் பற்றிய தங்களது எண்ணங்களை மறக்காமல் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால தலைமுறைக்காக..

Cuteparents ல் இன்றைய பதிவு..

Important Role Of A Father

மேலும் வாசிக்க

6/15/2012 by Cute Parents · 29

May 25, 2012

குழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 5

வணக்கம் நண்பர்களே மீண்டுமொரு குழந்தைவளர்ப்புப் பதிவின் வழியே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.இன்றுள்ள அவசர சூழ்நிலையில் ஒரு கைக்குழந்தை அழுதால், பசியாகதான் இருக்கும் அவர்களுக்கு பாலூட்ட வேண்டும் என்பதே பெரும்பாலான பெற்றோர்களின் கணிப்பு. ஆனால் குழந்தை அழுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.இன்றைய பதிவில் இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களைப் பற்றியும் அதை தவிர்ப்பது எப்படி என்பது பற்றியும் விவாக காண்போம்.இத்தொடரின் முந்தைய பகுதிகளை தவறவிட்ட அன்பு நெஞ்சங்கள் இங்கே க்ளிக் செய்து வாசித்துவிட்டு தொடரலாமே..முதலில் குழந்தையின் பசி : 
 • பிறந்த முதல் மூன்று மாதங்களுக்கு ஒவ்வொருமுறையும் தாய்பால் குடித்த பின்னர் மூன்று மணி நேரத்திற்குப் பின்புதான் பசி ஏற்படும். இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே குழந்தை அழத் தொடங்கினால் நிச்சயம் அது பசியினால் ஏற்பட்டிருக்காது. வேறு காரணம் என்ன என்பதை நாம் கண்டறிய வேண்டும்.
 • முதலில் குடித்த பால் போதுமானதா? என்பது தாய்க்கே தெரியும். அவ்வாறு எப்பொழுதும் போல் குழந்தை பால் குடித்திருந்தால் வேறு என்ன காரணம் என்று யோசிக்க வேண்டும்.
 • பால் குடித்து இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்து குழந்தை அழுதால் மட்டுமே குழந்தைக்கு மீண்டும் பால் கொடுத்துப் பார்ப்பதில் தவறொன்று மில்லை.
 • புட்டிப்பால் குடிக்கும் குழந்தையாக இருந்தால் முதலில் எப்பொழுதும் குடிக்கும் அளவு பால் குடித்திருகிறதா என்பதைக் கவனிக்கவும். அப்படியிருந்தால் அழுகைக்குப் பசி காரணமாக இருக்க முடியாது.
குழந்தையின் வயிற்று வலி :
 • திடீரெனக் குழந்தை அழுவதற்கு வயிற்று வலி ஒரு காரணம். பாலுடன் சர்க்கரையோ, காபியோ இதர பானங்களோ சேர்த்துக் கொடுத்தாலும் வயிறு வலி ஏற்படும்.
 • வயிறு உப்பியும், தட்டினால் கிண் என்று சத்தம் கேட்டும், அடிக்கடி காற்று வெளிப்பட்டுக் கொண்டும் இருந்தால் ஜீரணம் சரியில்லை எனலாம்.
 • அடுத்து கொடுக்க வேண்டிய ஒருவேளை பாலைக் கொடுக்காமல் விட்டு விடவும். குடலுக்கு ஓய்வு தேவை. தண்ணீர் எந்த நேரமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்துக் கொண்டே இருக்கவும். காற்று வெளிப்பட வலி குறையும். குழந்தையும் அயர்ந்து தூங்கிவிடும் 
 • குழந்தைக்கு திடீரென காய்ச்சலோ, தலை வலியோ, தடுமனோ, நெஞ்சு சளியோ இருக்கக்கூடும். அதனால் குழந்தை நலிவுற்று, தூக்கம் கெட்டு, எந்த நேரமும் அழவும் கூடும். குழந்தைக்கு உடம்பு சரியில்லையென்பதை முகத்தைப் பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.
 • முகம் சோர்வுற்று, மூக்கிலிருந்து தண்ணீர் வடியவும் உடல் லேசான சூட்டுடனும் இருக்கும். தும்மலும், இருமலும் ஆரம்பிக்கக்கூடும் அல்லது குழந்தைக்கு அஜீரணத்தால் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படலாம். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

தவழும் வயதில் குழந்தை கை சூப்புவது :
 • தாயிடம் பால் குடிக்கும் காலங்களில் அல்லது புட்டியில் பால் அருந்தும் காலங்களில் ஆசை தீர குழந்தை சுவைத்துக் கொண்டிருக்கப் போதிய அவசரம் கிடைக்காமல் போய்விடுவதுதான் கை சூப்புவதற்குக் காரண மாகக் கருதப்படுகிறது. தாய்ப் பால் குடிக்கும் குழந்தைகளை விட புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளிடையே தான் இப்பழக்கம் அதிக மாகக் காணப்படுகிறது. புட்டிப்பால் குடிக்கும் குழந்தைக்குப் பால் முடிந்ததும் தாயார் புட்டியைக் குழந்தையிடமிருந்து எடுத்து விடுதலால் அதற்குப் போதிய பால் கிடைத்திருந்தாலும் சுவைக்கு மின்பம் பூர்த்தியடையவில்லை. ஆகவே குழந்தை பால் குடித்து முடிந்ததும் தன் கட்டை விரலைச் சூப்பத் தொடங்கிவிடும். ஆகவே குழந்தை கட்டைவிரலைச் சூப்புவது பாலுக்காக அல்ல; தனக்குள்ள சுவைக்குமின்பத்தைப் பூர்த்தி செய்து கொள்ளவே ஆகும்.
 • சிறிது நேரம் மட்டுமே கை சூப்பினால் அதைப் பற்றிக் கவலையில்லை. சில குழந்தைகள் பசி வந்ததும் பாலுக்காக அந்த நேரம் மட்டுமே அவசரம் அவசரமாகக் கை சூப்பக்கூடும். இதைப்பற்றியும் கவலைப்படவேண்டியதில்லை. 3 அல்லது 4 மாதத்தில் பல் முளைக்கும் பொழுது ஏற்படும் உறுத்தலால் சில குழந்தைகள் கை சூப்பக்கூடும். இதுவும் நின்று விடுமாதலால் இதைப்பற்றியும் கவலையில்லை.
 • பெரிய குழந்தைகள் கை சூப்புவது சுவைக்குமின்பத்திற்காக அல்ல. இவ்வயதில் அவர்கள் உள்ளத்தில் ஏற்படும் கோபம், மகிழ்ச்சி, அவசரம், பரபரப்பு, கவலை, பயம், திகில் போன்றஉணர்ச்சிகளை மறக்கக் குழந்தை கை சூப்பக் கூடும். தூக்கத்திற்காகவும் சில குழந்தைகள் கை சூப்பக்கூடும்.
கை சூப்புவதால் ஏற்படும் கெடுதல்கள்:
 • கை சூப்பும் குழந்தை சுவைக்குமின்பத்திலேயே தன் முழுக் கவனத்தையும் செலுத்திவிடுவதால் அதற்கு வெளி உலக இன்பங்கள் அனுபவங்கள் கிடைக்காமல் போய்விடுகின்றன. மன வளர்ச்சி இதனால் பாதிப்படைகிறது.
 • எந்த நேரமும் குழந்தை கை சூப்பிக் கொண்டிருந்தால் அதனால் அழுக்கும் கிருமிகளும் வாய்க்குள் புகுந்து வாய்ப்புண்ணையும். இரைப்பையில் புண்ணும் ஏற்பட்டு, பசியின்மையும், வாய் துர்நாற்றமும் ஏற்பட்டு குழந்தை மெலிந்துவிடக் கூடும். மேலும் கை சூப்புவதால் பற்கள் வரிசை மாறிவிடும். குழந்தை வாய் வழியே மூச்சுவிட ஆரம்பித்து அதனால் பல கஷ்டங்கள் உண்டாகலாம்.
குழந்தைகளுக்கு ஏற்படும் களைப்பு :
 • குழந்தையை ஆள் மாறி மாறித் தூக்கிக் கொண்டு கொஞ்சுவதும், எந்த நேரமும் அதனுடன் விளையாடுவதும், அதனைத் திரும்பத் திரும்ப சிரிக்க வைத்துக் கொண்டேயிருப்பதும், அதனைச் சதா ஆட்டிக் கொண்டிருப்பதும் குழந்தையின் உடம்பிலும் மனதிலும் களைப்பை ஏற்படுத்தி விடுகின்றன.
 • குழந்தையை எந்த நேரமும் தொட்டிலும் போட்டு ஆட்டிக் கொண்டிருந்தாலும் களைப்பு ஏற்படுவதுடன் மூளைக்கலக்கமும் ஏற்பட்டுவிடும்.
 • குழந்தையைக் காற்றோட்டமான நிசப்தமான இடத்தில் கீழே படுக்க வைக்கவும். தன் இஷ்டத்திற்கு விளையாடவோ வேடிக்கை பார்க்கவோ தூங்கவோ விட்டுவிடவும்.
குழந்தை திடுக்கென்று அதிருதல் :
 • குழந்தையை மெதுவாகத் தொட்டாலும், ஏதாவது பட்டாலும், ஒரு சிறிய சப்தம் கேட்டாலும், திடுக்கென்று எழுந்திடும். தூக்கத்திலும் காரணமின்றி திடுக்கிட்டு அடிக்கடி விழித்துக் கொள்ளும்; அழவும் தொடங்கிவிடும். இவ்வாறான சிசுக்களில் சில, திடுக்கிட்டதும் மலம், சிறுநீர் சிறிதளவு கழித்து விடவும் கூடும்.
 • தாயின் வயிற்றுக்குள் எவ்வித அதிர்ச்சிக்கும் காரணமில்லாமல் நிம்மதியுடன் வளர்ந்து வந்த சிசுவின் நரம்புகள் வெளி உலக அதிர்ச்சிகளுக்குத் தக்கபடி பக்குவமடையாமல் இருப்பதே காரணமாக இருக்கக்கூடும். நாளடைவில் வெளிச் சப்தங்களுக்கும் அதிர்ச்சிகளுக்கும் குழந்தையின் நரம்புகள் தாமே பக்குவப்படுத்திக் கொள்வதால் நாளாக நாளாக அதிர்ச்சி குறைந்துவிடுகிறது.
அடுத்த பகுதியில் பள்ளி செல்லும் குழந்தைகளின் வளர்ப்பில் எதிர்கொள்ள வேண்டிய நடைமுறை சிக்கல்களை பற்றி அலசுவோம்.

அன்பின் நண்பர்களே.பதிவினை பற்றிய தங்களது எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.

Cute Parents ல் இன்று :

Interesting Gmas For Your One Year Baby

How To Teach The Importance Of Money

நன்றி : மருத்துவ நண்பர் திரு.ஸ்டீபன் அவர்கள்

மேலும் வாசிக்க

5/25/2012 by சம்பத்குமார் · 21

May 19, 2012

கோவை பதிவர்கள் குழுமம் ஆரம்பம்


அன்பிற்கினிய நண்பர்களுக்கு வணக்கம், பதிவுலகில் அடுத்தகட்ட பயணம் இதோ தொடங்கிவிட்டது.நீண்ட நாள் மனதில் தேக்கிவைத்திருந்த ஆசைகள் கடைசியில் நடந்தேறிவிட்டது. ஆம் பள்ளி கல்லூரி மற்றும் பணியிடத்தில் தோள் கொடுத்த தோழர்களை கடந்து இணைய உலகில் புதிய நட்புகளைத் தேடி இதோ அடுத்த பயணம் ஆரம்பமாகிறது.இது கோவை, பல்லடம், திருப்பூர் மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சி ஆகிய ஊர்களில் இருந்து தமிழ் பதிவுலகம்,முகநூல்,மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைததளங்களில் தங்களை தடம்பதித்துக் கொண்டிருக்கும் பதிவர்களை ஒன்று சேர்த்து ஓர் குழுமமாக மாற்றி புதிய நட்புகளை உருவாக்கிட நண்பர்களால் ஆன சிறு முயற்சி.


இந்த குழுமத்தில் இணைய விரும்பும் மேற்கண்ட ஊர்களில் வாழும் அன்பிற்கினிய நண்பர்கள் தங்களது பெயர் ,மொபைல் எண், வலைதள முகவரி, முகநூல் மற்றும் டிவிட்டர் ஐடிக்களை kovaibloggers@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவைத்து மறக்காமல் குழுமத்திலிருந்து வரும் அழைப்பிதழை ஏற்று இணைந்து கொள்ளலாம்


வாருங்கள் நண்பர்களே இணையத்தால் ஒன்றிணைவோம். இணையத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவதை ஊக்குவிப்போம்


வலைத்தள முகவரி : www.kovaibloggers.in

டிவிட்டர் முகவரி : www.twitter.com/kovaibloggers

முகநூல் முகவரி : www.facebook.com/kovaibloggers

கூகுள் ப்ளஸ் முகவரி : கோவை பதிவர்கள்

குறிப்பு : முதலில் நமது பகுதியில் இருக்கும் நண்பர்களை ஒன்றிணைத்து ஓர் சந்திப்பு நடத்தி முடித்து பின் நமது நண்பர்களையும் ஒன்றிணைத்து கோவை பதிவர்கள் சந்திப்பு நமது குடும்ப விழாவாக நடத்தலாம்.

நன்றி நண்பர்களே

மேலும் வாசிக்க

5/19/2012 by சம்பத்குமார் · 39

May 10, 2012

ஆனந்த பயணம் விகடனுடன்...

வணக்கம் அன்பிற்கினிய உறவுகளே.தாய் மொழியாம் தமிழின் முன்னணி வார இதழான ஆனந்த விகடன் இதழின் துணை இணைப்பான என் விகடனில் நமது வலைப்பதிவர்கள் பற்றிய அறிமுகமும் அவர்களது சிறந்த பதிவுகளின் தொகுப்பும் வாராவாரம் வெளிவருவது யாவரும் அறிந்ததே.அந்த வகையில் இந்த வார (09.05.12 to 16.05.12என் விகடன் வலையோசை கோவை பதிப்பில் நமது தமிழ்பேரன்ட்ஸ் வலைத்தளமும் பதிவுகளும் வெளிவந்திருப்பதில் அளவில்லா ஆனந்தம் அடைகின்றேன்.இந்த அருமையான தருணத்தினை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்

கடந்த ஜூலை 2011 வலையில் எழுத ஆரம்பித்து எழுதுகின்ற பதிவுகளில் பெரும்பாலும் குழந்தை வளர்ப்பு பற்றிய கட்டுரைகளுடன் எனது கவிதை கிறுக்கல்களும் ஆங்காங்கே வந்து சென்றுள்ளன.இன்று வரை தொடர்ந்துகொண்டிருக்கும் வலைப்பயணத்தின் முதல் மைல்கல்லாக கடந்த பிப்ரவரி 2012 ல் சீனா ஐயா அவர்களால் நடத்தப்படும் வலைச்சரத்தில் ஆசிரியப்பணி அங்கீகாரம் கிடைத்தது.பயணத்தின் அடுத்த மைல்கல்லாக கிடைத்த ஓர் அங்கீகாரமாக இந்த பகிர்வினை கருதுகின்றேன்..இதோ என்றும் மறக்க முடியாத அந்த நெகிழ்ச்சியான பகிர்வு..எழுதும் பதிவுகள் இன்றைய வாழும் தலைமுறைக்கும் வருங்கால தலைமுறைக்கும் நிச்சயம் உதவும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையில் எனது பயணத்தினை உங்களோடு தொடர்கின்றேன்.இந்த அங்கீகாரம் அளித்த ஆனந்த விகடன் குழுமத்திற்க்கும் அதன் ஆசிரியர்களுக்கும்,ஆரம்பத்திலிருந்து ஊக்கப்படுத்தும் எனது குடும்பத்தாருக்கும், அலுவலக நண்பர்களுக்கும், பதிவுலகில் தொடர்ந்து ஆதவளித்து ஊக்கபடுத்திக் கொண்டிருக்கும் அன்பிற்கினிய அனைத்து தமிழ் வலைபதிவர்களுக்கும்,வாசகர்களான உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.மிக்க நன்றி! நன்றி!! நன்றி!!!

மேற்கண்ட பதிவுகளுடன் மதுரை மண்ணின் மைந்தரும் மதுரை வட்டார வழக்கினை பதிவுகளில் பகிர்ந்து வரும் நண்பர் திரு.மணிவண்ணன் அவர்கள் எழுதிய அத்தமகரத்தினமே என்ற பதிவும் வெளியாகியுள்ளது.அவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை உங்கள் சார்பாக பகிர்ந்து கொள்கின்றேன்.

மேலும் வாசிக்க

5/10/2012 by சம்பத்குமார் · 38

April 27, 2012

அம்மாவிடம் சில கேள்விகள்

கைகளை மடக்கி - சிறு
கண்களைச் சுறுக்கி - உன்
கருவறையில் இருந்தது
ஒன்பது மாதங்கள் தான்...!

நீ விரும்பாமலயே
வெளியில் வந்த என்னை
முதலில் தொட்டு
வெளியில் எடுத்தது
வேறு யாரோ ?? - என்
உடலில் ஒட்டியிருந்த
உனது இரத்தத்தைக்
கழுவி எடுத்து - என்னை
உன் அருகில் வைத்ததும்
வேறு யாரோ ??
ஒட்டாத உறவு என்று
தொட்டிலில் போடும் முன்
சொல்லாமல் சொன்னார்களோ ? ?

உன் மார்பில் பால் நிறைந்து
வலிக்கும் போது மட்டும்
எனக்கு நீ பால் கொடுத்த
அந்த ஒரு மாதம்
நினைவிலும் இல்லை..!


நான் பிறந்து முதல் நாள்
கண் விழித்தது - அந்த
ஆயாவின் மடியில் தான்...!
உன்னிடம் சேவை செய்ய
வந்தவள் –
எனக்கு எப்படி
அன்னையானாள் ? ?
பெற்றவளை விட
வளர்த்தவளுக்குப்
பெருமை அதிகம்தானோ ??

பத்து வருடங்கள் –
என்னைப் பெற்றதைத் தவிர
நீ எனக்கு வேறு என்ன 
செய்தாய் அம்மா ??
இப்போது எங்கு யாரோடுதான்
இருக்கின்றாய் ??
நீ திரும்பி வந்தால்
உன்னிடம் ஒன்று கேட்கட்டுமா ??
என் ஆயாவைனியாவது 
அம்மா என்று
அழைக்கட்டுமா ??

நண்பர்களே கவிதையைப் பற்றிய உங்களது எண்ணங்களை மறக்காமல் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.

மேலும் வாசிக்க

4/27/2012 by சம்பத்குமார் · 12

April 26, 2012

குழந்தையின் வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை...

வணக்கம் நண்பர்களே நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் ஒரு பதிவின் வழியே உங்களை சந்திக்கவிருப்பதில் மிக்க மகிழ்ச்சி.இன்றைய பதிவில் பிறந்த குழந்தை முதல் மூன்று வயது வரை வரை ஒவ்வொரு பருவத்திலும் குழந்தையின் வளர்ச்சியைப் பற்றியும் பிறந்த குழந்தைக்கான சுகாதாரத்தினைப் பற்றியும் விரிவாக பார்க்கலாம்.இன்றைய பெற்றோர்களுக்கு மட்டுமல்ல வருங்கால பெற்றோர்களுக்கும் நிச்சயம் உதவும் என்ற நம்பிக்கையில்...

குழந்தையின் வளர்ச்சி :


பொதுவாக குழந்தை பிறந்ததிலிருந்து அவர்கள் வளர்ச்சியின் நிலைகள் மாதாமாதம் மாறிக்கொண்டே செல்கிறது.பிறந்த குழந்தையானது...

முதல் மாதத்தில் : சத்தம் வரும் பக்கம் தலையைத் திருப்பும்
2-வது மாதத்தில் : மற்றவர்களைப் பார்த்து சிரிக்கும்
3-வது மாதத்தில் : தலை ஆடாமல் நிற்கும். தாயைத் தெரிந்து கொள்ளும். சத்தங்களை எழுப்பும்.
5-வது மாதத்தில் : நன்றாகப் புரளும். மற்றவர்களுடைய உதவியுடன் உட்கார முடியும்.
6-வது மாதத்தில் : தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்துச் சிரிக்கும். ‘மா’, ‘பா’ போன்ற ஓர் எழுத்து ஒலிகளை எழுப்பும்.
7-வது மாதத்தில் : மற்றவர்களுடைய உதவி இல்லாமல் உட்காரும்.
8-வது மாதத்தில் : தவழும்.
9-வது மாதத்தில் : மற்றவர்கள் உதவியுடன் நிற்கும் ‘மாமா’, ‘பாபா’ போன்ற இரண்டு எழுத்து சொற்களைச் சொல்லும் ‘டாட்டா’ சொல்லும்.
10-வது மாதத்தில் : மற்றவர்கள் உதவியுடன் தளர்நடை நடக்கும்.
12-வது மாதத்தில் : மற்றவர்களுடைய உதவி இல்லாமல் நிற்கும் அர்த்தம் தரும் இரண்டு வார்த்தைகளைச் சொல்லும்.
13-வது மாதத்தில் : மற்றவர்களுடைய உதவி இல்லாமல் நடக்கும்.
24-வது மாதத்தில் : மாடிப்படி ஏறும். சிறு வாக்கியங்களைப் பேசும்.
36 வது மாதத்தில் : மூன்று சக்கர சைக்கிள் ஓட்டும்.
 • கால்சியம், பாஸ்பரஸ் வைட்டமின் ‘சி’ மற்றும் ‘டி’ அதிகம் உள்ள பால், பழம், பச்சைக் காய்கறிகள் மற்றும் மீன், முட்டை போன்றவற்றைபாலூட்டும் தாய்மார்கள் உட்கொண்டால் குழந்தைக்குப் பல் முளைத்தலில் சிரமம் இருக்காது.
 • பல் முளைக்கும் பருவத்தில் குழந்தையின் கை நகங்களையும், விரல்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் விஷக் கிருமிகள் குடலினுள் சென்று வயிற்றுப் போக்கு ஏற்படும். பல் துலக்கும் நல்ல பழக்கத்தை இரண்டாம் வயது இறுதியில் துவக்குவது நலம். அதுவரையில் உணவு உட்கொண்ட பிறகு – முக்கியமாக செயற்கை இனிப்புப் பண்டங்களை உண்ட பிறகு தண்ணீர் விட்டு வாயைக் கழுவினாலே பற்கள் தூய்மையாகும்.
 • ஆறு மாதத்தில் ஆரம்பித்து 24 மாதத்துக்குள் தற்காலிகமான இருபது பற்களும் முளைத்துவிடும். தற்காலிகப் பற்கள் இருபதும் ஆறு வயதில் இருந்து 12 வயதுக்குள் விழுந்து அதற்குப் பதில் 28 நிரந்தரப் பற்கள் முளைத்துவிடும். நிரந்தரப் பற்கள் மொத்தம் 32. அதில் கடைசி கடைவாய்ப் பற்கள் நான்கும் 25 வயதில் முளைக்கும்.

பிறந்த குழந்தைக்கான உணவு


 • பிறந்த குழந்தைக்கு, முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். குழந்தைக்குத் தாய்ப்பால்தான் மிகச் சிறந்த மலிவான, பாதுகாப்பான, எளிதில் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து உணவு. பிரசவித்தவுடன் சுரக்கும் பால் மஞ்சள் நிறத்தில் பிசுபிசுப்புடன் இருக்கும். இதைச் சீம்பால் என்பார்கள். இதில் பல ஊட்டச் சத்துக்களும், நோய் எதிர்ப்பு தன்மைகளும் இருப்பதால் இதைத் தவறாமல் குழந்தைக்கு ஊட்ட வேண்டும்.
 • பிறந்த குழந்தையைத் தொட்டிலில் போடாமல் தாய் தன் அரவணைப்பில், படுக்க வைத்துக் கொள்ள வேண்டும். தொட்டிலிலோ தூளியிலோ போடும் பழக்கம் நல்லது அல்ல.
 • குழந்தை பிறந்ததும், சர்க்கரை, தேன் ஆகியவை கலந்த நீர், வெண்ணெய் போன்றஎதுவும் வேண்டாம். வெயில் காலத்தில் மட்டும் கொதித்து ஆறிய சுத்தமான நீரை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறைசுமார் 15 மி.லி கொடுக்கலாம். வைட்டமின் மற்றும் இரும்புச் சத்து மருந்துகளை, தேவைப்பட்டால் மட்டும் மருத்துவ ஆலோசனையுடன் கொடுக்கலாம்.
 • தாய்ப்பால் கொடுக்க முடியாதவர்கள் பசும்பாலில் இரண்டு பங்கும் தண்ணீரில் ஒரு பங்கும் சேர்த்துக் கொதிக்க வைத்து ஆறவைத்த பிறகு சிறிதளவு சர்க்கரையை சுவைக்குச் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
 • குழந்தைக்குப் பால் ஊட்டி முடித்தவுடன் படுக்கையில் போட்டால், பாலைக் கக்கிவிடும். பால் ஊட்டியவுடன் குழந்தையைத் தோளில், அதன் முதுகில் லேசாகத் தட்டிக் கொடுத்தால் ஏப்பம் விடும். ஏப்பம் விட்ட பிறகு படுக்கையில் விட்டால் பாலைக் கக்காது.
பாலுடன் சேர்ந்த பிறஉணவுகள் :


தாய்ப்பாலை சாதாரணமாக ஒன்பது மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை கொடுத்து வருவது நல்லது.
 • ஆறாவது மாதத்தில், தாய்ப்பாலுடன், சிறிதளவு கோதுமை மற்றும் அரிசி, பருப்பு, கலந்த காரம் இல்லாமல் தயாரித்த உணவை ஊட்டலாம். மேலும் மசிந்த உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், கீரை ஆகியவற்றையும் கொடுக்கலாம்.
 • ஒன்பதாவது மாதத்தில் மேற்கூறியவற்றுடன் வேகவைத்த முட்டையின் மஞ்சள்கரு, கனிந்த வாழைப்பழம், ஆப்பிள், பப்பாளி, மாம்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளம்பழம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு பழத்தின் சாறு ஆகியவற்றைக் கொடுக்கலாம்.
 • பத்தாவது மாதத்தில், இட்லி, தோசை, போன்றவற்ûயும் ஊட்டலாம்.
 • பதினொன்றாவது மாதத்தில், வேகவைத்த முட்டையின் வெள்ளைக் கருவையும் கொடுக்கலாம்.
 • பன்னிரண்டாவது மாதத்திலிருந்து பெரியவர்கள் சாப்பிடும் அனைத்து உணவுகளையும் குழந்தைக்கு சாப்பிடக் கொடுக்கலாம்.
 • அரிசி, கோதுமை, கேழ்வரகு, பொட்டுக் கடலை போன்ற உணவுகளை சர்க்கரையைக் கலந்து கொதிக்க வைத்துக் கஞ்சியாகக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
 • புதுவகை உணவைக் கொடுக்கும் போது பழக்கமான உணவைக் கொடுப்பது போல ஒட்டு மொத்தமாக அதிகம் கொடுக்கக் கூடாது. எந்தப் புதுவகை உணவையும் தினமும் ஒருமுறைசிறிதளவு கொடுத்துப் பழக்கிய பிறகே, அந்த உணவின் அளவை அதிகப்படுத்த வேண்டும்.

குழந்தையும் கை மருத்துவமும் :


 • பிறந்த குழந்தைகளுக்கு எரி சாராயத்தில் (ஸ்பிரிட்) நனைத்த பஞ்சால் தொப்புளை லேசாகத் தொட்டு சுத்தம் செய்யலாம். தொப்புளிலிருந்து சீழ் அல்லது ரத்தம் வந்தால் உடனே மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.
 • பிறந்த இரண்டாவது நாளிலிருந்து ஐந்து நாட்களுக்குள் பெரும்பாலான குழந்தைகளின் கண்களும் உடலும் லேசான மஞ்சள் நிறமாக மாறலாம். குழந்தை பிறந்த பிறகு அதனுடைய கல்லீரலின் செயல் திறன் முழுமை பெற10 – 15 நாட்கள் ஆகும் என்பதால், மஞ்சள் நிறமாற்றம் குழந்தையின் உடலில் ஏற்படுகிறது. இது இரண்டு வாரங்களுக்குள் சரியாகிவிட வேண்டும். பதினைந்து நாட்களுக்குப் பிறகும் உடல் மஞ்சள் நிறமாக இருந்தால் அது “மஞ்சள் காமாலை” நோயாக இருக்கலாம்.
 • பிறந்த இரண்டு நாட்களுக்கு குழந்தை அடர் கரும்பச்சை நிறத்தில் மலம் கழிக்கும். இரண்டு நாட்களுக்குப் பிறகு மலம் மஞ்சளாகவும் இளகியும் இருக்கும். தினமும் ஒன்று முதல் நான்கைந்து முறை மலம் கழிக்கலாம். ஆனால் புட்டிப்பால் குடிக்கும் குழந்தை தினமும் குறைந்த தடவையே மலம் கழிக்கும்.
 • சில குழந்தைகள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறைகூட மலம் கழிக்கும். அதனால் பிரச்சனை இல்லை. வயிறு உப்புதல் இல்லாமலும் குழந்தை நன்கு உணவு உண்டும் சுறுசுறுப்புடனும் இருந்தால் மலம் கழித்தலில் ஒரு கோளாறும் இல்லை. குழந்தையின் உடல் எடை வயதுக்கேற்றஅளவு இருக்க வேண்டும். மேலும் தண்ணீர், பழரசம் இவற்றைக் கொடுத்தாலே யாதொரு தடங்கலுமின்றி குழந்தை சுலபமாக மலம் கழிக்கும்.
 • குழந்தைக்கு பேதி ஏற்பட்டால் பயந்து கொண்டு தாய்ப்பாலை நிறுத்தக்கூடாது. முதலுதவியாக சர்க்கரை – உப்புச் கரைசல் நீரை அரைமணி நேரத்திற்கு ஒருமுறை 50 மில்லியும் ஒவ்வொரு முறைபேதி ஆனதற்கு பிறகு சுமார் 100 மில்லியும் கொடுக்க வேண்டும். இந்த சர்க்கரை உப்புக் கரைசலை கீழ்க்காணும்படி வீட்டிலேயே தயாரிக்கலாம்.
 • கொதிக்கவைத்து ஆறவைத்த ஒரு லிட்டர் சுத்தமான நீரில் ஒரு கைப்பிடி சர்க்கரை, மூன்று சிட்டிகை உப்பு, இரண்டு சிட்டிகை சோடா உப்பு, இளநீர் 100 மில்லி ஆகியவற்றைக் கலந்து கொள்ள வேண்டும். பேதி நிற்கும் வரை உபயோகிக்க வேண்டும்.
 • இத்தகைய கரைசல் மாவு, மருந்துக் கடைகளில் எலக்ட்ரால் மற்றும் எலக்ட்ரோபயான் என்ற பெயர்களில் கிடைக்கின்றன.
 • பேதியாகும் போது குழந்தையின் உச்சிக் குழி அமுங்கி இருத்தல், குழந்தை உணவு உண்ணாதிருத்தல், கண் சொருகிவிடுதல், வலிப்பு, அதிக ஜுரம், மூச்சு வேகமாக விடுதல், வயிறு உப்புதல் ஆகியவை இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

குழந்தைகளுக்கான சுகாதாரம் :


 • கைகளை சுத்தமான சோப்பு போட்டுக் கழுவிய பிறகுதான் குழந்தைக்குரிய உணவைத் தயாரிக்க வேண்டும். கொதிக்க வைத்து ஆறிய நீரைதான் உபயோகிக்க வேண்டும். சுத்தமான பாத்திரங்களையே பயன்படுத்த வேண்டும்.
 • புட்டிப்பால் கொடுத்தால் புட்டி, ரப்பர் சூப்பிகள் ஆகியவற்றைக் கொதிநீரில் போட்டு சுத்தப்படுத்திய பிறகே உபயோகிக்க வேண்டும். பாட்டிலில் மிஞ்சிய பாலை மீண்டும் உபயோகிக்கக் கூடாது.
 • குழந்தைகளைக் குளிப்பாட்டுவதற்கு மிருதுவான பேபி சோப்பை உபயோகிக்கலாம். சுத்தமான துணிகளையே உபயோகிக்க வேண்டும்.
 • குழந்தையைக் குளிப்பாட்டும் போது அதனுடைய மூக்கில் ஊதக்கூடாது. கண்கள் மற்றும் காதுகளில் எண்ணெய் ஊற்றக் கூடாது. குழந்தையின் தொண்டையில் இருந்து சளி எடுப்பதாகக் கூறி சுத்தமில்லாத விரல்களை குழந்தையின் வாயில் வைக்கக் கூடாது. குழந்தைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டக் கூடாது. குளிப்பாட்டியவுடன் புகைப்போடக் கூடாது.
 • குழந்தை சிறுநீர் மற்றும் மலம் கழித்தவுடன் சுத்தமான வேறு துணிகளை உடனுக்குடன் மாற்ற வேண்டும்.
 • குழந்தையின் கை நகங்களை வெட்டிவிட வேண்டும். அது வாயில் வைக்கும் பொருட்கள் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு அளிக்கும் உணவை மூடிவைத்து ஈ, பூச்சி ஆகியவற்றில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
 • குழந்தைக்கு உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுக்கக் கூடாது. ஜுரம் இருப்பவர்கள், இருமல் தும்மல் வரும்போது இரண்டு கைகளாலோ, கைக்குட்டையாலோ முகத்தைத் தவறாமல் மறைத்துக் கொள்ள வேண்டும்.
நன்றி : மருத்துவர் திரு .ஸ்டீபன் அவர்கள்..


Cute Parents ல் இன்றைய பதிவு : How To Stop Child's Lying Habitsமேலும் வாசிக்க

4/26/2012 by சம்பத்குமார் · 25

March 2, 2012

ஆப்பிள் வேண்டாமே...


நீ வைத்துச் சென்ற
ஆப்பிளை,என்னால்
ருசிக்க முடியாது.தனித்து,
மருந்து மாத்திரைகளோடு
கிடக்கும் என்னைப்
போலவே அதுவும்..!

நாளை விடைபெறும்
பக்கத்துப் படுக்கைக்காரன் வேறு
ஏளனமாய்ப் பார்க்கிறான்...!

மாற்றாமல் இருக்கிறார்கள் இன்னும்
மூத்திரச் சொட்டுகள் நிறைந்த
இந்தப் படுக்கை விரிப்பையும்
இடது கையைப்
பழக்கிக் கொண்டிருக்கின்றேன்
கையெழுத்துப் போடவும்...!வேலைக்குப் போ
சம்பாதி,பசியாறு
குடும்பத்தைக் காப்பாற்று
நாணப்படாமல் பக்கவாதம் வராத
யாரையாவது மணந்துகொள்
எனக்கு ஒன்றும் 
ஆட்சேபனையில்லை...!

மேலும்,அடுத்த முறை
ஆப்பிள் கொண்டுவர 
வேண்டாம்.

மாறாக,மை நிரம்பிய
ஒரு பேனாவுடன்
கெட்ட கனவுகள் அல்லாத
இரவுகளைக் கொண்டுவா – அந்த
சணல் காது கொண்ட
பிளாஸ்டிக் கூடையில்...!

நன்றி நண்பர்களே!  கவிதை பற்றிய உங்களது எண்ணங்களை மறக்காமல் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.


Cute Parents ல் இன்றைய பதிவு 


Top Ten Birthday Party Tips

மேலும் வாசிக்க

3/02/2012 by சம்பத்குமார் · 28

February 29, 2012

ஆங்கில அறிவை வளர்க்க டிப்ஸ்

வணக்கம் நண்பர்களே வலைச்சரப்பணி முடிந்து மீண்டுமொரு பதிவின் வழியே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.இன்றைய உலகமயமாக்கப்பட்ட காலகட்டத்தில் படிப்பு, வேலை, வியாபாரம் என அனைத்திற்கும் அடிப்படை ஆங்கிலம் என்ற நிலை உருவாகி விட்டது. ஆங்கிலம் தெரிந்திருப்பது உலகளாவிய நோக்கித்திலான எண்ணங்களையும், தன்னம்பிக்கையும் தரும். எந்த ஒரு மொழியையும் கற்பதில் என்றுமே தவறில்லை. சமுதாயாத்தில் பெரும்பாலும் யாருடன் தொடர்பு கொள்ளவும் ஆங்கில மொழி அத்தியாவசியமாக விட்டது. குறிப்பாக, வேலைக்கான நேர்காணலில் இன்றைய இளைய தலைமுறையினரில் பெரும்பாலும் திறமை இருந்தும், ஆங்கில மொழி தெரியாத ஒரே காரணத்தால் குறுகிப் போகின்றனர்.அந்த ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள எனக்கு தெரிந்த சில விஷயங்களை கீழே பகிர்ந்துள்ளேன்.பார்த்து படித்து விட்டு தங்களது எண்ணங்களை பகிர்ந்து விட்டுச் செல்லவும்

எந்தமொழியையும் எளிதில் கற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் கீழ்கண்டவற்றை உங்களது வாழ்வில் பயன்படுத்த துவங்குங்கள்... மாற்றம் உங்களைத்தேடி வரும்

 • ஆங்கிலம் ஒரு அன்னிய மொழி; நம்மால் படிக்க முடியாது... போன்ற எதிர்மறையான எண்ணங்களை முதலில் உங்களது மனதில் இருந்து முழுவதுமாக அகற்றிவிடுங்கள்.
 • தினமும் குறைந்தது முப்பது நிமிடங்களாவது ஆங்கிலம் நாளிதழ், சிறுகதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை வாசியுங்கள்.
 • ஆங்கிலத்தில் எழுத பழகுங்கள்... போதுமான வார்த்தை ஞானம் இல்லை என்றால் எந்தமொழியிலும் திறம்பட உங்களது கருத்துக்களை வெளியிட முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, முடிந்தவரை ஆங்கில வார்த்தைகளின் அர்த்தத்தை கற்றுக்கொள்ளுங்கள்.
 • நீங்கள் கேட்ட, வாசித்ததில் புரியாத வார்த்தகளை குறித்துக்கொண்டு அதற்கான அர்த்தங்களை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இதை ஒரு பழக்கமாகவே தொடருங்கள்.
 • தவறாகப் பேசு விடுவோமோ ? மற்றவர்கள் ஏளனத்திற்கு ஆளாகிவிடுவோமோ ? போன்ற எண்ணங்களை அடியோடு தகர்ந்தெரிந்துவிட்டு ஆங்கிலத்தில் பேசப் பழகுங்கள்.

 • ஆங்கில டி.வி செய்தி சேனல்களை பாருங்கள். இந்திய ஆங்கில மொழி உச்சரிப்பை அறிந்துகொள்ள என்.டி.டி.வி போன்ற இந்திய ஆங்கில செய்தி சேனல்களையும் பார்க்கலாம்.
 • தனிமையில் உங்களது கருத்துக்களை ஆங்கிலத்தில் பேசி, அதை ரெக்கார்டு செய்துகொள்ளுங்கள். பின், அதை நீங்களே கேட்டு வார்த்தை உச்சரிப்பில் உள்ள தவறுகளை அறிந்து, அடுத்தமுறை அதனை தவிர்க்க பயிற்சி பெறுங்கள்.
 • எந்த ஒரு மொழிக்கும் இலக்கணம் அவசியம். பேசும்திறன், காலங்கள், வினைச் சொற்கள் போன்றவை ஒரு மொழியில் முக்கியத்துவம் பெறுகின்றன. அவற்றை முழு ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள முயலுங்கள்.
 • ‘டிக்ஸ்னரி’ (ஆங்கில அகராதி)யை உங்களது அபிமான நண்பராக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் குறிப்பெடுக்கும் வார்த்தைக்கான விளக்கத்தை டிக்ஸ்னரி உதவியுடன் அறிந்து கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை உங்களது தகவல் தொடர்பில் தொடர்ந்து பயன்படுத்துங்கள்.
 • ஆங்கில மொழியில் புலமை பெற்ற ஒருவரை ஆங்கில நாளிதழை சத்தமாக வாசிக்க சொல்லி, அவர் எவ்வாறு உச்சரிக்கிறார் என்பதை கூர்ந்து கவனியுங்கள்.
 • டைரி எழுவதை உங்களது பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அதனை நீங்கள் மட்டுமே பயன்படுத்துவதால், தவறாக எழுதிவிடுவோமோ என்ற பயம் உங்களுக்கு பெரும்பாலும் இருக்காது. தினமும் நூறு வார்த்தைகளாவது தயக்கமின்றி எழுதுங்கள்.
இவை அனைத்தையும் உங்களது ஆர்வத்தின் அடிப்படையில் மட்டுமே மிகச் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்பதை அடிமனதில் பதிந்துகொண்டு, பயிற்சி பெறுங்கள். ஆங்கிலம் என்பது கற்க முடியாத மொழி அல்லவே.


நன்றி நண்பர்களே டிப்ஸ் பற்றிய உங்கள் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.

மேலும் வாசிக்க

2/29/2012 by சம்பத்குமார் · 19

February 19, 2012

டியர் பேரண்ட்ஸ்
வணக்கம் நண்பர்களே ! தமிழ் வலையுலகில் கடந்த ஜூலை 2011 ல் பதிவெழுத ஆரம்பித்து இன்று வரை எழுத்துப்பணியை தொடர்ந்து கொண்டிருக்கின்றேன்.இனி பதிவுலகில் அடுத்த கட்ட முயற்சியாக பதிவுலகத்தின் பின்னூட்டப் பிதாமகன் திரு.சீனா ஐயா அவர்களால் நிர்வாகிக்கபட்டு வரும் வலைச்சரத்தின் இந்த வார (20.02.2012 முதல் 26.02.2012) ஆசிரியர் பொறுப்பினை ஏற்கவிருப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.இந்த வாய்பினை நல்கிய அவருக்கும் அவரது குழுவில் இருக்கும் நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் மற்றும் தமிழ்பிரியன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
இதுவரை தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.அன்பர்கள், நண்பர்கள், மற்றும் வாசகர்கள் அனைவரும் தவறாது வலைச்சரம் வந்து ஆதரவளிக்க அன்போடு அழைக்கின்றேன்.

வலைச்சரத்திற்க்கு செல்ல இங்கே க்ளிக்கவும்

நன்றியுடன்

சம்பத்குமார்

மேலும் வாசிக்க

2/19/2012 by சம்பத்குமார் · 15

;